வறுமையும் உழைப்பும்
வறுமைப்பட்டவனால் ஸகாத்தை, ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. இஸ்லாம் உழைக்குமாறு எம்மிடம் வேண்டுகின்றது. உழைப்பின் போது ஹலால் – ஹராம் வரையறைகளைப் பேணுமாறு போதிக்கின்றது. வசதியுள்ளவர்கள் மீதே ஸகாத், ஹஜ் கடமையாகின்றது. இதனால் தான் உழைப்பதை ஓர் உயர்ந்த இபாதத்தாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாம் வறுமையை ஆதரிக்கவில்லை. வறுமையிலிருந்து நபி (ஸல்) அவர்கள் நாளாந்தம் பாதுகாப்புக் கேட்பவர்களாக இருந்தார்கள். வறுமைப்பட்டவனால் இஸ்லாத்தின் இரு பெரும் தூண்களான ஸகாத்தை, ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. அபூ பக்ரா நுபைஃ பின் அல்-ஹாரிஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் பின்னர்
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ
என கூறுபவர்களாக இருந்தார்கள் ‘யா அல்லாஹ், இறைநிராகரிப்பு, வறுமை மற்றும் கப்ரு வேதனையில் இருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்’ ”. (அஹ்மத், நஸாஈ)
துஆவுக்கான பதில் நிச்சமயாக ஒரு நாள் கிடைக்கும்
இப்னு அல்-ஜௌஸி (ரஹ்) கூறுகிறார்கள்:
“அல்லாஹ் ஒரு முஃமினின் துஆவை மறுப்பதில்லை என்பதை அறிந்து கொள். ஆனால் சில சமயங்களில் அடியார்களின் பல நன்மைகளுக்காக அல்லாஹ் தாமதித்து பதிலளிப்பான். மேலும், அடியார் கேட்டது அவனுக்கு முழுமையாக நன்மையாக இருக்காமலும் இருக்கலாம். அப்படியானால், அதற்குப் பதிலாக அவனுக்கு நன்மை உள்ளதையே அல்லாஹ் வழங்குவான். சில வேளைகளில், அடியானின் துஆவூக்கான பதில் மறுமை நாள் வரை தாமதிக்கப்படலாம். ஆகவே, துஆவுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு முஃமின் துஆவை நிறுத்திவிடக் கூடாது. ஏனெனில், துஆ செய்வதே ஒரு வணக்கமாகும். மேலும், அல்லாஹ் எமக்காக நன்மை என்று எதனைக் கருதுகின்றானோ அதற்கு நாம் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.”
மக்கள் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நீ விரும்புகிறாயோ,
நீயும் அவர்களிடம் அப்படியே நடந்துகொள்.
ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹ்) கூறுகிறார்கள்:
“நீ ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ள முற்படும்போது, உன்னை அவர் நிலையில் வைத்துப் பார். உன்னிடம் ஒருவர் அவ்வாறு நடந்துகொள்வதை நீ விரும்பினால், நீயும் அவரிடம் அவ்வாறே நடந்துகொள். உன்னிடம் அவ்வாறு நடப்பதை நீ வெறுத்தால், நீயும் பிறரிடம் அவ்வாறு நடந்துகொள்ளாதே. நிச்சயமாக, இந்த அளவுகோல்தான் (தராசு) மிக நீதியானது. இதுவே மக்களின் அன்பையும், ஒரு மனிதருக்கான நன்மதிப்பையும் பெற்றுத் தரும்.”




