திருமண வாழ்க்கையின் நோக்கங்கள் (மகாஸிதுகள்) – (2)

July 10, 2023
676 Views
  • அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

பாலியல் தேவைகளை நிறைவேற்றல்.

அல்லாஹ் மனிதனிடத்தில் பல்வேறு உணர்வுகளைப் படைத்துள்ளான். அவற்றில் பாலியல் தேவையும் ஒன்றாகும். இதன் அடையாளமாக ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் விரும்புகின்ற உணர்வை மனிதர்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

மனிதனிடத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பாலியல் தேவை இருப்பதனால் தான் மானுட சமூகத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் பிள்ளைகள் பெற்று மனிதப் பரம்பரை ஆரம்பமாவதற்கு இப்பாலியல் தேவையின் தூண்டுதல் காரணியாய் அமைந்தது.

மனிதனல்லாத படைப்புகளும் தமது பாலியல் தேவைகளை தீர்த்துக் கொள்வதற்கான உணர்வை அல்லாஹ் வழங்கியுள்ளான். மிருகங்கள் வறையரைகள் இன்றி, சுய கௌரவம் பாராது தமது பாலியல் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன.

ஆனால் மனிதன் மிருகங்களை விட்டும் வேறுபட்டவன். அவன் சீரான பகுத்தறிவு வழங்கப்பட்டவன். உயர்ந்த பண்புகள் எவை, தரக்குறைவான பண்புகள் எவை என்பதை சரியாக அறியக் கூடியவன். இப்பின்புலத்தில் அவன் தான்தோன்றித்தனமாக தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனிதன் முற்பட மாட்டான்.

இஸ்லாம் திருமணம் என்ற அற்புதமான உடன்படிக்கையைச் செய்து கொள்வதன் மூலம் மனிதன் தனது பாலியல் தேவைகளை நிறைவேற்ற வழிசெய்து கொடுத்துள்ளது. திருமண வாழ்வின் மூலம் மனிதன் தனது பாலியல் தேவையை முறையாகவும், கௌரவமாகவும் நிவர்த்தி செய்து கொள்கின்றான். முறையான சட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப திருமண வாழ்வில் இணைந்து கொள்வதன் மூலம் மனிதனது கௌரவம் பாதுகாக்கப்படுகின்றது. இதுவே பிரபஞ்ச விதிகளுக்கு ஏற்புடையது.

மன அமைதி

திருமண வாழ்க்கை அற்புதமானது. அது கணவன், மனைவிக்கிடையில் மன அமைதியை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கு மத்தியில் அன்பு, இரக்கத்தை தோற்றுவிக்கின்றது. இவ்வாழ்வானது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்காக (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன’ (அர்-ரூம்: 21)

அதிகமான திருமணங்கள் எவ்விதமான முன்னைய அறிமுகமும் இல்லாத நிலையில் நடைபெறுகின்றது. ஆனால் திருமண வாழ்வில் இணைந்து கொண்ட பின்னர் அவர்கள் தமக்கிடையில் நீண்ட கால அறிமுகம் இருப்பது போன்ற உணர்வோடு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். தமது இரகசியங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் இடமாக அவர்கள் இருவரும் மாறிவிடுகின்றனர்.

ஒருவர் மற்றவருக்கு ஆடையாக இருப்பதாக அல்குர்ஆன் இதனை ஒப்பிடுகின்றது. ‘அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் உள்ளீர்கள்’ (பகரா: 187)

மனிதன் உடல், அறிவு, ஆன்மா என்ற பிரதான மூன்று அடிப்படைகளைக் கொண்டவன். இந்த மூன்று அடிப்படைகளுக்குமான கடமைகள் சமநிலையுடன் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சீரான பண்புடையவனாக மனிதன் வாழ்வான்.

திருமண வாழ்வின் மூலமாக மனிதனது ஆன்மாவுக்கு நிம்மதி கிடைக்கின்றது. கணவன், மனைவி, அவர்கள் இருவர்களினதும் குடும்பங்களுக்கு இடையிலான அழகான உறவுகளைப் பேணுவதனூடாக குடும்பத்தவர்கள் சந்தோசமாக வாழும் நிலை தோன்றுகின்றது. இதனால் தான் குடும்பத்துடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது.

Leave A Comment