– எம். எச். எம். நாளிர் –
பகுதி 16
- சமூக இயைவு : இளமைக் காலம் முதல் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட நல்ல பண்புகள் சமூகத்தில் அவருக்கு நல்லதோர் அபிமானத்தை ஏற்படுத்தியிருந்தன. அல் அமீன் எனவும் அஸ்ஸாதிக் எனவும் பாராட்டிய நற்பெயர், நுபுவ்வத் கிடைத்த பின்பும் சமூக இசைவை மறுதலிக்கவில்லை. கதீஜா (ரழி) அவர்களை மணந்தமை, கஃபாவில் ஹஜருல் அஸ்வதைப் பதிப்பதில் ஏற்பட்ட சிக்கலை அவிழ்ப்பதற்காக அடுத்த நாள் எடுக்கப்படவிருந்த தீர்ப்பை காணவிழைந்த போது, விடயமறியாத நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வாயில் வழியாக நுழைவதைக் கண்டதும் ‘அதோ அல் அமீன் வருகிறார்’ என பிரமுகர்கள் மகிழ்ந்தமை, முதல் வஹீ இறங்கிய போது, கதீஜா (ரழி) அவர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் (இக்கட்டுரையில் பின்னர் அவை விளக்கப்படும்), ஸபா குன்றில் பிரசாரத்தை ஆரம்பித்த போது பீடிகையாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு கூடியிருந்தோர் ‘நம்புவோம்’ என்று ஏகமனதாகக் கொடுத்த விடை (இக்கட்டுரையில் பின்னர் அவை விளக்கப்படும்), மக்கா வெற்றியின் போது கைதிகள் போல சூழ்ந்து நின்ற மக்களிடம் நீங்கள் என்னிடம் எதனை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்ட போது, நீங்கள் உயர்ந்த தந்தைக்குப் பிறந்த உயர்ந்த மகன் எனக்கூறிய நம்பிக்கை வாசகம், பரம எதிரியாக இருந்த அபூஜஹ்ல் கூட, ‘முஹம்மதே நாம் உம்மைப் பொய்ப்பிக்கவில்லை; நீ கொண்டு வந்த மார்க்கத்தையே பொய்ப்பிக்கின்றோம் (திர்மிதீ) என்று கூறியமை ஆகிய அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் சமூக இசைவைப் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.
- வசீகரமான குரல் : ஓர் இறைதூதரைப் பொறுத்தவரை அவர் ஒரு போதகர்; பிரசாரகர் என்ற வகையில் குரல் வளம் முக்கியமானது. இதனை அல்குர்ஆன் மூஸா (அலை) அவர்களின் முறைப்பாடாக (21:13) சுட்டிக்காட்டுகின்றது. மட்டுமன்றி ‘என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக, என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படி செய்வாயாக. (20:27-28) என்று அவர் பிரார்த்தனை செய்ததையும் எடுத்துக்காட்டுகின்றது. ஸூறா லுக்மான், உன்னுடைய சத்தத்தை தாழ்த்திக் கொள்; சத்தங்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரல் எனவும் எச்சரிக்கின்றது.
ஆதலால் அல்லாஹ் தனது இறுதித் தூதரின் குரல் வளத்தை அழகு படுத்தினான். சிறுவர் முதல் பெரியோர் வரை அவர்களைச் சந்தித்த அனைவரும் வசப்பட்டனர். இனிமையாக, நளினமாக, சூழ்நிலைக்குப் பொருத்தமாக நடுநிலையில் நின்று உரையாடுகின்ற குரல்வளம் அவர்களிடம் காணப்பட்டது. நண்பர்கள் மட்டுமன்றி எதிரிகள் கூட அவரது உரையை சுவைக்க மொழி நடையும் குரல்வளமும் காரணமாக அமைந்தது என்பதற்கு அவரோடு உரையாட வந்த வலீத் பின் முகைறாவின் சாட்சியம் சான்றாக அமைகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் உம்மை மயக்கிவிட்டார் என்று அபூஜஹ்ல் போன்றவர்கள் கூறுமளவு வலீதின் பாராட்டுதல் அமைந்திருந்தது.
மதீனாவில் வாழ்ந்த யூதர்கள், அவ்ஸ் – கஸ்ரஜ்களை மோதவிட்டு, வட்டிக்குப் பணம் கொடுத்தும், போருக்கு ஆயுதம் வழங்கியும் வருமானம் பெற்று வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இரு சாராரும் ஒற்றுமைப்பட்டதால் அவர்கள் நட்டமடைந்தனர். இது கண்டு வெதும்பிய ஷாஸ் பின் கைஸ் என்ற யூதன் ஒரு வாலிபனைத் தூண்டிவிட்டான். புஆஸ் போரில் (அவ்ஸ் கஸ்ரஜ்களிடையே நிகழ்ந்த கடைசிப் போர்) பாடப்பட்ட போர்க் கவிதைகளை இரு சாராரும் கலந்திருந்த ஓரிடத்தில் அவன் பாட இரு சாராரும் வாய்ச் சண்டையில் தொடங்கி வாளையும் உருவினர். மதீனாவுக்கு வெளியே ஹர்ராவில் போரிடவும் துணிந்தனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும் விரைந்து வந்த அவர்கள், ‘முஸ்லிம்களே, அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்’ என குரல் கொடுத்தார்கள். ‘நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும் போதே ஜாஹிலிய்யாக் கால வாதங்களை மீட்டிக் கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களை குப்ரிலிருந்து பாதுகாத்து உங்களுக்கு மத்தியில் அன்பை உருவாக்கிய பின்புமா நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள்?’ என்று அறிவுரை பகர்ந்தார்கள். தமது தவறை உணர்ந்த இரு சாராரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அழ ஆரம்பித்தார்கள். நடக்கவிருந்த போராட்டத்தை நபியவர்களின் வசீகரமான குரல் அப்படியே அடக்கிவிட்டது.
தொடரும்…





