அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமாவின் பிரேரணைகள் ஊடக அறிக்கை

February 23, 2018
1,153 Views

அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமா சில முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.

இலங்கை எல்லா மக்களுக்கும் உரித்தானது. இந்நாடு பல்லின, பல்மத, பல்மொழி, பல்கலாச்சாரம் கொண்ட பன்மைத்துவப் பண்புமிக்கது என்பதை அரசியல் அமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும். தகவல் அறியும் உரிமை, உயிர் வாழும் உரிமை, மொழி உரிமை, மத கலாச்சார உரிமை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உரிமைகளை அரசியல் அமைப்பு உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

பிரிபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைவதற்கான வாய்ப்புகள் குறித்து இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

13ஆவது திருத்தத்தில் உள்ளதைவிடவும் கூடுதலான அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படுவது பொருத்தமானது. அத்துடன், உள்ளுராட்சி அலகுகளுக்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் அக்கட்டமைப்புக்களை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டில் உள்ள எல்லா சமூகங்களுக்கும் அதிக பலன் கிடைக்கும்.

தற்போது அமுலில் உள்ள ஒன்பது (9) மாகாணங்களும் தனித்தனியாகவே தொடர்ந்தும் இருத்தல் வேண்டும் எனவும் அதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றமானது செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரு சபைகளைக் கொண்டமைதல் வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பலப்படுத்துகிற அதேநேரம், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி முறை அவசியம் எனவும், ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மைக் காப்பீடு போன்ற விஷேட ஏற்பாடுகளின் அவசியம் குறித்தும் இப்பிரேரணையில் வலியுறத்தப்பட்டுள்ளது.

புதிய தேர்தல்முறை நாட்டின் அனைத்து சமூகங்களதும் இன விகிதாசரத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத முறையில் அமைய வேண்டும் எனவும், அவசியமான இடங்களில் பல அங்கத்தவர் தொகுதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், எல்லை நிர்ணயத்தின்போது சிறுபான்மை சமூகங்களது அபிலாஷைகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வளப் பங்கீட்டில் முறையே தேசிய, மாகாண, மாவட்ட இன விகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும். அத்துடன், அரச நியமனங்கள் திறமை அடிப்படையிலும் இன விகிதாசார அடிப்படையிலும் அமைதல் வேண்டும். இதன்போது வெளிப்படைத்தன்மை பேணப்பட்டு பாரபட்சமற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல், மக்கள் பிரதிநிதிகளுக்கான தகுதிகள், ஒழுக்கக் கோவை, அரச கொள்கைகளும், பொதுத் திட்டமிடலும் கட்சிகளின் விருப்பிற்கு ஏற்ப அடிக்கடி மாற்றியமைக்கப்படாமல், நிலையான மூலோபாய வழிமுறைகள் உருவாக்கப்படல் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அவசியமான சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதல் வேண்டும். இவ்வாறான ஆணைக்குழுக்கள் மூலம் லஞ்சம், ஊழல் கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். சமூக அநீதி ஒழிக்கப்பட்டு, சம வாய்ப்பு வழங்கப்படுவதோடு, பொறுப்புக் கூறல் உத்தரவாதப்படுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு தொடர்பாக மக்களதும் சிவில் சமூகங்களதும் கருத்துக்களை முன்வைக்கக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பொது நன்மைக்காக நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவது இன்றியமையாதது எனவும் ஜமாஅத்துஸ் ஸலாமா தெரிவித்துள்ளது.

அரசாங்கமும் மக்கள் கருத்தறியும் குழுவும் தாங்கள் பொறுப்பை உணர்ந்து நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, இதய சுத்தியுடன் செயற்பட்டு அமைதி, சமாதானம், சுபீட்சம் நிலவும் புதிய இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என ஜமாஅத்துஸ் ஸலாமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுச் செயலாளர்

ஜமாஅத்துஸ் ஸலாமா

கொழும்பு

30-03-2016

Leave A Comment