ஸலாமா வாராந்த நினைவூட்டல் 24

September 24, 2026
36 Views

ஒரு முஃமின் பாவங்களை அந்நியமானதாகவே பார்ப்பான்.

ஈமானும் செயலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதன் பொருள் ஈமான் கொண்டிருப்பவர் தவறு செய்யமாட்டார் என்பதல்ல. ஒரு முஃமின் தவறிழைக்கக்கூடும்.
அவரிடமிருந்து நிகழக்கூடிய தவறுகளும் பாவங்களும் அவரை மார்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடுவதில்லை.
ஒரு மனிதன் ஈமானில் வலிமையானவனாகவும் அல்லாஹ்வை அதிகமாகக் கண்காணிப்பவனாகவும் அதிகமான வணக்கங்களில் ஈடுபடுபவனாகவும் இருக்கும்போது அவனுடைய தவறுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அவன் செய்யும் தீமைகளை அவன் பொது விதிக்கு மாறானதாகவும் தன் வாழ்க்கைக்கு அந்நியமானதாகவும் பார்ப்பான்.
இத்தகைய நிலையில் உள்ள ஒருவரின் தவறுகளுக்குத் தனித்தன்மையான இயல்பு இருக்கும். அவர் அந்தத் தவறை நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதில் தொடர்ந்து நிலைத்திருக்கமாட்டார். அதனைச் சார்ந்தும் இருக்கமாட்டார்.
தனது இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் தனது செயல்களையும் எதிர்ப்பார்ப்புக்களையும் மட்டுமே சிந்தித்துக்கொண்டு செல்லும் ஒரு பயணியைப் போன்றவர் அவர். எதிர்பாராதவிதமாக ஒரு பள்ளத்தில் அவரது கால் சிக்கினாலோ அல்லது வழியில் ஒரு சிறிய கல்லில் இடறினாலோ அவர் தடுமாறி நிலைகுலைந்து தரையில் விழுந்து விடுவார்.
அவர் விழுந்தவுடன் எழுந்து நிற்பதற்கு விரைந்து அந்த இடறலினால் ஏற்பட்ட துன்பத்தையும் வலியையும் கடுமையாக உணர்வார்.
அதேபோன்று ஒரு முஃமினின் பாதையில் தடுமாற்றம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தாலும் அவர் அல்லாஹ்வை நோக்கிய தனது பயணத்திலேயே இருப்பார். அவரிடமிருந்து அது நீங்கும் வரை அந்தத் தவறைச் செய்ய அவர் தொடர்ந்து முயற்சி செய்யமாட்டார். ஏனெனில் அவர் ஆழமான வேதனையை உணர்வார்.
இந்தத் தடுமாற்றங்கள் முஃமினின் வாழ்க்கையை அழித்து விடுவதுமில்லை. அவரது தன்மையையும் அழித்துவிடுவதுமில்லை.

வுழூவைப் பேணிச் செய்வதன் மூலம் சுவனத்தை அடைவதற்கான வாய்ப்பு

உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் யார் வுழூ செய்து அதைப் பூரணமாகவும் முழுமையாகவும் செய்து பின்னர்
أشهد أن لاإله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
என்று கூறுகிறாரோ அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறந்து கொடுக்கப்படும் அவர் விரும்பிய வாயில் வழியாக சுவர்க்கத்துக்குள் நுழையலாம்.” ஆதாரம் : முஸ்லிம்

ஸதகா

நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக (அவனுடைய வழியில் செலவு செய்து) கடன் கொடுத்தால் அவன் அதை உங்களுக்குப் பன்மடங்கு ஆக்கித் தருவான்; மேலும் உங்களுக்கு மன்னிப்பும் வழங்குவான். ஏனெனில் அல்லாஹ் மிகவும் நன்றியுடையோன்; மிக்க பொறுமையுடையோன். (அல்-குர்ஆன்)

Leave A Comment