- அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
முகவுரை
சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டு வடிவமாகும். குடும்பங்களின் அறிவுப் பின்னணி, அவற்றின் பண்பாடு, நடத்தைகளுக்கு ஏற்ப சமூகத்தின் அறிவு, பண்பாடு, நடத்தைகள் மாறுபடுவதைக் காணலாம். சிறந்ததொரு சமூகத்தில் முன்மாதிரியான குடும்பங்களின் பாதிப்பைக் காண முடியும். அவற்றின் சமூகத்திற்கான பங்களிப்பு காத்திரமானதாகவும் இருக்கும்.
இதற்கு மாற்றமாக கட்டுக்கோப்பற்ற சமூகத்தில் உள்ள அதிகமான குடும்பங்களின் நிலை கவலைக்கிடமானதாக இருக்கும். வாழ்வின் நோக்கத்தை அறியாது, மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு அக்குடும்பங்கள் வாழ்ந்து வருவதைக் காணலாம்.
ஸாலிஹான ஓர் ஆணும், ஸாலிஹான ஒரு பெண்ணும் குடும்ப வாழ்க்கையில் இணைவதன் மூலம் சிறந்த குடும்பத்திற்கான அத்திவாரம் இடப்படுகின்றது. இக்குடும்பத்தில் ஸாலிஹான பிள்ளைகள் உருவாக்கப்படுவார்கள். இதன் விளைவால் நல்ல பெறுமானங்கள், பண்பாடுகளைக் கொண்ட சமூகம் உருவாகும்.
இஸ்லாம் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குடும்பம் தொடர்பான அதிகமான விடயங்களை அல்குர்ஆன் விளக்கியுள்ளது. பகரா, நிஸா, யூசுப், நூர், லுக்மான், கஸஸ், அஹ்ஸாப், தலாக், தஹ்ரீம் போன்ற சூராக்களில் இது பற்றிய அடிப்படைகள் விபரிக்கப்பட்டுள்ளன.
கணவன், மனைவி தெரிவு என்ற ஆரம்பப் புள்ளியில் இருந்து குடும்ப வாழ்வு ஆரம்பிக்கின்றது. அவர்களின் கடமைகள், உரிமைகள் எவை, பிள்ளை வளர்ப்பு, உறவுகளைப் பேணுதல், குடும்பத்துக்காக செலவு செய்தல், குடும்பத்தின் சமூகப் பங்களிப்பு என இப்பகுதியை இஸ்லாம் விரிவாகப் பேசுகின்றது.
இன்று குடும்ப வாழ்வு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சிதைந்த, கட்டுக்கோப்பற்ற குடும்பங்களை தோற்றுவிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் நடைபெற்று வருகின்றன. பெண்கள் தொடர்பிலான சர்வதேச மாநாடுகள் நடாத்தப்பட்டு குடும்பத்தின் உண்மையான பெறுமானங்களை இல்லாமல் செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் காலம் இது.
பிள்ளைகள் தமது பெற்றோரின் அரவணைப்பிலிருந்து தூரமாகி வாழும் அவலநிலை இன்று பரவலாக உள்ளது. முறையற்ற தொடர்புகள் காரணமாக உருவாகியுள்ள உறவுகள் குடும்பங்களுக்கு மத்தியில் பல பிரச்சினைகளை உருவாகியுள்ளன. மறுபக்கத்தில் போதைப்பொருள் பாவனையால் கணவன் – மனைவி, பிள்ளைகள் – பெற்றோர் என அனைவருக்கும் மத்தியில் முறிவுகள் ஏற்பட்டுள்ளன. திருமண ஒப்பந்தம் நடைபெறும் அதே வேகத்தில் திருமண முறிவு நடைபெறுவது இவற்றின் முக்கியமான ஒரு விளைவாகும்.
இது போன்ற பல சவால்களை இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கி வருகின்றதன் காரணமாக குடும்பம் தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டல்களை தருவதை நோக்காகக் கொண்டு இவ்வாக்கத் தொடர் எழுதப்படுகின்றது.





