முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் – பகுதி 12

June 6, 2023
499 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி 12 ….

  1.  தனியாள் வேறுபாடு

கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் தனியாள் வேறுபாடுகளுக்கமைவாக அதனைத் திட்டமிட்டுக் கொள்வது அல்லது தேவையின் போது அணுகுவது மிகப் பிரதான அம்சமாகும். ஏனெனில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கூடாக எதிர்பார்க்கப்படும் நடத்தை மாற்றம் இடம்பெறுவதற்கு இந்த அணுகுமுறையே பொருத்தமாக அமையும்.

இதனை நபி (ஸல்) அவர்கள்> மிகக் கச்சிதமாக அணுகியுள்ளார்கள் என்பதை ஷெய்க் யூசுப் அல் கர்ழாவி இறைதூதரும் கல்வியும் என்ற நூலில் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு தனி மனிதனுக்கோ, பிரிவினருக்கோ அவரவர்களுக்குப் பொருத்தமான அறிவைப் பொருத்தமான அளவில் பயனளிக்கக்கூடியதாக குறிப்பிட்ட நேரத்தில் வழங்கக்கூடியவரே வெற்றிகரமான ஆசிரியர் ஆவார். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் கற்றுவந்த மாணவர்களுக்காக ஐந்து வகையான நடைமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்கிறார்.

  1. உபதேசம் கேட்டு வந்தோர்க்கு அவர்கள் செய்த உபதேசம் ஆளுக்கேற்ப வேறுபட்டிருந்தமை. உதாரணமாக, ஒருவர் தனக்கு உபதேசிக்குமாறு கேட்ட போது, ‘கோபம் கொள்ளாதே’ என அறிவுறுத்தினார்கள். மற்றொருவர் உபதேசிக்குமாறு கேட்ட போது ‘அல்லாஹ்வில் நம்பிக்கை கொண்டதாகக் கூறு; அதில் நிலைத்து நில்’ எனப் பதிலளித்தார்கள். மூன்றாமவர் இதே வேண்டுகோளை விடுத்த போது, ‘எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள். ஒரு தீமையைச் செய்தால் தொடர்ந்து நன்மைகளைச் செய்து கொள். அது தீமையை அழித்துவிடும்; மக்களோடு பண்பாக நடந்து கொள்’ என்றார்கள்.
  2. கேட்டு வந்தோரின் நிலைமளுக்கேற்ப பதில்களும் தீர்வுகளும் வேறுபட்டிருந்தமை. உதாரணமாக> அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது எனக் கேட்ட போது> ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்றார்கள். அடுத்து, ‘அல்லாஹ்வின் பாதையில் போராடுவது’ என்றார்கள். கித்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், இதே கேள்வியை கேட்ட போது, அல்லாஹ் மீது நம்பிக்கை கொள் என்றார்கள். அடுத்து எனக் கேட்ட போது> இரத்த உறவைப் பேணி நடத்தல் என்றார்கள். பிறகு எனக் கேட்ட போது, நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்றார்கள்.

இஸ்லாமிய செயற்பாடுகளில் உயர்ந்தது எதுவென அபூமூஸா (ரழி) அவர்கள் கேட்ட போது, எவனுடைய நாவினதும், கையினதும் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறாரோ அவரின் செயற்பாடு என்றார்கள். இதே கேள்வியை இப்னு உமர் (ரழி) அவர்கள் கேட்ட போது உணவளியுங்கள், அறிந்தவர் அறியாதவர் அனைவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றார்கள்.

ஓர் இளைஞர் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் மனைவியை முத்தமிடலாமா எனக் கேட்ட போது, ‘முத்தமிடக் கூடாது’ என்றார்கள்.

எனவே ஆசிரியர், மாணவரின் தராதரத்தை அறியாமல் வருபவர்களுக்கெல்லாம் தான் தெரிந்திருப்பதையெல்லாம் அப்படியே சொல்லிக் கொடுப்பது இயலாமையாகும். அது ஒரு பாவமாகக் கூட அமையலாம். ஆதலால், அறிவின் அளவுக்கேற்ப அளந்து கொடுங்கள்; விளங்கிக் கொள்வதற்கேற்ப நிறுத்துக் கொடுங்கள். அப்போது தான் குறிப்பிட்ட நபர் பயன் பெறுவார் என ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி விளக்குகிறார். ஆசிரியர் அறிவுக்கும் உள்ளத்துக்கும் பொருத்தமான மருந்தைக் கொடுத்து பரிகாரம் செய்பவர், எல்லா மருந்துகளும் எல்லா நோய்களுக்கும் பரிகாரமாக அமையாது. ஆதலால் தனியாள் வேறுபாட்டுக்கேற்ப கற்றல், கற்பித்தற் செயற்பாடு இடம்பெற வேண்டும்.

  1. உறவாடும் நபர்களுக்கேற்ப அவர்களின் நடத்தைகளும் நிலைப்பாடுகளும் வேறுபட்டிருந்தமை. உதாரணமாக, உஸ்மான் (ரழி) அவர்கள் தமது வீட்டுக்கு வந்த போது, தமது உடைகளை சீர்செய்து உடம்பின் பகுதிகளை மூடிக் கொண்ட நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இருவரும் வந்த போது> அவசரப்பட்டு உடைகளைச் சீர்படுத்திக் கொள்ளவில்லை.

இது பற்றி, ஆயிஷா (ரழி) அவர்கள் வினவிய போது> மலக்குகள் பார்த்து வெட்கப்படும் மனிதனைப் பார்த்து நான் வெட்கப்பட மாட்டேனா? உஸ்மான் (ரழி) அதிகமாக வெட்கப்படுபவர். நான் இருந்த நிலையில் அவரை அனுமதித்தால், அவர் தான் வந்த காரணத்தை முழுமையாக செல்லாது போய்விடுவார் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

  1. தனி நபர்களின் ஆற்றல்களுக்கேற்ப கட்டளைகளும், பொறுப்புக்களும் வேறுபட்டிருந்தமை. உதாரணமாக, காலித் (ரழி) அம்ர் இப்னு அல்ஆஸ் (ரழி) ஆகியோரை படைப்பிரிவுகளுக்கு தளபதியாக்கினார்கள். குறைஷிகள், இஸ்லாத்தை இழிவுப்படுத்திப் பாடிய போது எதிர்க்கவி பாடுமாறு ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில் சங்கடமான சந்தர்ப்பங்களில் மிகச் சிறந்த சொற்களைப் பயன்படுத்த முடியுமான அரிதான ஆற்றல் அவரிடம் காணப்பட்டது.
  2. சூழல் வேறுபாட்டிற்கேற்ப அவர்கள், நடத்தைகள், நிலைப்பாடுகள் வேறுபட்டமை. உதாரணமாக, நாட்டுப்புற அறபிகளுக்கும் – நகர்ப்புற அறபிகளுக்கும், சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் – பொது மக்களுக்கும், பெரியவர்களுக்கும் – சிறியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் – யுவதிகளுக்கும் அவர்கள் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டுள்ளார்கள்.

தொடரும்…

Leave A Comment