முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் – பகுதி 10

May 13, 2023
645 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி – 10 

  1. வரவேற்றல்

அறிவைத்தேடி உங்களிடம் பல (கூட்டத்தின)ர் வருவார்கள். அவர்களை நீங்கள் கண்டால், நபி (ஸல்) அவர்கள் எமக்கு உபதேசித்தமைக்கேற்ப வந்தவர்களே, ‘உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று கூறுங்கள், அவர்களைத் திருப்திப் படுத்துங்கள், அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறியதாக அபூஸஈத் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு கூறிய அவர்கள் தமது மாணவர்களுடன் அவ்வாறே நடந்து கொண்டார்கள்.

இறைதூதர் எமக்கு உபதேசித்தமை போன்று வந்தவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று ஆசீர்வதிப்பார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களோ தம்மிடம் வரும் மாணவர்களை, ‘ஞானத்தின் ஊற்றுக்கண்கள், இருளைப் போக்கும் ஒளிவிளக்குகள், எளிய உடையை அணிந்திருப்போர், புதிய உள்ளங்கொண்டோர், ஒவ்வொரு கோத்திரத்தினதும் நறுமணத் திரவியங்கள், அறிவு தேடும் இளைஞர்கள் என விளித்து வரவேற்பார்கள்.

சிறுவயதும், குறையறிவுடைய மாணவர்கள் தவறு விடுவது இயல்பானது. சிறியோர் செய்யும் குற்றங்களை பெரியோர் மன்னித்துவிட வேண்டும், சகித்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பதையும் தண்டிப்பதையும் தவிர்த்து அவர்களை நெறிப்டுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதைப் பாருங்கள்.

 

  1. மனமாற்றத்தை ஏற்படுத்தல்

நபி (ஸல்) அவர்கள் தமது கையால் எந்தப் பெண்ணையோ பணியாளரையோ மிருகங்களையோ அடித்ததில்லை (முஸ்லிம்) ஸஹாபாக்கள் விடயத்தில் அவ்வாறே நடந்து கொண்டார்கள். குற்றம் செய்தவர்களை மாற்றியமைப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள்.

ஒரு முறை நாட்டுப்புற அறபி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதுக்கு வருகிறார். அங்கே ஓரிடத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார். உடனிருந்தவர்கள் ‘நிறுத்து நிறுத்து’ என குரலெழுப்புகிறார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரைத் தடுக்காதீர்கள், விட்டு விடுங்கள்’ என சிறுநீர் கழித்து முடியும் வரை தாமதப்படுத்தினார்கள். பின்னர் அவரை அழைத்து, ‘இது சிறுநீர் கழிக்கவோ, அசுத்தப்படுத்தவோ அமைக்கப்பட்ட இடமல்ல, அல்லாஹ்வை திக்ர் செய்யவும், குர்ஆன் ஓதவும், தொழுகை நடத்தவும் அமைக்கப்பட்டுள்ள இடமாகும் என அறிவுறுத்தினார்கள். பின்னர் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து நபியே அவ்விடத்தைக் கழுவி விட்டார்கள். (முஸ்லிம்)

இவ்வாறே குறைஷி வாலிபரொருவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து விபசாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார், கூடியிருந்தோர் அவரைத் தாக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்களோ அவரைத் தம்பக்கம்; அழைத்தார்கள். அவரை அமர்த்தி, உங்கள் தாயுடன் அவ்வாறு நடந்து கொள்ள விரும்புவீர்களா எனக் கேட்டார்கள். அல்லாஹ் மீது சத்தியமாக இல்லை என அவர் பதிலளித்தார். பின்னர், மகள் குறித்தும், சகோதரி குறித்தும், சில உறவு முறையினர் குறித்தும் – இவர்களுடன் அவ்வாறு நடந்து கொள்ள விரும்புவீர்களா என வினவினார்கள். அப்போது அவர் இல்லை என்றே பதிலளித்து வந்தார். ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒருவரின் தாயாக, மனைவியாக, சகோதரியாக உறவு முறை சார்ந்தவராக இருக்கும் போது இவ்வாறு நடப்பதை அங்கீகரிப்;பீர்களா எனக் கூறி அவரது நெஞ்சில் கையை வைத்து, அவரை மன்னிக்குமாறும், உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும், பாலுறுப்பை பாதுகாக்குமாறும் பிரார்த்தித்தார்கள். இதன் பின்னர், அவர் தனது வாழ்நாளில் அந்தப் பாவத்தின் பக்கம் திரும்பவே இல்லை என ஸஹாபாக்கள் சாட்சி கூறுகிறார்கள்.

குறித்துக் காட்டாமல் சிலர், தொழுகையை நீட்டித் தொழுவிப்பதால் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவதை தாம் தவிர்த்துக் கொள்வதாக முறையிட்ட போது, கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே உங்களில் சிலர் வெறுப்பூட்டி விரட்டுபவர்களாக இருக்கின்றனர். யாரேனும் மக்களைத் தொழுவித்தால் இலகுவாக தொழுவியுங்கள். ஏனெனில், அங்கு நோயாளிகள், பலவீனர்கள், பல்வேறு தேவையுடையோர் இருப்பார்கள்’ (புகாரி) என உபதேசித்தார்கள். இங்கு குற்றம் செய்தவர்களை குறித்து கண்டிக்காது ‘உங்களில் சிலர்’ பொதுவாக விளித்து உபதேசித்தமை குறிப்பிடத்தக்;கதாகும். தனி நபரை குறிவைக்காது பொதுவாகச் சொல்லி மனமாற்றமடையச் செய்யும் உத்;தியை நபி (ஸல்) அவர்கள் கையாள்கிறார்கள்.

ஒரு பெண்ணை இலக்காக வைத்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த தனி நபரை நேரில் சென்று கண்டிக்காது ‘செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொறுத்தது’ என்ற பிரபலமான ஹதீஸை பொதுவாகவே எடுத்துரைத்து, உபதேசித்தார்கள். இவை மாணவரை மனங்கோணாமல் எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களாகும்.

தொடரும்…

Leave A Comment