மரங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் மரங்களை நடுவது எவ்வளவு புண்ணியமானது. இஸ்லாம் சூழலை நேசிக்குமாறும், தாம் வாழும் இடத்தை வளப்படுத்துமாறும் எம்மை வேண்டுகின்றது. ‘அவன் தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதனை வளப்படுத்துமாறும் வேண்டுகிறான்‘ (ஹூத்:61).
மரங்களை நாட்டுவதன் மூலமாக மனிதர்கள் மாத்திரமன்றி, இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் பயனடைகின்றன. அத்தோடு நாம் வாழும் இவ்வுலகம் அழகாக மாறி, உள்ளங்களை அமைதிப்படுத்துகின்றது.
மரம் நடுவதற்கு எமது வயது தடையில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அனஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் ‘உங்கள் ஒருவரது கையில் ஒரு மரக்கன்று உள்ள நிலையில் மறுமை ஏற்படுமாயின் நீங்கள் அதனை நாட்ட முடியுமாயின் அதனை நாட்டி விடுங்கள்‘ (அல் அதபுல் முப்ரத்)
நேடியாக தான் பயன்பெறாவிட்டாலும் மரங்களை நடுமாறு இஸ்லாம் எம்மைத் தூண்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டி அல்லது ஒரு பயிரை விதைத்து அதனை (அதன் மூலமாகக் கிடைக்கும் கனியை) ஒரு பறவையோ, அல்லது மனிதனோ, அல்லது மிருகமோ சாப்பிட்டால் அது அவனுக்கு தர்மமாக அமையும்‘ (புஹாரி, முஸ்லிம்).
நாம் மரங்களுக்கு அன்பு காட்ட வேண்டும். மரங்களை நாட்டி அதனை பராமரித்து வளர்க்க வேண்டும். எமது பிள்ளைகளுக்கு இப்பயிற்சியைக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் தமது கல்வியில் உயர்வடைய இது சிறந்த வழிமுறையாகும் என கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸலாமா தனது செயற்பாடுகளில் 2018ம் ஆண்டு ‘இயற்கையை நேசிப்போம், உயிர்களைப் காப்போம்‘ எனும் தொனிப்பொருளில் பல நிகழ்ச்சிகளை செய்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் நாட்டின் பல இடங்களில் எமது அங்கத்தவர்கள் மூலமாக பல ஆயிரம் மரங்களை நாட்டினோம்.
இவ்வகையில் கௌரவ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மர நடுகை செயற்திட்டத்தில் நாமும் பங்காளிகள் ஆகுவோம்.






