மனிதநேயம் தலைத்தோங்கட்டும்

February 7, 2020
1,468 Views

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

மனிதத்திற்கு பெறுமானம் குறைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். சடப்பொருளுக்குக் காணப்படும் முக்கியத்துவம் இன்று மனிதனுக்கு இல்லாமல் உள்ளது. பெறுமதியற்ற ஒரு படைப்பாக மனிதன் மாறி விட்டான்.

பல நாடுகளில் நடைபெறுகின்ற உள்நாட்டு யுத்தங்கள், நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. மில்லியன் கணக்காக மக்கள் அகதிகளாகவும், நிரந்தர நோயாளிகளாகவும் ஆகிவிட்டனர். பல இலட்சம் பேர் தொழிலற்று பாதையோரங்களில் கையேந்தி வாழ்ந்து வருகின்றனர்.

தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை, சொந்த இலாபங்கள், நலன்களை அடைந்து கொள்வதற்காக மனிதன், ஏன் மனித சமூகங்கள் இன்று பலியாக்கப்படுகின்றன. இது தனிநபர்களாகவும் நடைபெறுகின்றது. நாடுகளாகவும் அரங்கேற்கப்படுகின்றது.

ஒரு பக்கத்தில் பல்தேசியக் கம்பனிகள் உலக வளங்களை தனதாக்கும் திட்டத்தில் முன்னேறிச் செல்ல, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கின்றது.

இத்தகைய உலகில் வாழும் நாம் மனித நேயத்தை, மானுடப் பண்பை மீண்டும் கட்டியெழுப்பி, பலப்படுத்த வேண்டிய தேவையில் உள்ளோம். இது பற்றிய சில கருத்துக்களை இங்கு நோக்குவோம்.

மனிதன் அல்லாஹ்வின் சிரேஷ்டமான படைப்பு

இஸ்லாம் மனிதனை மிக உயர்ந்த படைப்பாகப் பார்க்கின்றது. அல்லாஹ் தனது ரூஹை மனிதனில் ஊதி அவனை தனது அனைத்துப் படைப்புகளிலும் சிரேஷ்ட படைப்பாகப் படைத்தான். அவனை இப்புவியில் வாழும் படைப்பினங்களுக்கு மத்தியில் கண்ணியமானவனாக ஆக்கினான்.

‘நிச்சயமாக நாம் மனித சமூகத்தை கண்ணியப்படுத்தினோம். கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்கு நல்ல உணவுப் பொருட்களை அளித்தோம். நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (இஸ்ரா: 70)

மனிதன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்து, பொறுப்புக்களையும் வழங்கினான். இதன் காரணமாக மனிதன் ஏனைய படைப்புகளை விட்டும் வேறுபடுகின்றான். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். இதன் மூலம் நீதியான முறையில் மனிதர்கள் செயற்பட வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்கின்றான்.

மானுடத்தின் அடிப்படை கௌரவமான வாழ்க்கையே

மானுட சமூகத்தின் உயர்சிக்காக உழைப்பது மானுடப் பண்பின் உயர்ந்த இலக்காகும். அனைத்து மனிதர்களும் வாழும் உரிமையைப் பெற்றவர்கள். அவர்கள் நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதற்கான வழிகள் செய்யப்பட வேண்டும். அவனது உயிர், மானம், செல்வம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதம் காணப்பட வேண்டும்.

எந்த ஒரு மனிதனும் மற்றவர் துணையின்றி தனித்து வாழக்கூடிய அமைப்பு இவ்வுலகில் கிடையாது. மனிதர்கள் தமக்கு மத்தியில் ஒருங்கிணைந்து, ஒத்துழைத்து வாழ வேண்டும் என்பது படைத்தவனின் விதியாகும்.

ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைத்து உதவி செய்யும் போது மனித சமூகத்தின் தேவைகள் நிவர்த்திக்கப்படுகின்றன. அனைவரும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் மனித நேயம் வளர்கின்றது.

இதற்கு மாற்றமாக செயற்படும் போது மானுட சமூகத்துக்கு மத்தியில் சச்சரவுகள், குரோதங்கள் தான் வளர்கின்றன. ஒருவரை அடுத்தவர்கள் குறிவைக்கும் நிலை தோற்றம் பெறும். இதன்போது மனிதநேயம் இல்லாத படைப்புகளின் செயல்கள் தான் நாம் காணலாம். இது ஒரு சாபக்கேடு.

பன்மைத்துவ சமூகத்தில் மனிதநேயம்

மனிதநேயம் மேலோங்க மனிதனை மனிதனாகப் பார்க்கும் பெறுமானம் மேலோங்க வேண்டும். இன, மத, நிற, குல, மொழி அடிப்படையில் பார்க்கும் கண்ணோட்டம் சுருங்க வேண்டும். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த வழிகாட்டுகின்றன. குலம், நிறம், மொழி என்பன மானுட சமூகத்தை இலகுவாக அறிந்து கொள்வதற்குத் துணை செய்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரின் ஜனாஸாவைக் கண்ட போது அதற்காக எழுந்து நின்றார்கள். தன்னை தூற்றிய பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து உதவி செய்தார்கள். தாயிப் நகரத்து மக்கள் தன்னை வரவேற்காது நோவியை செய்த போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தண்டனை இறங்குவதை விரும்பவில்லை.

மக்கா வெற்றியின் போது கதிகலங்கியிருந்த மக்கத்து முஷ்ரிகீன்களை அருள் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பேதங்களைத் தாண்டிய மனிதாபிமானத்துக்கு கொடுத்த அந்தஸ்தைக் காட்டும் அடையாளங்களாகும்.

ஒரு குடும்பத்தில் சிலபோது ஏழைகள் இருக்க முடியும். அதே குடும்பத்தில் வசதியுள்ளவர்கள் இருப்பார்கள். இந்த வசதியுள்ளவர்கள் தமது குடும்பத்தைச் சேர்ந்த ஏழைகளைக் கவனிக்காமல் தாம் சுகபோக வாழ்வில் ஈடுபடுவது எவ்வகையில் மனிதாபிமானதாகும்.

அதேபோல் பக்கத்து வீட்டார் பசித்திருக்க தான் வயிறார சாப்பிட்டு தூங்குவது ஈமானைக் காட்டும் செயலாகாது என்ற நபிவாக்கு மனிதநேயத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இங்கு பக்கத்து வீட்டார் என்று நபியவர்கள் கூறும் போது இன, மதத்தை தொடர்புபடுத்தாமல் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஏழைகள், அநாதைகளைப் பராமரிப்போம்.

தனிப்பட்ட, குடும்ப, சமூகக் காரணங்களால் இன்று சமூகத்தின் எத்தனையோ பேர் அநாதைகளாக உள்ளனர். விதவைகள் கையேந்தி வாழ்கின்றனர். முதியோர்கள் இல்லங்களில் வாழும் பெற்றோர்களும் எமது நாட்டில் உள்ளனர். வறுமையின் காரணமாக தொழிலற்று, வாழ்வதற்கு வழியில்லாமல் பாதையோரங்களில் நடமாடும் ஆயிரக்கணக்காக மனிதர்கள் எமக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

இலங்கையில் 30 வருடங்களாக நீடித்த யுத்தத்தின் காரணமாக எத்தனையோ குடும்பங்கள் தமது தந்தையை, மகனை இழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகையவர்களுக்கு நாம் அன்பு செலுத்த வேண்டும். உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவர்களின் துயரைத் துடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஊர் மட்டங்களில், தேசிய அளவில் காணப்பட வேண்டும். இது அல்குர்ஆனின் உயர்ந்த போதனைகளின் அழகிய பக்கங்களில் ஒன்றாகும். இவ்வாறான பணிகள் சமூக மட்டத்தில் நடைபெறாமல் இருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது. ‘அப்படியல்ல, நீங்கள் அநாதையை கண்ணியப்படுத்துவதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை’ (பஜ்ர்:18-19) என அல்குர்ஆன் கூறுகின்றது.

ஏழைகள், அநாதைகள் கவனிப்பாரில்லாமல் கைவிடப்பட்டுள்ள சமூகத்தில் மறுமை அல்லது மார்க்கம் பற்றிய நம்பிக்கையில் கோளாறு இருப்பதாக சூரா அல் மாஊன் விளக்குகின்றது.

அநாதையைப் பராமரிப்பவனும் நானும் சுவனத்தில் ஒன்றாக இருப்போம் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது இரு விரல்களையும் சேர்த்துக் காட்டினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்). இது அநாதையைப் பராமரிப்பவன் மறுமையில் அடையவுள்ள உயர்ந்த பதவியைக் காட்டுகின்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிப்போம்

மாற்றுத்திறனாளிகள் எமது சமூகத்தின் ஓர் அங்கமாகும். இவர்களிடமும் திறமைகள் உள்ளன. இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்களல்லர். இவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் சமூக மட்டத்தில் காணப்பட வேண்டும்.

போராட்டங்கள், வீதி விபத்துக்கள், பிறப்பின் போது காணப்பட்ட குறைபாடுகள், சண்டை சச்சரவுகள் போன்ற பல காரணங்களால் மனிதனின் வாழ்வில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அவன் தனது உடலின் சில உறுப்புக்களை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகின்றான். இவர்களை பராமரிப்பது அவர்களது குடும்பத்தின் நேரடிக் கடமையாகும். இல்லாத போது அவர்களைப் பராமரிப்பது சமூகத்தின் கடமையாக மாறி விடுகின்றது.

இவர்கள் தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் சுமையாக இல்லாமல் வாழ்வதற்கான வழிவகைகள் தொடர்பில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இவர்களது வாழ்க்கை மேம்படும் போது இதன் விளைவாக நாடு மேம்படுகின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் இத்தனைய மாற்றுத்திறனாளிகளுக்கு விஷேட ஏற்பாடுகள் காணப்பட்டன. கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது ஆளுகைக்குற்பட்ட பிரதேசத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டினார்கள். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இவர்களைக் கவனிப்பதற்கு அரச பொது நிதியில் இருந்து செலவிடப்பட வேண்டும் என்ற சட்டத்தை வகுத்தார்கள்.

கலீபா வலீத் இப்னு அப்தில் மலிக் வெண்குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை செய்தவற்காக ஹிஜ்ரி 88ல் வைத்தியசாலையை நிர்மாணித்தார்கள். இவர்களைக் கவனிப்பதற்காக ஒவ்வொரு நோயாளிக்கும் தனியான ஒரு கட்டிலும், ஒரு பணியாளையும் நியமித்தார்கள். கலீபா மஃமூன் பார்வையற்றவர்களைப் பராமரிப்பதற்கான இல்லங்களை பக்தாத் போன்ற பெரும் நகரங்களில் கட்டினார்கள்.

நீதி, நியாயம் சமூகத்தை ஆழ வேண்டும்.

நீதி அனைத்து மதங்கள், சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்ற ஓர் அடிப்படைப் பெறுமானமாகும். நீதி முறையாக நிலைநாட்டப்படும் போது அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழும் நிலை உருவாகும். முறையற்ற, தகாத செயல்கள் குறைவடையும். நல்ல செயல்களுக்கான வரவேற்பு கிடைப்பதுடன், அவைகள் சமூக, நாட்டு மேம்பாட்டுக்கான பணிகளாக மாற்றமடையும்.

மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நிரபராதிகளே என்ற விதிக்கமைய மனிதர்கள் கையாளப்பட வேண்டும். நிரபராதி ஒருவரை தண்டிப்பது குற்றவாளியை தவறுதலாக விட்டுவிடுவதை விட பாரதூரமானது என்ற இமாம் கஸ்ஸாலியின் கருத்து எவ்வளவு இக்காலத்துக்குப் பொறுத்தமானது.

Leave A Comment