தன்னிறைவு வாழ்வும் தாராள மனமும்
இமாம் லைஸ் இப்னு ஸஃத் (ரஹ்) அவர்கள் தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததோடு தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியில் வாழ வைக்க விரும்பினார். இதற்காக தாராளமாக செலவு செய்பவராக இருந்தார். “இவ்வுலகில் உனக்குரிய பங்கினை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நன்மையைச் செய்தது போலவே, நீயும் (மற்றவர்களுக்கு) நன்மை செய்.” (அல்-கஸஸ்:77)
இந்தத் திருவசனத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இமாம் லைஸ் அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்கள்: “மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, ஒரு தனிமனிதன் செல்வத்தைக் குவித்து வைப்பதில் நியாயமில்லை.” மேலும், ஆட்சியாளர்களும் பொறுப்பாளர்களும் மக்களுக்கு வெறும் “பிழைப்புக்கான மட்டத்தை” (حد الكفاف) மட்டும் வழங்காமல், “தன்னிறைவு மட்டத்தை” (حد الكفاية) உறுதி செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் இறைவனிடம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்தினார்கள்.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:
பிழைப்புக்கான மட்டம் (حد الكفاف): இது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச உணவு மற்றும் பானம் போன்றதைக் குறிக்கும்.
தன்னிறைவு மட்டம் (حد الكفاية): இது தரம்மிக்க உணவு, பானம் மற்றும் வசதியான உறைவிடம் என ஒரு மனிதன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.
ஸலாஹுத்தின் அய்யூபியின் சொத்துக்கள்
எகிப்து, ஷாம், சிரியா, யெமன் மற்றும் ஹிஜாஸ் போன்ற விரிவான பகுதிகளுக்கு ஆட்சியாளராக இருந்த ஸலாஹுத்தீன் அல்-அய்யூபி அவர்கள் மரணிக்கும் போது அவரிடம் 47 திர்ஹம்கள் மட்டுமே இருந்தது. ஹிஜ்ரி 589 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் போது, அவரின் ஜனாஸா செலவுக்கு கூட போதுமான பணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் தனது செல்வத்தையெல்லாம் போராட்டத்திலும், சிறைப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நிர்மாணிப்பதற்கும் செலவழித்தார்.
அவர் உலகப் பற்றற்றவராக (ஸுஹ்த்) வாழ்ந்தவர். அவர் விரும்பியிருந்தால், பூமியின் செல்வங்களை தன்வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.
உள்ளங்கள் அமைதிபெற
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
“அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன” (அர்-ரஃது:28).
மன நிறைவோடு வாழ்வதற்கான சிறந்த வழி இறைநினைவுடன் எப்போதும் வாழ்வது. அவனை எப்போதும் நினைவில் கொள்வது. காலையில், மாலையில் மட்டுமல்லாது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவன் எம்முடன் இருக்கின்றான் என்ற உணர்வுடன் வாழ்வது. காலை மாலை அவ்ராதுகள், சந்தர்ப்ப துஆக்களை தவறாமல் ஓதி வருவதும் இதில் ஒரு பகுதியே.





