ஸலாமா வாராந்த நினைவூட்டல் 27

October 16, 2026
6 Views

தூய்மையான ஆலோசனை பயனுள்ள விளைவு

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல் புஹாரி எனும் ஹதீஸ் கிரந்தத்தை தொகுத்ததற்கான காரணம் உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இது பற்றி இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்:
‘நாங்கள் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்களிடம் இருந்தபோது ‘நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான ஸுன்னாக்களைச் சுருக்கமாகத் தொகுத்த ஒரு நூலை நீங்கள் உருவாக்கினால் நன்றாக இருக்குமே!’ எனக் கூறினார்.”
இது பற்றி இமாம் புஹாரி (ரஹ்) கூறுகின்றார்:
‘இந்த வார்த்தை என் உள்ளத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் நான் அல்-ஜாமிஉஸ் ஸஹீஹ் நூலைத் தொகுக்க ஆரம்பித்தேன்.”
மிகவும் நம்பகமான ஹதீஸ்களை இமாம் புஹாரி (ரஹ்) தனது கிரந்தத்தில் தொகுத்தார்கள்.
இமாம் இஸ்ஹாக்கின் தூய்மையான ஆலோசனை இமாம் புஹாரியின் தூய்மையான முன்னெடுப்பு ஆகிய இரண்டையும் கொண்டு ஸஹீஹுல் புஹாரியை அல்குர்ஆனுக்கு அடுத்த மிகச் சிறந்த நூலாக அல்லாஹ் ஆக்கினான். எவ்வளவு பெரிய பாக்கியம்.

மக்களைப் பற்றி நல்லெண்ணம் வைக்க வேண்டும்

இமாம் அல்-கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘தீய எண்ணம் (سوء الظن) கொள்வது தீய வார்த்தைகளைப் பேசுவது போன்றே தடுக்கப்பட்டதாகும். பிறரைப் பற்றிய குறைகளை உமது நாவினால் மற்றொருவரிடம் பேசுவது எவ்வாறு உமக்குத் தடை செய்யப்பட்டுள்ளதோ அதேபோன்று உமது உள்ளத்தில் உமது சகோதரனைப் பற்றி தீய எண்ணம் கொள்வதும் உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.”
மேலும் அவர் கூறுகிறார்:
“தீய எண்ணம் கொள்வது தடை செய்யப்பட்டமைக்கான காரணம் உள்ளங்களின் இரகசியங்களை நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. எனவே பிறரைப் பற்றி தீய எண்ணம் கொள்வதற்கு உமக்கு உரிமையில்லை. எந்தவொரு விஷயமும் எந்த விதமான வேறு விளக்கத்திற்கும் இடமில்லாத வகையில் உமக்கு வெளிப்படையாகத் தெரிய வரும் வரை ஒருவரைப் பற்றி தீய எண்ணம் கொள்ளக் கூடாது.
அத்தகைய ஒரு விடயம் உமக்கு நேரடியாகத் தௌிவாகத் தெரிந்து விட்டால் நீங்கள் அறிந்ததையும் நேரில் கண்டதையும் நம்பாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் உமது கண்களால் காணாததும் உமது காதுகளால் கேட்காததுமான ஒரு விடயம் உமது உள்ளத்தில் தோன்றினால் அது நிச்சயமாக ஷைத்தான் உமக்குள் ஏற்படுத்திய எண்ணமாகும். எனவே அந்த எண்ணத்தை நீங்கள் பொய்யானது என மறுத்துவிட வேண்டும்.”

ஸதகா

சதகாக்கள்
அல்லாஹ்வின் அன்பு – திருப்தி மறுமையில் நிழல் நரக விடுதலை நோய் நிவாரணம் செல்வத்தில் பரகத் மற்றும் பல நன்மைகளைப் பெற்றுத்தர போதுமானதாகும்.

Leave A Comment