முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்காகவும், பொதுக் கட்டளைச் சட்டத்திலும் மாற்றம் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இப்பிரேரணை சம்பந்தமாக ஸலாமா சொஸைடி சில அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றது.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இலங்கை போன்ற பல்லினச் சூழலில் ஒவ்வொரு சமூகத்தினுடைய மத மற்றும் தனியான அடையாளங்களை மதித்து காலனித்துவ அரசாங்கங்களினாலும், சுதந்திரத்தின் பின்னரான அரசுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள ஒரு விடயமாகும்.
இது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட விஷேடமான அனுமதியாக கருத முடியாது. நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கும் இவ்வாரான விஷேட சட்ட ஒழுங்குகள் பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தேச வளமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இதன் மூலம் முஸ்லிம் சமூகம் விவாகம், விவாகரத்து மற்றும் ஏனைய கடமைகளை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வாழ்வதற்கு உதவியாக இருக்கின்றது. இதனை நீக்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருப்பதோடு, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும் அது பாதிப்பதாக அமையும்.
முஸ்லிம்களின் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புகளினாலும் புத்திஜீவிகளாலும் தயாரிக்கப்பட்ட பிரேரணைகள் ஏற்கனவே கடந்த ஆட்சிக் காலத்தில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தினுடைய மார்க்க விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அச்சமூகத்தின் பங்குபற்றுதலுடனும், அனுமதியுடனுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி அவர்களின் சுபீட்சமான இலங்கை, இனவாதமற்ற அரசியல் போன்ற கொள்கைகளை நடைமுறைபடுத்த வேண்டுமாக இருந்தால் நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் மத கலாச்சார உரிமைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
ரத்ன தேரர் அவர்களினால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை ஜனாதிபதி அவர்களின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணாக இருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே இந்தப் பிரேரணையை ரத்ன தேரர் அவர்கள் மீளப்பெற வேண்டும் என்பதோடு, பாராளுமன்றத்தில் இவ்விடயம் விவாதத்திற்கு வருமாக இருந்தால் பல்லின சூழலை அனுமதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இப்பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் சார்பாக நாம் வேண்டிக் கொள்வதோடு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தில் கனதியான பொறுப்பு இருக்கின்றது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
ஸலாமா சொஸைட்டி
09-01-2020




