திருமணத்தின் நோக்கங்கள் (மகாஸிதுகள்) (3)

August 15, 2023
991 Views
  • அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

குடும்பப் பரம்பரையின் நற்பெயரைப் பாதுகாத்தல்

குடும்பப் பரம்பரை, அதன் நற்பெயரைப் பாதுகாத்தல் திருமணத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமண வாழ்வில் இணைவதன் மூலமே குடும்ப வாழ்வு ஆரம்பிக்கின்றது. இவர்களுக்குக் கிடைக்கும் சந்ததிகள் மூலம் மனித இனம் பாதுகாக்கப்படுகின்றது. பிறக்கக்கூடிய ஒவ்வொரு பிள்ளையும் தனது தாய் யார், தந்தை யார் என்பதை தெளிவாக தெரிந்திருத்தல் அவசியமாகும்.

ஏனெனில் இதன் அடிப்படையிலிருந்து பல்வேறு சட்டங்கள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு உதாரணமாக பாதுகாவலர், செலவளித்தல், மஹ்ரமி, அஜ்னபி, சொத்துப்பங்கீடு போன்ற பல்வேறு நடைமுறைச் சட்டங்களைக் குறிப்பிடலாம்.  

இப்பின்னணியில் தான் இத்தாக் காலத்தில் இருக்கின்ற பெண், தனது கர்ப்பத்தில் உள்ள உண்மை நிலையை மறைக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ‘விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலமாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர்களாயின், தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல’ (பகரா: 228)

குடும்பப் பரம்பரையின் நற்பெயரை பல அம்சங்கள் கலங்கப்படுத்துகின்றன. அவற்றில் விபச்சாரம் பிரதானமானது. தந்தை யார், தாய் யார் என அறியாத பிள்ளைகள் இத்தீய செயலால் பிறக்கின்றனர். விபச்சாரத்தினால் பல்வேறு ஆட்கொள்ளி நோய்கள் உருவாகியுள்ளன. இத்தீய செயலானது குடும்பக் கட்டமைப்பை மாத்திரமல்ல, சமூகக் கட்டமைப்பையும் அழிக்கும் அளவுக்கு பாரதூரமானது.

குடும்ப உறவுகள் தொடர்பான மற்றுமொரு விடயம் தத்தெடுத்தல் பற்றிய சட்டங்களாகும். இது தொடர்பில் இஸ்லாம் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. பிள்ளையை அதன் உண்மையான தந்தைக்கு இணைத்துச் சொல்லுமாறு அல்குர்ஆன் வலியுறுத்திக் கூறுகின்றது.

‘(அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும் , அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின் , அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும் , உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும் , மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்’ (அஹ்ஸாப் : 4-5)

கற்பைப் பாதுகாத்தல்

மனிதன் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வது திருமணத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொரு இலக்காகும். உண்மையான மனிதன் தனது சுய கௌரவம், கற்பைப் பாதுகாத்து  தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்.

எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தனது மனோ இச்சைகளுக்கு இடம் கொடுத்து வாழாமல், அவற்றை திருமணத்தின் மூலம் நெறிப்படுத்தி, தனது வாழ்வை அவன் ஒழுங்குபடுத்திக் கொள்வான்.

பெண் என்பவள் ஆணைப் போன்று உயர்ந்த ஒரு சிருஷ்டி. ஆண்களைப் போன்று அவளுக்கும் உரிமைகள், கடமைகள் உள்ளன. அவள் மதிக்கப்பட வேண்டியவள். அவளின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். தாயாக, சகோதரியாக, மகளாக, மனைவியாக என பல பாத்திரங்களை வகிக்கக்கூடிய ஒருவளாகவே இஸ்லாம் அவளைப் பார்க்கின்றது.

ஆனால் இன்றைய உலகில் மனிதன் தனது மானத்தைப் பாதுகாப்பது சவாலுக்குறியதாக மாறியுள்ளது. ஒழுக்கமற்ற, வெட்கம் குறைந்த சமூகத்தைத் தோற்றுவிப்பதில் பல திட்டங்கள் அமுலாகி வருகின்றது. விபச்சாரத்தைத் தூண்டும் வகையில் பெண்கள் இன்று காட்சிப்படுத்தப்படுகின்றனர். இது போன்ற அநாகரிகமான வேலைகளால் வருடாந்தம் சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் இலாபமீட்டப்படுகின்றது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய பாவங்களைத் தூண்டும் சூழலில் வாழக்கூடிய வாலிபர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு அழகாக வழிகாட்டியுள்ளார்கள் ‘ வாலிபர்களே, திருமணம் முடிக்க சக்தியுள்ளவர்கள் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். ஏனெனில் அது பார்வையை தாழ்த்தும். கற்பைப் பாதுகாக்கும்’ (புஹாரி, முஸ்லிம்)

மன்னன் ஹிரகல் அபூ சுப்யானிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வினவிய போது அபூ சுப்யான் கூறிய பதிலில் கற்பைப் பாதுகாத்தலுக்கு இஸ்லாம் அன்று முதல் வழங்கி வருகின்ற முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்படுகின்றது. ‘அவர் (நபியவர்கள்) எமக்கு தொழுமாறும், ஸகதா செய்யுமாறும் ஏவுகின்றார். மற்றும் கற்போடு நடந்து கொள்ளுமாறும், இனபந்து உறவுகளைப் பேணி வாழுமாறும் போதிக்கின்றார்’ (புஹாரி, முஸ்லிம்)

Leave A Comment