– எம். எச். எம். நாளிர் –
பகுதி 14
4. தலைமைத்துவம் : இது ஆசிரியரிடம் காணப்பட வேண்டிய பண்பு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மிக இக்கட்டான சந்தர்ப்பங்களில் இப்பண்பை கட்டிக்காப்பது மிகச் சிரமமானது. இங்கு நபி (ஸல்) அவர்கள் கையாண்ட வழிமுறையொன்றை அவதானிப்போம்.
நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகைக்கு முன்னர், மதீனாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருந்த அப்துல்லா இப்னு உபை, நபி (ஸல்) அவர்களின் வருகை காரணமாக அந்த வாய்ப்பை இழந்தான். இதனால் நபி (ஸல்) அவர்கள் மீது வெறுப்படைந்த இப்னு உபை, இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் நயவஞ்சகராகவே (முனாபிக்) நடந்து கொண்டான்.
நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பலமிழக்கச் செய்வதிலும், அவர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றும் முயற்சியிலும் தீவிர கவனம் செலுத்தினான். அவனுக்குப் பின்னணியில் பலர் இருந்தனர். அவனது சதித்திட்டங்களில் ஒன்று, ஒளஸ்களையும் – கஸ்ரஜ்களையும் தனக்குள் மோதவிடுவதாகும். எனினும் நபி (ஸல்) அவர்களின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டது. (இது பற்றிய விளக்கம் பின்னர் காணப்படும்) இதனால் ஆத்திரமடைந்த இப்னு உபை, மற்றொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான்.
பனீ முஸ்தலிக் போர் முடிவடைந்த தறுவாயில், நாம் மதீனா திரும்பினால் ‘கண்ணியமானவர் இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்’ எனக் கூறினான். இதைச் செவியேற்ற ஸைத் பின் அர்கம் என்ற சிறுவன், தனது சிறிய தந்தையிடம் முறையிட்டான். அவர், அதனை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிடுகிறார். இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள், ‘அவனைக் கொள்வதற்கு உத்தரவு தாருங்கள்’ எனப் பொங்கி எழுந்தார்கள். அவ்வேளை, நபி (ஸல்) அவர்களோ, ‘முஹம்மத் (ஸல்) தனது தோழர்களைக் கொலை செய்கிறார் என மக்கள் கதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்’ எனக் கூறி அமைதிப்படுத்தினார்கள்.
அங்கிருந்த அனைவரையும் உடனடியாக மதீனாவை நோக்கி புறப்படுமாறு அறிவித்தல் கொடுத்தார்கள். வழமைக்கு மாறாக, பகல் பொழுதில் புறப்படச் சொன்னமை ஸஹாபாக்களை ஆச்சரியத்துக்குட்படுத்தியது. அடுத்த நாள் பகல் வரை பயணம் தொடர்ந்து ஓய்வுக்காக அனுமதி வழங்கிய போது அனைவரும் களைப்பால் உறங்கி விட்டார்கள். இப்னு உபையின் வார்த்தை பற்றி சகாக்கள் கருத்துப் பரிமாறுவதற்கு இடமளிக்காமல் தவிர்ப்பதற்காகவே இந்தத் தொடர் பயணம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் விசயமறிந்த இப்னு உபை, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் அப்படிக் கூறவில்லை என மறுப்புத் தெரிவித்தான். சிறுவன் விடயமறியாமல் கூறியிருப்பான் என ஏனையோரை நம்பச் செய்தான். அவ்வேளை வஹி (63:1-8) உண்மை நிலையை எடுத்துக் கூறியது.
இதனைக் கேள்வியுற்ற இப்னு உபையின் மகன், தந்தையிடமிருந்து பிரிந்து, மதீனாவின் நுழைவாயிலுக்கு விரைந்தார் ‘நபி (ஸல்) அவர்கள் அனுமதி தந்தாலன்றி தந்தையை மதீனாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்’ என உருவிய வாளுடன் நின்றார். நபி (ஸல்) அவர்களின் அனுமதி கிடைத்த பின்பே தந்தையை உள்ளே நுழைய இடமளித்தார். பின்னர், நபி (ஸல்) அவர்களை அணுகி, ‘தந்தையைக் கொல்லுமாறு தாங்கள் உத்தரவிடுவதாயின், அதைத் தனது பொறுப்பில் விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அபாண்டம் சுமத்திய விவகாரத்திலும் இப்னு உபைக்கு பங்குண்டு. எனினும் ஏனையோருக்கு தண்டனை வழங்கிய நபி (ஸல்) அவர்கள் இப்னு உபையை விட்டுவிட்டார்கள். பின்னர், (உமர் (ரழி) அவர்களை விளித்து) ‘உமரே, நீ அன்று கூறியவாறு இப்னு உபையை கொலை செய்திருந்தால் அவரது கூட்டத்தினர் எம்மீது கோபம் கொண்டிருப்பார்கள். இன்றோ, நான் கட்டளையிட்டால், அவர்களின் கூட்டத்தவர்களே அவனைக் கொலை செய்து விடுவார்கள்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதருடைய செயல், எனது செயலை விட நேர்த்தியானதென தெரிந்து கொண்டேன்’ என்றார்கள்.
இங்கு, தலைவரொருவர், புறனடையான ஒருவரை, ஏனையோர் தொடர்புறாமல் – பழி வாங்காமல் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமையும் வரை குழப்பிக் கொள்ளாமல் நிதானமாக தன்னையும், சமூகத்தையும் வழிநடத்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கதல்லவா?
தொடரும்…





