முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர்

January 2, 2023
905 Views

எம். எச். எம். நாளிர் –

 பகுதி – 3

  1. திறந்த பாடசாலை

நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கைப் பகுதியில் தாருல் அர்கம் எனும் நிறுவனமும் மதீனா வாழ்க்கைப் பகுதியில் மஸ்ஜிதுந் நபவி என்ற நிறுவனமும் கல்விக் கூடம் என்ற அமைப்பில் இயங்கினாலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு திறந்த பாடசாலை முறையினையே இயக்கி வந்தார்கள். இதனால் கற்றல், கற்பித்தலுக்கான தனியிடமோ, குறிப்பிட்ட நேரமோ, வகுக்கப்பட்ட பாடத்திட்டமோ, வயதெல்லையோ அங்கு நோக்கப்படவில்லை. பயணங்கள், வீதியோரங்கள், ஸஹாபாக்களின் வீடுகள் போன்றவற்றிலும் கற்றல், கற்பித்தல் பணி இடம் பெற்றது. கற்றலுக்கான ஆர்வம், ஒழுங்கு, உளத்தூய்மை முதலான பண்புகள் எங்கும் காணப்பட்டன. ஆசிரியரது பங்களிப்பும் மாணவர்களின் பங்கேற்பும் சுமுகமாக இடம்பெற்றன. எது, எப்போது, எப்படி கிடைக்கப்பெற வேண்டுமோ அது அப்படியே கிடைத்தது. ஆசிரியர் எப்போதும் கற்பிக்கத் தயாராக இருந்தார். மாணவர் எப்போதும் கற்பதற்குத் தயாராக இருந்தார்கள். இதனால் நாள் முழுதும் அங்கு கற்றல், கற்பித்தல் பணி இடம் பெற்று வந்தது.

ஹிஜ்ரி இரண்டாமாண்டில் இப்னு நவ்பா என்பவரின் வீட்டில் தாருல் குர்ராஎனும் பெயரில் ஒரு கல்விப் பீடம் காணப்பட்டதாகவும், மஸ்ஜிதுன் நபவியைத் தவிர மதீனாவில் ஒன்பது சிறிய பள்ளிவாசல்களில் ஸஹாபாக்களின் பொறுப்பில் பாட போதனை இடம் பெற்றதாகவும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

ஜமாஅத் தொழுகை முடிந்ததும் மஸ்ஜித் கல்வி வட்டங்கள் கூடும். அங்கு கற்றல் பணி இடம் பெறுவதோடு சுதந்திரமாக கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டிருந்தன. மார்க்கக் கல்வியோடு ஆண்களுக்கு குதிரைச் சவாரி, அம்பெறிதல், நீச்சல், மற்போர் பயிற்சிகளும், பெண்களுக்கு தையல் பயிற்சிகளும் வழங்கப்பட்டதாக கலாநிதி எம். ஹமீதுல்லாஹ் மேற்கோள் காட்டியுள்ளார். இவ்வாறான கல்விக் கூடங்களுக்கு முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் மேற்பார்வையாளராக அமர்த்தப்பட்டிருந்தார். இவை, நபி (ஸல்) அவர்கள் உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றுக்குமான பயிற்சியை வழங்கி சிறந்த ஆளுமையுடையவர்களை உருவாக்க முயற்சிக்கும் தலைமை ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

நபி (ஸல்) அவர்கள், தன்னை ஓர் ஆசிரியராகவும் பிரகடனப்படுத்தியதில் மூன்று அம்சங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று முன்மாதிரி சக்திவாய்ந்த ஓர் ஆசிரியர் (ஜிப்ரீல்) அவருக்கு கற்றுக் கொடுக்கிறார் (53:05) என்பது அல் குர்ஆனின் உத்தரவாதமாகும். அடுத்தது நபிமார்கள் பிரதிபலனை எதிர்பார்த்து பணியாற்றுவதில்லை என்ற உண்மையாகும். இதனை அல் குர்ஆன்> ஒரே ஸூறாவில் ஐந்து இடங்களில் குறித்துக் காட்டுகின்றது. உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலிகள் அனைத்தும் உங்களைப் படைத்து இரட்சிக்கும் பாதுகாவலனிடமே இருக்கிறது. (26:109. 127, 145, 164, 180) என நபிமார்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க 25:57, 34:47, 38:86) மூன்றாவது, எனது அறிவை விருத்தியாக்குவாயாக (20:114) என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குப் பணித்திருக்கின்றான்.

இங்கு> ஆசிரியர், தனது பணிக்கான அறிவையும், பக்குவத்தையும், பயிற்சியையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதும், அவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்ள வேண்டுமென்பதும், தமது பணியை இக்லாஸுடன் நடத்த வேண்டுமென்பதும், பணிக்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற உறுதியுடன் நிறைவேற்ற வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்படுகின்றன.

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கக் கூடிய அழகான முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. (33:21) என்று அல் குர்ஆன் குறிப்பிடுவது வாழ்வின் எல்லாத்துறைகளுக்குமான முன்மாதிரி வழிகாட்டல் அவர்களிடம் காணப்படுவதை சுட்டிக்காட்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சிறந்த கணவனாக, குடும்பத் தலைவனாக, சமூகத் தலைவராக, ஆட்சியாளராக, நீதிபதியாக, தளபதியாக, சமூக சீர்திருத்தவாதியாக என பல துறைகளில் முன்மாதிரியாக அமைந்தார்களோ அவ்வாறு ஆசிரியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக செயற்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து, உலகத்துக்கு ஓர் அருள் (21:107) எனவும், அனைவருக்குமான தூதர் (7:158) எனவும், நன்மையை ஏவி தீமையைத் தடுத்து, நல்லவற்றை ஆகுமாக்கி, கூடாதவற்றைத் தடுத்து மக்கள் மீதான சுமைகளையும், விலங்குகளையும் நீக்குபவர் எனவும் (7:157) பிரகாசிக்கும் விளக்கு எனவும் (33:46) சுட்டிக் காட்டப்படுகின்றது.

பிரகாசிக்கும் விளக்கு (ஸிராஜுன் முனீரா) என்ற சொற்பிரயோகம், நபி (ஸல்) அவர்கள், என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்துக் காட்டும் அதே வேளை, விளக்கேற்றும் விளக்காக இருப்பதை சூசகமாக சொல்லிக் காட்டுகின்றது எனவும் கொள்ளலாம். அதாவது சந்ததி சந்ததியாக அவர்களது போதனைகளும் சாதனைகளும் சங்கிலித் தொடர்போல மறுமை வரை தொடர்ந்து செல்கின்றன. இதற்கு, ஹதீஸ் அறிவிப்பாளர்களில் (ராவிகள்) பெயர் வரிசை (இஸ்னாத்) ஹதீஸ் கலையில் நீண்டு செல்வதை உதாரணமாக சுட்டிக் காட்டலாம். ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்ட போதும் தொகுப்பாசிரியர் ராவியாக அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். எனவே மாணவப் பரம்பரையில் அவசியத்தை சுட்டிக் காட்டும் ஒரு சொற்றொடராகவும் இதனைக் கொள்ளலாம்.

 தொடரும்…

Leave A Comment