சிறந்த குடும்ப வாழ்வின் ஸ்திரத்தன்மைக்கான அடிப்படைகள் (பகுதி – 1)

September 27, 2023
759 Views

அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், நிலைத்த தன்மை கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும். இவ்விடயம் பல அடிப்படைகளின் மீது தங்கியுள்ளது. இவ்விடயத்தில் குறிப்பாக பெற்றோர், திருமண வாழ்வில் இணையவுள்ளோர் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். அவ்வடிப்படைகளை கீழே நோக்குவோம்.

  1. சிறந்த துணையைத் தெரிவு செய்தல்

குடும்ப வாழ்வு, ஓர் ஆண் தனக்குப் பொருத்தமான பெண்ணையும், ஒரு பெண் தனக்குப் பொருத்தமான ஆணையும் தெரிவு செய்வதிலிருந்து ஆரம்பிக்கின்றது. இத்தெரிவானது சட உலகை மையப்படுத்தியதாக,  உடலியல் தேவைகளை மாத்திரம் நிவர்த்தி செய்து கொள்வதற்காக அமையக் கூடாது. அதாவது ஒருவரின் சொத்துக்காகவோ, அல்லது அழகுக்காகவோ, குடும்ப அந்தஸ்துக்காகவோ மாத்திரம் இத்தெரிவு இடம்பெறுதல் பொறுத்தமற்றது என இஸ்லாம் கருதுகின்றது.

துணைத் தெரிவின் போது பின்வரும் விடயங்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

சிறந்த பண்பாடும், மார்க்கப் பின்னணியும்

ஒரு பொருளை வாங்கிய பின்னர் அதில் அதிருப்தி காணப்பட்டால் அப்பொருளை திருப்பிக் கொடுக்க முடியும். இது வியாபாரத்தில் உள்ள இயல்பு நிலையாகும். ஆனால் குடும்ப வாழ்வின் இயல்பு வேறுபட்டது. அது வியாபாரம் போன்றதல்ல.

இதனால் தான் தனது வாழ்க்கைக்கு பொருத்தமானவரை சரியாகத் தெரிவுசெய்து கொள்ளுமாறு திருமண வாழ்வில் இணையவுள்ள தம்பதிகளுக்கு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அவர்கள் நல்ல பண்பாடு, ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சிறந்த மார்க்கப் பின்னணி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

வாழ்க்கைத் துனைவியாக பெண்களை தெரிவு செய்யும் போது எத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதனை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘நான்கு விடயங்களுக்காக ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுவாள். அவளது பணத்திற்காக, அவளது குடும்ப அந்தஸ்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்கத்திற்காக. மார்க்கப் பண்பு கொண்டவளை திருமணம் முடித்துக் கொள். உனது வாழ்வு வளம்பெறும்’ (புஹாரி, முஸ்லிம்)

துணைத் தெரிவின் போது இந்த நான்கு பண்புகளைப் பார்க்கும் வழமையே அதிகமாக காணப்பட்டுள்ளது என்பதையே இந்த ஹதீஸ் கூறுகின்றது. மார்க்கப் பின்னணியுள்ள பெண்களை மாத்திரமே திருமணம் முடிக்க வேண்டும். ஏனைய பண்புகளைப் பார்க்கக் கூடாது என்பது இந்த ஹதீஸ் சொல்லவரும் கருத்தல்ல. இவ்வடிப்படையில் துணைவியைத் தெரிவு செய்யும் போது மார்க்கப் பின்னணியுள்ள பெண்கள் தெரிவு செய்யப்படுவது ஏற்றமானது என இமாம் குர்துபி (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

தனது பெண்பிள்ளைக்கு கணவனைத் தெரிவு செய்யும் போது பெற்றோர்கள், பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய பண்புகளையும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘நீங்கள் மார்க்கத்திலும், பண்பாட்டிலும் திருப்திப்படும் ஒருவர் உங்களிடம் வந்தால் (மணமகள் கேட்டு வந்தால்) அவருக்கு திருமணம் (உங்கள் மணப்பெண்ணை) செய்து கொடுங்கல். இல்லாவிட்டால் பூமியில் சோதனையும் அதிகமான குழப்பங்களும் ஏற்படும்’ (திர்மிதி, இப்னு மாஜா, ஹாகிம்)

எனது மகளுக்கு பலர் திருமணம் பேசி வருகின்றனர். இவர்களில் நான் யாருக்கு திருமணம் முடித்துக் கொடுப்பது என இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: அல்லாஹ்வை பயப்படுகின்றவனுக்கு மனம்முடித்துக் கொடுங்கல். அவளை அவன் நேசித்தால் அவளை கண்ணியப்படுத்துவான். அவளை அவன் வெறுத்தால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டான்’ (இஹ்யா உலூமித்தீன்).

மார்க்கப் பின்னணி என்பது இஸ்லாம் பற்றிய சரியான புரிதலுடன், அதன் வழிகாட்டல்களை வாழ்வில் எடுத்து நடப்பதைக் குறிக்கின்றது. இவர்கள் குடும்ப வாழ்வில் நோக்கங்களை சரியாக அறிந்திருப்பார்கள். அதன் பெறுமானங்களின் அடிப்படையில் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.

இத்தகைய அறிவுப் பின்னணியுடன், நடைமுறை வாழ்வில் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற கணவன், மனைவியிடம் சிறந்த பண்பாடுகள் காணப்பட்டால் அத்தகையவர்களது வாழ்வு வளம்பெறும்.

இங்கு கணவன், மனைவிக்கிடையிலான நம்பிக்கை பலமாக இருக்கும். ஒருவர் மற்றவரை புரிந்து வாழ்வார்கள். குடும்ப உறவுகளை பேணிக் கொள்வார்கள். தமது செயற்பாடுகள், தொடர்பாடல்களில் ஹலால், ஹராம் வரையறைகளைக் கடைபிடிப்பார்கள். இவர்கள் அல்லாஹ்வின் அருளுக்குச் சொந்தமானவர்களாக இருப்பார்கள்.

தொடரும்…

Leave A Comment