கைகோர்த்து செயற்படுவோம்.
2020ம் ஆண்டு பிறந்திருக்கும் இத்தருணம் இலங்கை வாழ் மக்களாகிய எமக்கு மிக முக்கியமானது. ஏப்ரல் தாக்குதலினால் ஏற்பட்ட வடு இன்னும் காயாத நிலையிலேயே இவ்வருடம் பிறந்திருக்கின்றது. இதற்கிடையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள், நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
பத்து அம்சக் கொள்கைகளை முன்வைத்து ஜனாதிபதி அவர்கள் தனது பணிகளை முன்னெடுத்துள்ளார். இவை தேசிய மட்டத்திலும், ஊர் மட்டங்களிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் உண்மையான பயனை நாட்டு மக்கள் அறுவடை செய்ய வேண்டும். அதற்காக மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இந்நாட்டில் இயங்குகின்ற சிவில், நலன்புரி, சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் தங்களது பணிகளையும் இதற்கேற்றவாறு அமைத்துக் கொள்ளும் போது விளைவுகளை இன்னும் அதிகமாகக் காணலாம்.
சமூக சீர்திருத்தம், நாட்டை வளப்படுத்தல் என்பது ஒரு தரப்பால் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான பணியல்ல. அரச இயந்திரத்துடன் இணைந்த வகையில் சிவில் செயற்பாடுகளும் அமைவது முக்கியமானது. நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொரும் இதன் பங்காளிகளாக மாற வேண்டும்.
ஆக்கபூர்வமான விமர்சனம், நல்ல பணிகளைப் பாராட்டல், அதன் விளைவுகளை அடைவதற்காக ஒத்துழைத்தல் என்பன எமக்கு மத்தியில் வளர வேண்டிய பண்புகளாக உள்ளன. அனைத்தையும் விமர்சித்தல் என்ற நிலையில் இல்லாது தவறுகளை சுட்டிக் காட்டி, ஒன்றாகப் பயணிக்கும் கலாச்சாரம் பலப்பட வேண்டும். அப்போதுதான் நாம் அனைவருமாக ஒன்றிணைந்து இந்நாட்டை வளப்படுத்த முடியும்.
அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்,
தலைவர், ஸலாமா சொஸைடி.