ஸலாமா வாராந்த நினைவூட்டல் 15

July 24, 2026
10 Views

சோதனைகள் அல்லாஹ்வை நெருங்குவதற்கான சிறந்த வாய்ப்பு

‘ஏன் இவை அனைத்தும் எனக்கே நடக்கின்றன?’ என்று கேட்பவர்களுக்கெல்லாம் போதுமானதும் மனநிறைவைத் தருவதுமான பதில்:
“அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:216)

மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளின் நன்மைகளில் ஒன்று, அவை அவனது இதயத்தை மென்மையாக்குகின்றன. ஏனெனில், அவன் அந்தச் சோதனையை நீக்கவும், அதிலிருந்து பாதுகாக்கவும் அல்லாஹ்வையே நாட வேண்டிய நிலைக்கு வருகிறான். இதனால் அவன் பணிவுடன் அல்லாஹ்விடம் மன்றாடி, அவனிடமே முழுமையாக அடைக்கலம் புகுகிறான்.
சோதனை வந்தபோதும் அல்லாஹ்வைத் தேடி, அவனிடம் பணிவுடன் பிரார்த்திக்காதவனின் இதயம் கடினமடைந்திருக்கிறது. மேலும், அவனுடைய அகந்தையை ஷைத்தான் அவனுக்கு அழகானதாகக் காட்டியிருக்கிறான். எனவே, அல்லாஹ் அவனைத் திடீரெனப் பிடித்துக்கொள்ளும் நிலை நெருங்கிவிடும். அப்போது அவன் அழிவுக்குள்ளாகி, மீட்சியின் எல்லா நம்பிக்கையையும் இழந்தவனாகி விடுவான்.
அல்லாஹ் கூறுகின்றான்: “நம்முடைய வேதனை அவர்களிடம் வந்தபோது அவர்கள் ஏன் பணிவுடன் மன்றாடவில்லை? ஆனால் அவர்களுடைய இதயங்கள் கடினமடைந்துவிட்டன. மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டினான். பின்னர், அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை அவர்கள் மறந்துவிட்டபோது, எல்லா வகையான (உலக) வசதிகளின் கதவுகளையும் அவர்களுக்காகத் திறந்துவைத்தோம். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டவற்றில் மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில், அவர்களைத் திடீரெனப் பிடித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கையிழந்து திகைத்தவர்களாகி விட்டனர்.” (அல்குர்ஆன் 6:43-44)

 

அல்லாஹ்விடமிருந்து மனிதனை விலக்கக்கூடிய நான்கு விடயங்கள்

ஷைத்தான் – மன இச்சை (நஃப்ஸ்) – உலக வாழ்க்கை – மனிதர்கள்

• ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழி: அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவது.
• மன இச்சையை (நஃப்ஸை) அடக்கும் வழி: அதன் ஆசைகளுக்கு மாறாக நடந்து, அதைக் கட்டுப்படுத்துவது.
• உலக மோகத்திற்கான மருந்து: உலக வாழ்க்கையின் மீது அளவுக்கு மீறிய பற்றை விடுவது.
• மனிதர்களால் ஏற்படும் தீமைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழி: அறிவிலிகளின் தீய செயல்களைப் புறக்கணித்து, அவர்களிடமிருந்து விலகி நடப்பது.

 

அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) பேணிக்கொள் – அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.

ஒரு மனிதன் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பேணி, அவனது கட்டளைகளைப் பாதுகாத்து வாழும் அளவுக்கு, அல்லாஹ் அவனைப் பாதுகாப்பான். அவன் உடல் நலத்தையும், அவனது செல்வத்தையும், குடும்பத்தினரையும் அல்லாஹ் பாதுகாப்பான். இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது, அல்லாஹ் ஒருவரின் மார்க்கத்தைப் பாதுகாப்பதே ஆகும். ஏனெனில், உலகிலும் மறுமையிலும் உண்மையான வெற்றி, மனிதன் தனது மார்க்கத்தில் நிலைத்திருப்பதில் தான் உள்ளது.

 

ஸதகா

ஸதகாக்கள், அல்லாஹ்வின் அன்பு – திருப்தி, நரக விடுதலை, நோய் நிவாரணம், செல்வத்தில் பரகத் மற்றும் பல நன்மைகளைப் பெற்றுத்தர போதுமானதாகும்.

 

 

Leave A Comment