Condolence Message – Marhoom Ash-Sheikh M.M.A. Mubarak

October 28, 2020
813 Views

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க். எம். எம். ஏ முபாரக் (மதனி) அவர்களின் மரணச் செய்தி மிகுந்த மனத்துயரைத் தருகின்றது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஹஸ்ரத் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் மர்ஹ§ம் உஸ்தாத் அஷ்ஷெய்க் அஹமத் முபாரக் பின் முஹம்மத் மக்தூம் ஹஸ்ரத் அவர்கள் நாட்டின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவர். அவர் சிவில் சமூகத் தலைவராக மதிக்கப்பட்டவர். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் தலைவராகவும், மரணிக்கும் வரை அதன் பொதுச் செயலாளராகவும் கடைமையாற்றியவர். குறிப்பிட்ட சில காலம் ஜாமியா நளீமியாவின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக்கல்லூரியில் நீண்ட நெடுங்காலம்; அதிபராக இருந்து சன்மார்க்க சேவை செய்தவர். அவர் பன்முக ஆளுமை கொண்ட ஒரு இஸ்லாமிய அழைப்பாளராக நாட்டிற்கும் சமூகத்திறகும் அருந் தொண்டாற்றியவர். பலநூறு மாணவர்களின் கண்ணியத்திற்குரிய ஹஸ்ரத் அவர்களின் வபாஃத் செய்தி பெரும் துயரத்தையும் வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் அவரது இழப்பு வேதனை தருகிறது.

இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கான மேற்பார்வையாளாரக இருந்து அழைப்பாளர்களை நடுநிலை சிந்தனை வழியில் நெறிப்படுத்திய ஹஸ்ரத் அவர்கள், அழைப்புப் பணியில் அயராது அல்லும் பகலும் உழைத்தவர். அவர் அனைத்து தஃவா சிந்தனை முகாம்களுடனும் எத்தகைய இயக்க வேறுபாடுகளும் இல்லாது இயல்பாக பழகிய பண்பாளர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய விரிந்த உள்ளம் கொண்டவர். தேசிய ஷூறா சபையை உருவாக்குவதில் அக்கறையோடும் மிகுந்த ஆர்வத்தோடும் ஈடுபாடுகாட்டியவர் என்பதை யாரும் மறக்கமாட்டார்கள். வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் கொண்டோர் மத்தியில் நிதானமான அணுகுமுறையைக் கைக்கொண்டு உழைத்தவர்.

எப்போதும் சிரித்த முகத்துடன், வயது வேறுபாடு பார்க்காமல் மிக இயல்பாகப் பழகும் பணிவு அவரின் சிறப்பியல்பாகும். அவரின் புன்முறுவலுடன் கூடிய உரையாடல், கனிவான பேச்சு, எளிமை போன்ற உயர் பண்புகளால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட ஆசான் ஆவார்கள். அவருடன் பழகிய எவரும் அண்ணாரை துடிப்பும் செயல்முனைப்பும் கொண்ட செயற்பாட்டாளர் என்பதை மறுக்க மாட்டார்கள். தனது கள அனுபவங்களை அடிக்கடி பரிமாறிக் கொள்வதன் மூலம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது தூய இஸ்லாமிய தஃவா பணிகளையும் மற்றும் சமுக, தேசிய செயற்பாடுகளையும் நற்கருமங்களையும் அங்கீகரித்து குற்றம் குறைகளை மன்னித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக! அவரது பிரிவால் வாடும் மனைவி மக்கள் அனைவருக்கும் மன அமைதியையும் பொறுமையையும் வழங்குவானாக!

ஆஸாத் அப்துல் முயீத்
தலைவர்
ஸலாமா சொஸைட்டி
28-10-2020

Leave A Comment