முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர்

November 15, 2022
1,149 Views

எம். எச். எம். நாளிர் –

  1. அறிமுகம்

கற்றல் கற்பித்தல் என்பது மனிதனின் தோற்றத்தோடு ஆரம்பிக்கிறது. அல்லாஹ் ஆதமுக்கு பொருள்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்” (2:31) என்று அல்குர்ஆன் முன்வைக்கும் கருத்து இதனை உறுதிப்படுத்துகிறது. இங்கு அல்லாஹ் கற்பிப்பவனாகவும் ஆதம் (அலை) கற்பவராகவும் காட்டப்படுகின்றது. இது போன்றே! அல்லாஹ் மனிதனைப் படைத்தான்; அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான்” (55:02) என்றும்> அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டு மனிதன் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்தான் (96:4) என்றும் குறிப்பிடப்படுபவை> மனிதனுக்குக் கற்பிக்கும் பணியை அல்லாஹ் பொறுப்பேற்றிருக்கிறான் என்பதை சுட்டிக்காட்டப்படுவனவாக உள்ளன.

அல்லாஹ் மனிதனைப் பூமியில் தனது பிரதிநிதியாகவும் (02:30) படைத்துள்ளான். அந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு மனிதனுக்குப் புலனறிவையும்> பகுத்தறிவையும்> வஹீ மூலமான அறிவையும் வழங்கியுள்ளான். புலனறிவு மனிதனின் பிறப்போடு படிப்படியாக செயல்பட ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து பகுத்தறிவும் விருத்தியடைகின்றது. ஆனால்> வஹி மூலமான அறிவு காலத்துக்குக் காலம் அல்லாஹ்வினால் அனுப்பிவைக்கப்பட்ட றஸுல்மார்கள் மூலமாக மனிதனுக்குக் கொடுக்கப்படுகின்றது. முதல் இரண்டு வகையான அறிவும் மனிதனுக்கு இயல்பாக கிடைக்கின்றன. மூன்றாவதான வஹி அறிவு> அல்லாஹ்வினால் அமர்த்தப்பட்ட றஸுல் எனப்படும் மற்றொரு நபரினால் வழங்கப்படுகின்றது. அதனை ஏற்று பின்பற்றி நடந்தவன் வெற்றி பெறுவான். அதனைப் புறக்கணித்து வாழ்ந்தவன் தோல்வியடைவான் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.

றிஸாலத்தைப் பெற்று மனிதனுக்கு வஹி அறிவைப் போதிக்கின்ற முஹம்மத் (ஸல்) அவர்கள்> ஓர் ஆசிரியராக செயல்படுகிறார்கள். இது அவர்களுடைய நாற்பதாவது வயதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் எழுதவாசிக்கத் தெரியாதவர்கள் என்பதை அல்குர்ஆன் (7:158) சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் உம்மி நபி என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மாத்திரம் உம்மி நபியாக இருக்கவில்லை> அவர்கள் எந்த சமூகத்தில் தோன்றினார்களோ அந்த சமூகமும் உம்மிச் சமூகமாகவே இருந்தது. இதனை கல்வி அறிவில்லாத (உம்மி) மக்களில் அவர்களிலுள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர், பகிரங்கமான வழிகேட்டில் இருந்த போதிலும் அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார் (62:02) என்று அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூட, ‘நாம் படிப்பறிவில்லாத ஒரு சமூகம். எமக்கு எழுதவோ> கணிப்பிடவோ தெரியாது” (புகாரி) என இதனை உண்மைப்படுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த சமூகம்> வரலாற்றில் ஜாஹிலிய்யா சமூகம் என பதியப்பட்டுள்ளது. அச்சமூகத்தின் இறை நம்பிக்கை, ஒழுக்க வழக்கங்கள், நடைமுறைகள், குடும்ப சமூக உறவுகள் முதலான அனைத்தும் அவர்களை அறிவிலிகளாகவும்> பண்பற்றவர்களாகவும் எடுத்துக்காட்டுகின்றன. கவிதைகள் அறபிகளின் வாழ்க்கைப் பதிவேடுகள்என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றுப்படி அக்கால கவிதைகளில் காணப்பட்ட கருப்பொருள்களும், கவிதைப் போக்கும் ஜாஹிலியத்தை சித்திரிப்பனவாகவே காணப்பட்டன. மற்றொருவகையில் சொல்வதானால், ‘ஓர் இறைதூதரின் வருகையை எதிர்பார்த்து நின்ற ஒரு சமூகமாகவேஅது காணப்பட்டது. இந்தச் சமூகத்தின் ஆசிரியராக முஹம்மத் (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். தமது பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றி கண்டார்கள். அவர்களது பணியை அந்தச் சமூகம் அங்கீகரித்துக் கொண்டது. இதற்கு நபி (ஸல்) அவர்களின் பிரியாவிடை ஹஜ்ஜில் அறபாவில் கூடிநின்ற சுமார் 124,000 பெருமக்கள் முன்னிலையில், ‘நான் எனது பணியை சரியாக நிறைவேற்றினேனா?” என வினவிய போது ஆம்என ஏக குரலில் பதிலளித்தமை சிறந்த ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள், ‘நான் ஆசிரியனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” (தாரமி) என தன்னை ஓர் ஆசிரியராகப் பிரகடனப்படுத்தினார்கள். மற்றொரு ஹதீஸில், ‘அல்லாஹ் என்னை கடினபோக்குக் கொண்டவராகவோ, கஷ்டப்படுத்துபவராகவோ அனுப்பவில்லை. மாறாக, என்னை ஆசிரியனாகவும் இலகுபடுத்துபவனாகவுமே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்) எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

  1. சூழ்நிலை

நபி (ஸல்) அவர்கள், ஓர் ஆசிரியர் எனக் குறிப்பிடும் போது எமது சமகாலத்தை முன்னிறுத்தி பாடசாலை, கலைத்திட்டம் (Curriculum) பாடநூல், மாணவர் என கற்பனை செய்வது பொருத்தமற்றதாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த பிரதேசமும் காலமும் இவ்வாறான அமைப்புக்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலமாகவும் வேறுபட்ட சூழலாகவும் இருந்தது. அங்கு ஓர் அரசாங்கமோ, கற்றல் கற்பித்தலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட இடம், காலம், சூழல், திட்டம் முதலியனவோ ஆவணப்படுத்திய நிலையில் காணப்படவில்லை.

எனவே அங்கு முறைசார் கல்வி (Formal Education) முறை அமைவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. பதிலாக முறைசாரா (Non Formal) முறையில் (Informal) கல்வி முறைகளே நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருந்தது. எழுத்து வழக்கு மிக அரிதாக இருந்தமை> எழுதுவதற்கான சாதனங்கள் குறைவாக காணப்பட்டமை போன்றன செவி வழிக் கல்வி முறையினையே வேண்டி நின்றன. எனினும் ஆளிடைத் தொடர்பு, தனியாள் வேறுபாடு, படிமுறையான போதனை, கற்றல் பேறினை அவதானித்தல் போன்றன, நபி (ஸல்) அவர்களின் முறைசாரா கல்வி முறையில் கருத்திற் கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இந்தப் பண்புகளை ஒட்டிய முறையில்தான் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டுக் கொண்டிருந்த அல் குர்ஆன் ஆயத்துகள், பாடப் பொருளாக கிடைத்துக் கொண்டிருந்தன. அவற்றைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் மக்களை, குறிப்பாக இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்த ஸஹாபாக்களை தன்னுடைய மாணவர்களாக அமர்த்தி – அமைத்து, கற்றல் – கற்பித்தல் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள்.

தொடரும்…….

Leave A Comment