முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் (பகுதி 15)

August 22, 2023
628 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி 15 ….

  1. ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன் : நபி (ஸல்) அவர்களும் முஹாஜிரீன்களும் மதீனாவில் அகதிகள் போல தஞ்சமடைகிறார்கள். தம்மை நம்பி வந்த முஹாஜிரீன்களை வாழ வைப்பது, திருப்திப்படுத்துவது நபி (ஸல்) அவர்களின் முதற்பணியாக அமைந்தது. கூடவே புதிய சுவாத்தியம் இசைவாக்கம் பெறாத நிலையில் பலர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் தான் முஹாஜிரீன்களையும், அன்ஸாரீன்களையும் சகோதரர்களாக – சோடிகளாக அமைத்து அன்ஸாரீன்களின் உதவியை முஹாஜிரீன்கள் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டியிருந்தது. இது புதியதோர் அணுகுமுறையாகவும் ஆக்க முயற்சியாகவும் அமைந்தது. தொடர்ந்து யூதர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு மதீனாவின் சமூக அரசியல் தலைமையை ஏற்று முஸ்லிம் தேசியம் ஒன்றிற்காக அத்திபாரமிடப்பட்டது.
  2. தன்னம்பிக்கை : நுபுவ்வத் பத்தாமாண்டு, நபி (ஸல்) அவர்களுக்கு சோதனைக்குரிய ஆண்டாக அமைந்தது. சமூக பகிஷ்கரிப்பிலிருந்து விடுதலை பெற்ற அடுத்த கணம் தமது பாதுகாவலர் போன்று செயற்பட்ட அபூதாலிப் அவர்களும், கதீஜா (ரழி) அவர்களும் மரணித்துவிடுகிறார்கள். இதனால் எதிரிகளின் கொடுமைகளும் அதிகரித்தன. இந்நிலையில் மக்காவுக்கு வெளியே இஸ்லாத்தை எத்திவைப்பதற்காக வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிதா (ரழி) வுடன் தாயிப் செல்கின்றார்கள். பிறந்து வளர்ந்த நாட்டில் சொந்த பந்தங்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் தஃவாவைச் சுமந்து கொண்டு முதன்முறையாக வெளியே சென்றமை அவர்களது தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாகும்.

எனினும் அவர்கள் சந்தித்த மூன்று பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஏவிவிடப்பட்ட குண்டர்களால் தாக்கப்பட்டு காயப்பட்ட போதும் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அந்த மக்களைத் தண்டிப்பதற்காக ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி அனுமதி கேட்ட போதும் அதற்கு இசையாமல், ‘இவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இவர்களின் சந்ததியாவது ஏற்றுக் கொள்வர்’ என்று சொன்ன பதில், தான் சுமந்து வந்துள்ள மார்க்கம் நிலைபெறும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த உறுதிப்பாடும், மீண்டும் மக்கா திரும்பி முத்இம் பின் அதீ என்பாரின் அபயத்தில் பணியைத் தொடர்ந்ததும், மாற்று வழிமுறையொன்றைத் (மதீனாவுடன் தொடர்பு கொள்ளல்) தெரிந்து கொண்டதும் அவரது தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாகும்.

நபி (ஸல்) அவர்களின் ஆளுமையில் காணப்பட்ட

  1. வசீகரிக்கும் தன்மை
  2. சினேக மனப்பான்மை
  3. முகமலர்ச்சி போன்றவற்றை ஷமாயிலுத் திர்மிதி எனும் நூல் எடுத்துக் காட்டுகின்றது. அதனைத் தழுவி முஹம்மத் மூஸா என்பவர் தமிழில் தந்த ‘அண்ணல் எங்கள் ஆருயிர்’ எனும் நூல் அவற்றைப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.

 நபி (ஸல்) அவர்கள் கலகலவென்று வாய்விட்டுச் சிரிக்க மாட்டார்கள், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருப்பார்கள். அவர்களை விட அதிகமாக புன்னகைக்கும் ஒருவரை நான் கண்டதில்லை என்று அப்துல்லா இப்னு ஹாலித் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் தமது முன்பற்கள் மாத்திரம் தெரியுமாறு சிரிப்பார்கள்.

உரையாற்றும் போது அப்பக்கமும் இப்பக்கமுமாகத் திரும்புவார்கள். மேடை மீதோ, ஒட்டகத்தின் மீதோ ஏறி நின்றும் உரையாற்றுவார்கள். ஒரு விடயத்தை அழுத்திச் சொல்ல விரும்பினால், ‘எவன் கைவசம் என் ஆத்மா இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக’ என்று குறிப்பிடுவார்கள். மக்கள் அலுத்துப் போகுமளவு தினமும் உரையாற்ற மாட்டார்கள். மறுமைப்பற்றி பேசும் போது மக்கள் அலுப்படைவதை உணர்ந்தால் உலக விடயங்கள் பற்றிப் பேசுவார்கள். அலுப்பு நீங்கி உற்சாகமடைந்தால் மீண்டும் தொடர்வார்கள். இடையில் எவரேனும் கேள்வி கேட்டால், பேசி முடிந்ததும் பதில் சொல்வார்கள். பேசும் போது எல்லோரிடமும் தமது பார்வையைச் செலுத்துவார்கள். இதனால் எல்லோரும் திருப்தியடைவார்கள்.

எவரேனும் புதிய ஆடை அணிந்திருக்கக் கண்டால் ‘நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது’ என மகிழ்வைத் தெரிவிப்பார்கள். அவர்களது உடம்பில் ஏதேனும் ஒட்டியிருந்து அதனை எவரேனும் தட்டிவிட்டால் அதற்காக நன்றி தெரிவிப்பார்கள். உங்களிடமிருந்து உங்களுக்கு விருப்பமில்லாததை அல்லாஹ் நீக்கி விடுவானாக என்று பிரார்த்திப்பார்கள். எவரேனும் தமது தேவையை முறையிட்டால் தம்மாலான உதவியைச் செய்து கொடுப்பார்கள். எவரேனும் ஒரு விடயத்தைக் கூறிக் கொண்டிருந்தால், அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக எழுந்து செல்ல மாட்டார்கள்.

அவர்கள் சிறுவர்கள் மீது அதிக அன்பு வைத்திருந்தார்கள். தெருவில் காணும் சிறுவர்களுக்கெல்லாம் ஸலாம் கூறுவார்கள். அவர்களைத் தனது வாகனத்தில் தூக்கி வைத்துக் கொள்வார்கள். சிறுவர்களைப் போன்;றே முதியவர்களையும் கௌரவித்தார்கள். நோயாளர்களைக் கண்டு நலம் விசாரித்தார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்குமாறும், அது அவர்களுக்கு ஆறுதலளிக்குமென்றும் கூறுவார்கள். நோயாளர்களிருக்கும் இடங்களில் சப்தமிடக்கூடாது என அறிவுரை பகர்வார்கள். ஊழியர்களுடன் அன்பாக நடந்து கொள்வார்கள். பணியாளர்களை தினமும் எழுபது முறை மன்னிக்க வேண்டுமென்று ஒருவரின் வினாவுக்கு விடையாகச் சொன்னார்கள்.

எதையும் மிருதுவாக அணுகுவார்கள். மிருதுவான சொற்களையே பயன்படுத்துவார்கள். தவறைக் கண்டால் நீங்கள் செய்வது தவறென நேரடியாக கூற மாட்டார்கள். ‘மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ எனக் கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள்.

ஒருவர் மீது அன்பு கொண்டால், எனக்கு உங்களை நிரம்பப் பிடித்திருக்கின்றது நான் உங்களை நேசிக்கின்றேன் எனக் கூறுவார்கள். அவரது பெயரையும் தந்தையின் பெயரையும் கேட்டறிந்து கொள்வார்கள். அது நட்பு வளர்வதற்கு உதவும் என்பார்கள்.

தொடரும்…

Leave A Comment