முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர்

December 6, 2022
673 Views

எம். எச். எம். நாளிர் 

பகுதி 2 ….

  1.  மாணவர்கள் தோழர்களாக

அவர்கள் தம்மை ஆசிரியராக பிரகடனப்படுத்திய போதும் தம்மிடம் கற்கின்ற மாணவர்களை தோழர்களாகவே விளித்தார்கள்;@ நடத்தினார்கள். இது அந்தக் காலகட்டத்துக்கும், சூழலுக்கும், தேவைக்கும் மிகப் பொருத்தமான ஒரு சொற்பிரயோகமாகவே காணப்படுகின்றது.

அலி (ரழி) போன்ற சிறுவர்களும், அபூபக்ர் (ரழி) போன்ற பெரியவர்களும், கதீஜா (ரழி) போன்ற மூதாட்டிகளும், ஆயிஷா (ரழி) போன்ற சிறுமியரும், அபூதர் (ரழி) போன்ற வறியவர்களும், உஸ்மான் (ரழி) போன்ற செல்வந்தர்களும், பிலால் (ரழி) போன்ற அடிமைகளும் ஒரே வட்டத்தில் அமர்ந்து கற்றுக் கொண்ட போது தோழர் என்பது பொருத்தமான சொல்லாகவே காணப்படுகிறது. ஆசிரியர்மாணவர் தொடர்பை விட தோழமைத் தொடர்பு நெருக்கமானது. ஏற்றத்தாழ்வை இல்லாமலாக்குவது. அந்தச் சமூகத்தை கற்கச் செய்வதற்கு இவ்வகைத் தொடர்பு சாதகமாக அமைந்தமை கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

அல் குர்ஆன், நபி (ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தும் போது, ‘அல்லாஹ் நம்பிக்கையாளர் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பினான். அவர், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறான். அன்றி அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறான். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்க வழிகேட்டில் இருந்தனர்.” (3:164) என்று அவர்களின் பணியைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்தப் பணியை சரியாகவும், பொருத்தமாகவும், கச்சிதமாகவும் செய்து முடிப்பதற்கும், எவர்கள் அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வந்தார்களோ அவர்களைத் தம்வசம் ஈர்த்து வைத்துக் கொள்வதற்கும், தனது கற்பித்தலை மனமுவந்து ஏற்று அதன்படி செயல்பட வைப்பதற்கும் தோழர்ஸஹாபி என்ற சொற்பிரயோகமும், தோழமை என்ற உறவும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதை ஸீறாவைப் படிக்கும் போது விளங்கிக் கொள்ள முடிகின்றது. சிரேஷ்ட மாணவர், கனிஷ்ட மாணவர், முதிர்ந்த மாணவர், முதிரா மாணவர், மீத்திறனுடையோர், மெல்லக் கற்போர் என்ற நிலையில் அவர்களின் ஸஹாபாக்கள் இருந்த போதிலும் எல்லோரையும் சமநிலையில் கணிப்பதாக அடையாளப்படுத்துவதற்கு அந்தச் சொற்பிரயோகம் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.

மட்டுமன்றி, ஸஹாபாக்கள் தமக்குள் வேறுபடாமல் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கும் அது துணையாக அமைந்துள்ளது. அத்தோடு உள்ளத்தில் தோன்றும் ஐயப்பாடுகளை வெளிக்காட்ட முடியாத, மற்றவர்கள் தெரியக் கூடாத அல்லது மற்றவர்கள் கேட்க வெட்கப்படுகின்ற விடயங்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லித் தீர்வு பெற்றுக் கொள்வதற்கும் இது இலகுவாக அமைந்தது.

இதற்கு, உமர் (ரழி) அவர்கள் தொடர்பான ஒரு சம்பவம் பொருத்தமான உதாரணமாக அமைகிறது. இஸ்லாத்தில் ஆரம்ப கட்டத்தில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் மட்டுமே நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இஷாவுக்கு பின்னர் அடுத்த நாளுக்கான நோன்பு ஆரம்பமாகிவிடும். இதனை மறந்த நிலையில்> ஒரு நாள் உமர் (ரழி) அவர்கள் இஷாவுக்குப் பின் மனைவியுடன் உறவு கொண்டார்கள். மறுநாள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நிகழ்வை உருவகப்படுத்தி (அதனை) வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து வேறு சிலரும் தமக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டதாக முறையிட்டார்கள். இவ்வேளையில் தான் நோன்பு கால இரவுகளில் உங்கள் மனைவியருடன் (நீங்கள்) உறவு கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது” (2:187) என்ற அல்குர்ஆன் வசனம் அருளப்பட்டதாக முபஸ்ஸிரீன்கள் குறிப்பிடுகின்றனர்.

மார்க்கத் தீர்ப்பை அறிய வேண்டிய இரகசியமான விடயங்களையும் ஸஹாபாக்கள் தமது ஆசிரியரிடம் முன்வைத்துத் தீர்வு கண்டமைக்கு ஸஹாபி என்ற குறியீடு பயன்பட்டதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது.

ஒரு முறை மதீ பற்றித் தெரிந்து கொள்ள விரும்பிய அலி (ரழி) அவர்கள், தமது மாமன் முறையான நபி (ஸல்) அவர்களிடம் நேரில் கேட்க வெட்கப்பட்டு மற்றொரு ஸஹாபி மூலம்@ நபி (ஸல்) அவர்களை அணுகி, கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். (புகாரி) என்பது மற்றோர் ஆதாரமாகும்.

தொடரும்

Leave A Comment