– எம். எச். எம். நாளிர் –
பகுதி 11
- ஊக்குவித்தலும் பாராட்டலும்
கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் மாணவர்களை ஊக்குவிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான ஒரு வழிமுறையாகும். அவர்கள் தவறிழைக்கும் போது அன்பு காட்டி நெறிப்படுத்துவது போன்றே அவர்கள் நல்லன செய்யும் போதும்> தமது திறமைகளை வெளிப்படுத்தும் போதும் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.
அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் மிக இனிமையாகக் குர்ஆன் ஓதுவார்கள். அவர்கள் இரவில் குர்ஆன் ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் மறைந்திருந்து அதனை செவியேற்று, தாவூத் (அலை) அவர்களுக்குக் கிடைத்த புல்லாங்குழல் இசை, இனிமை உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (புகாரி) என அவரைப் பாராட்டினார்கள்.
ஒரு முறை உபை இப்னு கஅப் (ரழி) அவர்களிடம் ஒரு வினாவைத் தொடுத்தார்கள். அபுல் முன்திர், அல்லாஹ்வின் வேதத்தில் மிக உயர்ந்த வசனம் எது? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹு லா இலாஹ என ஆரம்பிக்கும் (ஆயதுல் குர்ஸி 2:255) ஆயத் எனப் பதிலளித்தேன். அப்போது எனது நெஞ்சில் கையை வைத்து> ‘உனக்கு அறிவு இலகுவாக அமையட்டும்’ எனப் பிரார்த்தித்தார்கள் (முஸ்லிம்)
இதுவரை நாம் கூறிவந்த நபி (ஸல்) அவர்களின் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள், பிற்காலத்தில் கல்வியியலாளர்கள் வகுத்துக் கொடுத்த விதிமுறைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன என்பதற்கு ஆதாரமாக பேராசிரியர் எப். எஸ். என். மக்ஜாலண்ட் என்பாரின் அறிவியல்சார் கற்பித்தல் என்ற நூலில் காட்டப்படும் ஐந்து கற்பித்தல் திறன்களை எடுத்துக்காட்டலாம்.
- கற்பித்தலுக்கூடாக கல்வியின் குறிக்கோள் அடைதலும் அதனை விளங்கக்கூடிய முறையில் நடைமுறைப்படுத்தலும்
- கலந்துரையாடல்> ஆசிரியர் – மாணவர் தொடர்பு ஆகிய முறைகள் மூலம் மாணவர்களின் நடத்தைகளை நல்வழிப்படுத்தி அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தல்
- தான் கற்பிக்கும் விசேட பாடத்தில் தன் திறமைகளை விருத்திச் செய்தல்
- கற்பித்தலின் பின் மாணவர்களின் அடைவை மதிப்பீடு செய்வதற்காக அவர்களை அவதானித்து சுவைக்கும் திறமைகளை பெறுதலும் அதனை விருத்தி செய்தலும்
- கற்பித்தல் நடைபெறுவதற்காக பௌதீக சூழலில் காணப்படும் மூளவளங்கள், வேறு பொருட்கள் முதலியவற்றையும் பலப்படுத்தலும் சமுதாயத்தில் வாழும் தனிப்பட்டவர்களது உதவியைப் பெற்றுக் கொள்ளலும்.
தொடரும்…





