– எம். எச். எம். நாளிர் –
பகுதி 9
- படிமுறையாக கட்டியெழுப்பும் விதம்
இதே போன்று பாடங்களை அல்லது அறிவுரைகளைப் படிமுறையாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். யமனுக்கு செல்லவிருந்த முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்.
‘நீ வேதங் கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்திடம் செல்கிறீர், அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என்பதன் பக்கம் அவர்களை அழைப்பீராக. அவர்கள் அதற்கு உடன்பட்டுப் பணிந்தால் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கி இருக்கிறான் எனக் கூறுவீராக. (புகாரி, முஸ்லிம்)
இங்கு வேதங் கொடுக்கப்பட்டவரின் அறிவுத் தரத்துக்கேற்ப படிப்படியாக போதனைகள் அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்கள். இவ்வாறே மதுபானத் தடையும் படிப்படியாக அமுலாக்கப்பட்டதை சுட்டிக் காட்டலாம். முதலில் அதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. ஆனால் நன்மையை விட தீமை அதிகம் என்பது (2:219) உணர்த்தப்பட்டது. அடுத்து தொழுகைக்கு இடைஞ்சலாக மதுவைப்பயன்படுத்தக் கூடாது (4:43) என தடைவிதிக்கப்பட்டது. இவ்வாறு படிமுறையான விதிகளை அமைத்து அவற்றில் பக்குவப்பட்ட பின் முற்றாக தடை செய்யப்பட்டது. (5:90) என்பதை நாம் அறிவோம்.
பொதுவாக கல்வி உலகில் தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லல், இலகுவிலிருந்து கஷ்டத்துக்குச் செல்லல், உதாரணத்திலிருந்து விதிமுறைக்குச் செல்லல், பொதுவிலிருந்து சிறப்புக்குச் செல்லல் என்ற படிமுறைகள் கூறப்படுகின்றன. இந்தப் படிமுறைகள் நபி (ஸல்) அவர்களால் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன என்பதை ஸீறாவை நுணுக்கமாகக் கற்பவர்கள் அறிந்து கொள்வர். இவ்வாறு படிமுறையாக முன்வைப்பவர்களையே அல்குர்ஆன் ரப்பானி (3:79) என விளிப்பதாக ஷெய்க் யூசுப் அல் கர்ழாவி குறிப்பிடுகின்றார்.
- ஆளிடைத் தொடர்பு
கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் பாடப்பொருளை முன்வைத்திடும் போது உத்திகளைக் கையாள்வது ஒரு பகுதியாகும். இது பற்றியே இதுவரை நாம் அவதானித்து வந்தோம். அடுத்த பகுதி கற்றலில் ஈடுபடும் மாணவர்களை அணுகும் முறையாகும். கற்பவர்களே, கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் நாயகர் ஆவர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் அணுகிய முறை பற்றி இங்கு நோக்குவோம்.
நபி (ஸல்) அவர்கள் தனது மாணவர்களான ஸஹாபாக்களைப் பார்த்து, எனக்கும் உங்களுக்குமிடையிலான தொடர்பு ஒரு தந்தைக்கும் மகனுக்குமிடையிலான தொடர்பு போன்றதாகும் (அபூதாவூத்) எனக் கூறினார்கள். ஒரு தந்தை, தன் மகனோடு இரக்கமாக இருத்தல், அன்போடு பழகல், மிருதுவாக நடத்தல், அறிவை வளர்க்க வழி செய்தல், பரஸ்பரம் உரையாடல் ஒத்துழைத்தல் போன்ற வழிமுறைகள் மூலம் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். இவ்வாறான உறவு ஆசிரியர் மாணவர்களிடையே காணப்பட வேண்டும்.
பொதுவாக ஒருவரை ஒருவர் நெருங்கிப் பழகுவதற்கு அவர்களிடம் காணப்படும் பண்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக சிரித்த முகம், தனியான பார்வை, கவர்ச்சியான தோற்றம், வசீகரிக்கும் உரைப்பாங்கு, முகமன் கூறல், அடிக்கடி சந்தித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் பண்புகள் ஆசிரியரிடம் இடம்பெறும் போது தான் மாணவர்களால் ஈர்க்கப்படுவார்.
நபி (ஸல்) அவர்களிடம் இவ்வகையான பண்புகள் நிறைய காணப்பட்டன. அவை கற்றல் கற்பித்தற் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை அவதானிப்போம்.
- இரக்கம் காட்டல்
(நம்பிக்கையாளர்களே எம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். அவர் உங்களில் உள்ளவர் தான். (உங்களுக்கு யாதொரு துன்பமேற்பட்டு நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகிவிட்டால் அது அவருக்கு மிக வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புவராகவும், நம்பிக்கையாளர்களாகிய உங்கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார் (9:128) என்ற அல்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்களின் இரக்கப்பண்புகளை முன்வைக்கின்றது.
நபியவர்களின் இரக்கப்பண்பை அடிமனதை தொட்டுப் பார்த்துக் கூறுவது போல அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான். நபியே இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்கள் உயிரை அழித்துக் கொள்வீர்களோ (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்) (18:06) இவ்வாறான களங்கமற்ற இரக்கப் பண்பு கற்பிப்போர் அனைவரிடமும் காணப்பட வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியரின் வயதிலும், அறிவிலும் குறைந்தவர்கள். எனவே கற்க வருவதில் அவர்கள் தாமதிப்பர், கவனயீனமாக நடப்பர், அசட்டை செய்வர், குற்றங்களையும் இழைப்பர், அவ்வேளைகளில் மாணவர்களை ஈர்த்தெடுப்பதற்கு ஆசிரியர் வழிகாண வேண்டும். அவர்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். அறிவு தேட வருபவரே உங்கள் வரவு நல்வரவாகட்டும் எனக் கூறி மாணவரை வரவேற்கும் நபி (ஸல்) அவர்கள், அறிவு தேடுபவரை மலக்குகள் தமது இறக்கைகளால் சூழ்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அறிவு தேடுபவரில் கொண்ட அன்பின் காரணமாக ஒருவர் மேல் ஒருவராக பூமிகள் அண்மையிலுள்ள வானத்தை எட்டிவிடுகிறார்கள் (அஹ்மத்) என்று விதந்துரைக்கிறார்கள்.
தொடரும்…





