அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமாவால் முன்மொழியப்படும் பிரேரணைகள்

February 23, 2018
1,307 Views

அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமாவால் முன்மொழியப்படும் பிரேரணைகள்

அறிமுகம்

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக பொது மக்களது கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

இலங்கை நாட்டில் வசிக்கும் அனைத்து இன மக்களதும், சமூகக் குழுக்களினதும் அபிப்பிராயங்களைப் பெற்று, அவர்களது பங்களிப்பின் ஊடாக பரந்துபட்ட கலந்தாலோசனையின் மூலம் வரையப்படும் இந்தப் பொறிமுறையானது, நமது நாட்டின் ஜனநாயகப் பண்பையும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்தும்.

இந்த வகையில் கீழ்வரும் அபிப்பிராயங்களை தங்களது மேலான கவனத்திற்கு பரிந்துரை செய்கிறோம்.

  1. நாட்டைக் கட்டியெழுப்புதல்

பிரிபடாத ஒன்றுபட்ட இலங்கை என்பதன் அடிப்படையில், நாட்டை சமூக நீதி, அடிப்படை மனித உரிமை, ஜனநாயகப் பெறுமானங்களின் ஊடாக கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சட்டத்திற்கு முன் சமமாக மதிக்கப்பட்டு, சட்ட ஆட்சித் தத்துவம் பேணப்பட வேண்டும்.

  1. இலங்கையின் பன்மைத்துவம்

இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் இலங்கை நாடு உரித்தானதாகும். நாட்டின் பல்லின, பல்மத, பல்மொழி, பல்கலாசார, பன்மைத்துவப் பண்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

  1. அரசாங்க முறை

அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை முறையானது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றமானது செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரு சபைகளைக் கொண்டமைதல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்படல் வேண்டும்.

எல்லா இனங்களினதும் விகிதாசாரம் பேணப்படும் வகையில், இவ்விரு சபைகளிலும் மக்கள் பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும்.

13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள மாகாண சபை முறையில் ஆளுனரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது அமுலில் உள்ள ஒன்பது (9) மாகாணங்களும் தனித்தனியாகவே தொடர்ந்தும் இருத்தல் வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

  1. ஜனாதிபதி

மக்களால் நேரடியாக தெரிவு செய்யும் ஜனாதிபதி முறை இருத்தல் வேண்டும். ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுதல் வேண்டும். (உதாரணமாக – 19 ஆம் திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.)

  1. சிறுபான்மைக் காப்பீடும் சிறப்பு ஏற்பாடும்

சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்தது போன்ற, சிறுபான்மையினரது நலன்களையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் வகையிலான தனியான ஏற்பாடுகள் புதிய அரசியல் அமைப்பிலும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

  1. தேர்தல் முறை

தற்போதுள்ள விகிதாசார    தேர்தல் முறையே அதிக ஜனநாயகத் தன்மை வாய்ந்தது. எனினும் தேர்தல் முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படின், அது கலப்பு தேர்தல் முறையாக அமைதல் வேண்டும். (உதாரணம் – ஜேர்மன் முறை)

புதிய தேர்தல் முறையானது, எல்லா இனங்களினதும் – குறிப்பாக சிறுபான்மையினரது இன விகிதாசாரத்தின் அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைதல் வேண்டும்.

மாவட்ட சனத் தொகையில், குறைந்த பட்சம் 5 வீதம் மக்கள் தொகையைக் கொண்ட சிறுபான்மையினர் காணப்படும் பட்சத்தில், அவர்கள் சார்பான ஒரு பிரதிநிதி பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் தெரிவு செய்யப்படும் வாய்ப்பை தேர்தல் முறை உறுதி செய்தல் வேண்டும்.

அவசியமான இடங்களில் பல அங்கத்தவர் தொகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சிறுபான்மை சமூகங்களது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். இதன்போது அனைத்து சமூகங்களது பிரிதிநிதிகளது பங்கேற்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

  1. வளப் பங்கீடும் அரச நியமனங்களும்

வளப் பங்கீட்டில் முறையே தேசிய, மாகாண, மாவட்ட இன விகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும்.

அரச நியமனங்கள் திறமை அடிப்படையிலும் இன விகிதாசார அடிப்படையிலும் அமைதல் வேண்டும். இதன்போது வெளிப்படைத்தன்மை பேணப்பட்டு பாரபட்சமற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

  1. மொழி உரிமையும், மத கலாசார உரிமையும்

எல்லா மதத்தவர்களும் தங்களது மதத்தையும் கலாச்சாரத்தையும் சுதந்திரமாக பின்பற்றக் கூடிய சூழல் யாப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்பன அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிரஜையும் தனக்கு விருப்பமான மொழியில் கருமம் ஆற்றுவதற்கு வகை செய்யப்படல் வேண்டும்.

  1. ஆணைக்குழுக்கள்

அவசியமான சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதல் வேண்டும். இவ்வாறான ஆணைக்குழுக்கள் மூலம் லஞ்சம், ஊழல் கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். சமூக அநீதி ஒழிக்கப்பட்டு, சம வாய்ப்பு வழங்கப்படுவதோடு, பொறுப்புக் கூறல் உத்தரவாதப்படுதல் வேண்டும்.

  1. நீதித்துறை

நீதித்துறையின் சுயாதீனம் பேணப்படுவதோடு, நீதித்துறையின் கட்டமைப்புகள் சாதாரண மக்களுக்கு பயன்தரும் வகையில் விஸ்தரிக்கப்படல் வேண்டும்.

அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை மாகாண உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கு வகை செய்தல் வேண்டும்.

தனியான அரசியல் அமைப்பு நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்.

  1. தகவல் அறியும் உரிமையும் வாழும் உரிமையும்

தகவல் அறியும் உரிமை, வாழும் உரிமை உள்ளிட்ட அவசியமான அடிப்படை உரிமைகள் யாப்பில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

  1. மக்கள் பிரதிநிதிகள்

தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கான அடிப்படைத் தகுதிகள், ஒழுக்கக் கோவை என்பன உருவாக்கப்பட வேண்டும்.

  1. அரச கொள்கைகளும் பொதுத்திட்டமிடலும்

அரச கொள்கைகள், பொதுத் திட்டமிடலும் கட்சிகளின் விருப்பிற்கு ஏற்ப அடிக்கடி மாற்றியமைக்கப்படாமல், நிலையான மூலோபாய வழிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும். இதனை இலகு படுத்தும் வகையில் அரச கொள்கைகள் மற்றும் திட்டமிடல் தொடர்பான ஆணைக்குழுக்கள் (இந்தியாவில் உள்ளது போல்) உருவாக்கப்படல் வேண்டும்.

 

பொதுச் செயலாளர்

ஜமாஅத்துஸ் ஸலாமா

கொழும்பு

30.03.2016

Leave A Comment