ஜாமியா நளீமியா பற்றி ஞானசார தேரர் அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படைகள் அற்றவை

January 24, 2020
1,226 Views

இந்நாட்டில் வாழ்கின்ற சமூகங்களில் கல்வி ரீதியாக மிகவும் பின்னடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. இந்த இடைவெளியை நிரப்புகின்ற பலதரப்புகளில் ஒன்றாக நளீமியா கலாபீடம் காணப்படுகின்றது.

மார்க்கக் கல்வியையும், அரசாங்கத்தின் பல்கலைக்கழகக் கல்வியையும், உயர்ந்த பண்பாடுகளையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கிய அதன் கல்வித் திட்டம் இந்த நாட்டிற்கு நற்பிரஜைகளை உருவாக்குவதில் ஜாமியா பெரும் பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.

இந்த வகையில் தான் நாட்டின் பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் நளீமியா பட்டதாரிகள் சிறந்த முன்னுதாரணம் உள்ளவர்களாகவும், தமது பதவியை துஷ்பிரயோகம் செய்யாதவர்களாகவும், ஊழலற்ற சிறந்த நிர்வாகிகளாகவும் இன்று வரை செயற்பட்டு வருகின்றனர். ஞானசார தேரர் குற்றம் சாட்டுவது போன்று அல்லாமல் நளீமியா கலாபீட பட்டதாரிகள் கலாபீடத்தில் கல்வி பயின்று, தமது பட்டப்படிப்பை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்து, அரச ஆட்சேர்பின் முறையான, நேர்மையான வழிமுறைகளினூடான உள்வாங்கப்பட்டே தமது பணிகளை ஆற்றி வருகின்றனர்.

இவ்வாறான நேர்மையான கல்வி, பண்பாட்டு பின்புலத்தில் உள்ளவர்களை முறையற்ற வகையில் குற்றம் சாட்டுவதும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனப் பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளாகும். அது மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் இளைஞர்களையும் தாம் கற்ற கல்வியினூடாக தீவிர சிந்தனையற்ற நடுநிலையான போக்கை வலியுறுத்தி வழிகாட்டி வரும் நளீமியா கலாபீடத்தை அடிப்படைவாதத்தின் தோற்றுவாய் எனக் குறிப்பிடும் ஞானசார தேரர் அவர்களின் கருத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்கின்றது.

இந்த இடத்தில் ஞானசார தேரர் அவர்கள் நளீமியா கலாபீடத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அதன் உண்மைத் தன்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டுமென இங்கு நாம் அவருக்கு ஆலோசனை வழங்குகின்றோம்.

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஊடாக எதனை சொல்ல வருகின்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஞானசார தேரரின் நளீமியா கலாபீடத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு கலாபீடத்தின் நிர்வாகத்தினரும், பட்டதாரிகளும் உரிய வழிமுறைகளினூடாக தெளிவை வழங்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளனர் என்பதை இங்கு குறிப்பட விரும்புகின்றோம்.

Leave A Comment