– எம். எச். எம். நாளிர் –
பகுதி 13
அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் ஆசிரியரின் நற்பண்புகள் பற்றி நடத்திய ஆய்வில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை, எம். ரீ. டானியல் என்பவர் தனது ‘தலை சிறந்த ஆசிரியர்’ என்ற நூலில் பட்டியல் படுத்தியுள்ளார். அந்தப் பண்புகள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களின் ஸீறாவிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர் குறிப்பிடும் இருபது பண்புகளுக்குமான ஆதாரங்களை நபி (ஸல்) அவர்களின் ஸீறாவிலிருந்து நோக்குவோம்.
- பரந்த அறிவு : நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் குறைவில்லாத புலனறிவும், திசை மாறாத பகுத்தறிவும் கொடுக்கப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் வஹீ மூலமான அறிவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. (விழிந்து) மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக (நம்முடைய தூதர்) உங்களின் தோழர் தவறிவிடவுமில்லை, தவறான கொள்கையில் சென்றிடவுமில்லை. அவர் (தனது) மனோ இச்சையின்படி (எதையும்) பேசுவதுமில்லை. அது (அவருக்கு) அறிவிக்கப்படும் (வஹியாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை. (ஜிப்ரீல் எனும்) மிகக் கடின வலுவுடையவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார் (53:1-5) என்று அல்குர்ஆன் இதனை எடுத்துக்காட்டுகின்றது. மட்டுமன்றி ‘என் றப்பே, கல்வி ஞானத்தை எனக்கு (மென்மேலும்) அதிகமாக்குவாயாக” (20:114) என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் கல்வி விருத்திக்காகப் பிரார்த்தனை செய்திருப்பதை ஹதீஸ்களில் காண்கிறோம். இவை நபி (ஸல்) அவர்களுக்குப் பரந்த அறிவு கிடைத்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அவர்களின் வாக்குகளும்> வாழ்வும் அறிவுபூர்வமாகவே இருந்தன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
- ஒத்துழைப்பு : கற்றோர் – கற்பிப்போருக்கிடையில் ஒத்துழைப்பு காணப்படும் போது தான், ஆசிரியர் மாணவரில் இரக்கம் காட்டுவார். மாணவர் ஆசிரியரில் மதிப்பு வைப்பார், இரண்டுக்குமூடாகவே கற்றல் – கற்பித்தற் செயற்பாடு சிறப்பாக இடம்பெறுவது சாத்தியமாகும்.
அகழிப்போர் முடிவுற்ற பின்னர், உடன்படிக்கையை மீறிய குறைழாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை நபி அவர்களுக்கு இருந்தது. அதற்காக சில ஸஹாபாக்களை அழைத்தார்கள். குறைழாவுக்குப் போய் அஸர் தொழ வேண்டுமென பணித்தார்கள். மதீனா மையத்துக்கும் குறைழாவுக்குமிடையிலான தூரத்தை உத்தரவிடப்பட்ட அந்தக் குறுகிய நேரத்தில் அடைய முடியாது. எனினும் புறப்பட்டுச் சென்ற ஸஹாபாக்களில் ஒரு பகுதியார், நபி (ஸல்) அவர்களின் கூற்றை அப்படியே ஏற்று, குறைழாவுக்குச் சென்று நேரங் கடந்து அஸர் தொழுகையை நிறைவேற்றினார்கள். மறுபகுதியார்> அது அவசரமாகச் செல்வதற்கான குறியீடு எனக் கருதி இடையில் அஸர் தொழுகையை நிறைவேற்றி விட்டு குறைழாவுக்குச் சென்றார்கள்.
ஒரே கூற்றை இருவிதமாகப் புரிந்து கொண்ட மாணவர்களை ஆசிரியர் என்ன செய்வார்? ஒரு பகுதியாரை சரி கண்டும்> மறு பகுதியாரை தவறிழைத்தவராகவும் கொள்வதே வழக்கமாகும். எனினும், நபி (ஸல்) அவர்கள் இரு பகுதியாரையும் சரி கண்டார்கள். அங்கு போய் தொழுகையை நிறைவேற்றியோர் ஆசிரியரின் சொல்லை அப்படியே நிறைவேற்றினர். மறு பகுதியார், ஆசிரியர் கூறியதன் உட்கருத்தை விளங்கிச் செயற்பட்டார்கள். இங்கு மாணவரை சிந்திக்கச் செய்கின்ற – சுயமாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்ற ஒரு செயற்பாட்டைக் காண்கிறோம். ஆசிரியர் – மாணவர்களுக்கிடையிலும் மாணவர்கள் தமக்கிடையிலும் ஒத்துழைப்பு நல்கிய பண்பையும் கண்டு கொள்கிறோம்.
- தன்னலமற்ற சேவை மனப்பான்மை : நபி (ஸல்) அவர்களின் தஃவாவைத் தடை செய்வதற்காக எதிரிகள் கையாண்ட வழிமுறைகள் பலதரப்பட்டவை. நபி (ஸல்) அவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் அவர்களல்லாத பிறிதொருவர் மீது இழைக்கப்பட்டிருந்தால், அவர் பணியை உதறிவிட்டு ஒதுங்கியிருப்பார். அவர்களுக்கு ஊட்டப்பட்ட ஆசைகளை வாக்களிக்கப்பட்ட அன்பளிப்புகளை எண்ணிப்பார்த்தால் அவற்றை ஏற்றுக் கொண்டு நிம்மதியாக இருந்திருப்பார். ஆனால், நபி (ஸல்) அவர்களோ, தனிப்பட்ட முறையிலும், குடும்ப சமூக மட்டத்திலும் தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை சகித்துக் கொண்டார்கள். தனது சுயநலத்தை விட, சமூகத்தின் பொது நலத்தை ஈருலக வாழ்வின் சுபீட்சத்தை பெரிதாகக் கருதினார்கள். எனவே அடைந்த துன்பங்களை சொற்பமாகக் கருதி, பெறப்போகும் இன்பத்தை பெரிதாக கருதினார்கள். தன்னலம் கருதாத அவரது பணி, முன்மாதிரியான ஒரு சமூகத்தை உலகுக்குக் கொடுத்தது. இவ்வாறான பரந்த மனப்பான்மை ஆசிரியர்களிடம் காணப்பட வேண்டுமென்பதற்கு அவர்கள் ஒரு முன்மாதிரியாகும்.
தொடரும்…





