– எம். எம். ஏ. பிஸ்தாமி –
நாம் இன்று வளர்த்து பயிற்றுவித்து உருவாக்கும் ஆரோக்கியமான சிறுவர்கள் தான் நாளை இந்த சமூகத்தை சிறப்பாக வழிநடாத்தும் ஆகர்சனம் மிக்க, ஆளுமைமிக்க தலைவர்களாக மாறுவார்கள்.
இத்தகைய நோக்கில் சிறுவர்களை உருவாக்க தேசிய ரீதியாக விசேட செயற்றிட்டம் ஒன்று தேவைப்படுமளவு இன்றைய நிலைமை உள்ளது.
இன்று நாம் காணும் சிறுவர்களது உலகம் கைவிடப்பட்டதாக, இருண்டதாக, கவலைக்கிடமானதாக மாறி வருகிறது. திரும்பி வீடு வந்து சேருவார்கள் என நம்பி பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியாதுள்ளது.
வீட்டுச் சூழலிலும், பாடசாலைகளிலும் உடலால், உள்ளத்தால், உணர்வால் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய பருவமாக இப்பருவம் உள்ளது.
சிறுவர்களின் உணர்வுகளை உரிமைகளை அறிந்து அவர்களது உலகில் சுதந்திரமாக வாழ விட வேண்டிய தார்மீக கடப்பாடு மூத்தவர்களுக்குண்டு.
பாலியல், சிறுவர் உழைப்பு, போதைப்பொருள், வீட்டு வன்முறை என சகல வக்கிரங்களுக்கும் அகப்படக்கூடியவர்கள் சிறுவர்கள்.
இந்நிலையில் மூத்தவர்களாகிய நாம் சிறுவர்களுக்கான அழகிய உலகை அவர்களிடம் ஒப்படைக்க கடமைப்பட்டுள்ளோம் .
தேசிய மட்டத்தில் சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் வருடாந்தம் ஒக்டோபர் 1ம் திகதி கொண்டாடப்படுகிறது. அரசும் மகளிர் விவகார அமைச்சும் இணைந்து குறிப்பிட்ட வருடத்துக்கான மையப்பொருளை தீர்மானித்து பிரகடனப்படுத்தும்.
இம்முறை இன்று 01/10/2022 கொண்டாடப்பட உள்ள சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள்
සිනහ දකින අපේ ලොවක්
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்
A better future for every child
என்பதாகும்.
இத்தினத்தில் தேசிய நிகழ்வுகளும், பாடசாலை மட்ட, கிராம மட்ட நிகழ்வுகளும் இடம்பெறும். ஆங்காங்கே விளையாட்டு மற்றும் வினோத நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
அன்றைய தினத்தில் மீளவும் சிறுவர்களின் உரிமைகளை விளக்கி, பாதுகாத்து அவர்களை சுதந்திரமாக உலகில் வாழ வைக்க வழிகாட்டுவது இத்தகைய நிகழ்வுகளின் நோக்கமாகும்.
வீட்டிலும், வெளியிலும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் உழைப்பு போன்ற இன்னோரன்ன விடயங்களை கருத்தில்கொண்டு சிறுவர்கள் தொடர்பில் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் நாடு பூராகவும் நடாத்தப்பட வேண்டும் என்பதே இதன் பிரதான இலக்கு.
“சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவர்கள் எம்மை சார்ந்தவர்கள் அல்ல” என்பது நபி முஹம்மத் (ஸல்) வாயிலாக கூறப்பட்ட நபிமொழியாகும். இதுவே இஸ்லாமிய நம்பிக்கையுமாகும். சிறார்களை அன்புடன் அணுக வேண்டும். அரவணைக்க வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது உரிமைகளில் அத்துமீறுவது சட்டப்படி குற்றமாகும்.
சிறுவர்களின் உலகம் வித்தியாசமானது, விநோதமானது, விளையாட்டுத்தனமானது. அவர்களுக்கென வேறுபட்ட மொழி, வேறுபட்ட கனவுகள், வேறுபட்ட ஆசைகள், அபூர்வமான எண்ணங்கள் உணர்வுகள், கருத்துக்கள், பார்வைகள், அவதானங்கள், அபிலாஷைகள் உள்ளன. அவர்களுக்கென குதூகலமாக விளையாட எத்தனையோ விசேட விளையாட்டுகள் கூட உள்ளன.
அவற்றை நிறைவேற்றும் வகையில் பெற்றோரும் ஆசிரியர்களும் தமது அணுகுமுறைகளை வடிவமைக்க வேண்டும்.
பிள்ளைகள் விரும்பும் வகையில் அவர்களை கையாள வேண்டும். கட்டுப்பாடு என்ற வரம்புக்குள் சிக்கிக்கொள்ள விருப்பமற்றவர்கள் அவர்கள். சுதந்திரமே தமது முழு வாழ்வும் என்று கருதுவோர் தான் சிறுவர்கள். எனவே அவர்களை மிகச்சிறப்பாக அணுக வேண்டியது பெற்றோராகிய எமது கடமையாகும்.
லுக்மான் (அலை) தனது சிறிய மகனை பராமரித்த ஒழுங்கும், இப்ராஹீம் நபி தனது சிறிய மகனுடன் நடந்த முறைகளும், யஃகூப் (அலை) தனது சிறிய மகன் யூஸுப் நபியுடன் நடந்த ஒழுங்கும் திருமறையில் கூறப்பட்டுள்ளன.
நபி யஃகூப் மற்றும் மகன் யூஸுப் இருவருக்கும் இடையிலான உறவு அற்புதமானது. இது குறித்து தனி அத்தியாயமாக ஸூரா யூஸூப் பேசுகிறது
தான் கண்ட கனவைக்கூட தந்தையிடம் கூறுமளவு பெற்றோர் பிள்ளை உறவு ஆழ வேர் விட்டு வளர்ந்திருந்தது. அத்தகைய உறவு எமக்கிடையிலும் நின்று நிலைத்து நீடிக்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கிறான். குடும்ப வாழ்வின் அமைதி மற்றும் சுமுக நிலை பற்றிய உயிரோட்டமுள்ள சிறுவர் இலக்கியமாகவே விளக்குகிறான்.
அடுத்து ஸூரா லுக்மான் ஒரு முன்மாதிரி தந்தையின் வரலாற்றின் ரத்தினச் சுருக்கத்தை முன்வைக்கிறது. அவர் தன் மகனுக்கு செய்யும் வாழ்வியல் வெற்றிக்கான அர்த்தமுள்ள நடைமுறைச் சாத்தியமான அழகிய உபதேசங்களின் தொகுப்பு பிரதானமானது. உடல் உள சமுக ஈமானிய சிந்தனை சார் பரந்து பட்ட தளங்களில் ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்கி பயிற்றுவிப்பதால் மட்டுமே சமூக அக்கறை மிகுந்த பன்முக ஆளுமைகள் கொண்ட தலைவர்களை நற்பிரஜைகளை உருவாக்க முடியும்
சிறுவர்களுக்கான அழகிய உலகமொன்றை உருவாக்கிக் கொடுப்போம்





