கௌரவமான குடும்ப வாழ்வு – சில வழிகாட்டல்கள் (2)
திருமணத்தின் நோக்கங்கள் (மகாஸிதுகள்)
- அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள அனைத்து சட்டங்களிலும் இலக்குகளையும், நோக்கங்களையும் வைத்துள்ளான். இவை மகாஸித் என்று அழைக்கப்படும். இச்சட்டங்களின் பிரதான மகாஸிதாக மனிதனுக்கு நலன்களை உண்டாக்கும் காரியங்களை ஏற்படுத்துவதும், அவனுக்கு பாதகமான அம்சங்களை நீக்குவதுமாகும் என இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய சட்டங்களின் உன்னத நோக்கங்கள் ஐந்து உள்ளன. மார்க்கத்தைப் பாதுகாத்தல், உயிர்களைப் பாதுகாத்தல், மனிதப் பரம்பரையைப் பாதுகாத்தல், அறிவைப் பாதுகாத்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பனவாகும்..
இமாம்களான கராபி (684), ஸுப்கி (771), ஷவ்கானி (1250) போன்றோர் ஆறாவது உன்னத நோக்கமாக மனிதனின் மானத்தைப் பாதுகாத்தல் என்பதைக் குறிப்பிடுகின்றனர்.
மேலே கூறப்பட்டுள்ள உன்னத நோக்கங்களில், பாதுகாத்தல் என்பது இரு வழிமுறைகளில் காணப்படுகின்றது. ஒன்று குறித்த நோக்கங்களை வளர்த்தல், அதற்குத் தேவையான சாதனங்களை உருவாக்கல் என்பன உள்ளடங்கும். மற்றையது குறித்த நோக்கங்களை பாதிக்கும் அம்சங்களை தடுத்து சாதகமான சூழலை தோற்றுவித்தல். இதனை சட்ட அறிஞர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.
இவ்வரிசையிலேயே திருமணம் பற்றிய சட்டங்கள் வருகின்றன. மனிதப் பரம்பரையை பாதுகாத்தல் என்ற உன்னத நோக்கத்தை அடைவதற்கான முதன்மையான வழிமுறையாக திருமணம் உள்ளது. எனினும் திருமண வாழ்க்கைக்கும் பல உயர், துணை இலக்குகள் (மகாஸிதுகள்) இருப்பதை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
இது பற்றிய விளக்கங்களைப் பார்ப்போம்.
மனிதப் பரம்பரையைப் பாதுகாத்தல்
இவ்வுலகின் இயக்கம் தங்கியிருப்பது இங்கு வாழ்கின்ற மனிதப் பரம்பரையிலேயே. மனிதன் என்ற ஒருவன் இல்லாவிட்டால் இவ்வுலகம் இயங்கமாட்டாது. இயங்குவதில் பயனும் கிடையாது. ‘அவன் தான் உங்களுக்காக பூமியிலுள்ள அனைத்தையும் படைத்தான்’ (பகரா:29) என்ற வசனம் இவ்வுலகம், இதில் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் மனித சமூகத்தின் நலனுக்காகவே, அதனது தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அல்லாஹ் படைத்துள்ளான் என்ற கருத்தை தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இக்கருத்தின் அடிப்படையில் மனித சமூகம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அடிப்படைகள், ஒழுங்குகள் குறித்து சிந்திப்பது, அதன்படி செயலாற்றுவது மனிதனாகிய எமது கடமையாகும்.
இவ் உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் முதன்மை வழியாக இஸ்லாம் திருமணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் முறையான ஒழுங்கில் குடும்பமாக வாழ்வதற்கு இணையும் ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது. இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்குமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கின்றது. இவ்வாறான குடும்ப வாழ்வையே உண்மையான உள்ளங்கள் ஏற்றுக் கொள்கின்றன.
இதற்கு மாற்றமான குடும்ப வாழ்வை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அவை மனித இயல்புக்கு மாற்றமானதாக இருப்பது மட்டுமல்ல, இப்பிரபஞ்ச விதிகளுக்கே முரண்பட்டதாக இஸ்லாம் கருதுகின்றது. இவ்வகையில் ஒருபால் திருமணத்தை இஸ்லாம் தடைசெய்கின்றது. இத்தகைய உறவின் ஊடாக ஒருபோதும் திருமண, குடும்ப வாழ்வின் நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாது.





