ஷூரா எனும் பொறிமுறையைப் பலப்படுத்துவோம் (03)

June 29, 2020
1,421 Views
  • உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்

முடிவு யாருடையது ?

ஷூரா தொடர்பான விவகாரங்களில் ”முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கு காணப்படுகின்றது” என்பது முக்கிய இடத்தை எடுத்துள்ளது. அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் தலைவருடன் தொடர்பான ஒரு விடயமா, அல்லது கூட்டத்தின் பெரும்பான்மையினர் கருதும் கருத்துக்கு ஏற்ப முடிவுகள் பெறப்பட வேண்டுமா?

சமூக மட்டத்தில் ஷூரா எனும் பொறிமுறையை அமுலாக்கும் பல நிறுவனங்களில் இது பற்றிய தெளிவு இல்லாத நிலை காணப்படுகின்றது. அல்லது தலைவரின் கருத்துக்கு தலைசாய்க்கும் போக்கை நாம் பல இடங்களில் காணலாம்.

மற்றும் தலைவரின் சொல்லை மீறி கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்ற மனோநிலையும் சமூக மட்டத்தில் காணப்படுகின்றது. அவ்வாறு தலைவரின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தெரிவிப்பது பிழை என்ற நிலைப்பாடும் உள்ளது. இன்னும் சில இடங்களில் தலைவரின் கருத்துக்கு முன்னால் கருத்துத் தெரிவிக்கப் பயப்படுவோரும் காணப்படுகின்றனர்.

இது விடயமாக இஸ்லாமிய அறிஞர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். குறிப்பாக தற்கால உலமாக்கள் இது தொடர்பான ஷரீஅத் நிலைப்பாட்டை விரிவாக எழுதியுள்ளனர். இது தொடர்பான சில கருத்துக்களை இங்கு நோக்குவோம்.

கலந்துரையாடலின் பின்னர் தலைவர் பொருத்தமாகக் கருதும் கருத்தை முடிவாகப் பெற முடியும் என்ற கருத்தில் பொதுவாக ஆரம்பகால அறிஞர்கள் உள்ளனர். அதற்கு ஒரு நியாயம் உள்ளது. ஒரு நாட்டின் தலைவர் முஜ்தஹிதாக (சட்ட வல்லுனராக) இருக்க வேண்டும் என்ற கருத்து அறிஞர்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளது. இதனால் சட்டங்கள் பெற தேவை ஏற்படும் சயமத்தில் தலைவர் அதற்கு தகுதி பெற்ற நிலையில் இருக்கின்றார் என்ற வகையில் அப்படியான ஒரு கருத்தை அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் ஸீராவைப் படிக்கும் போதும், ஸஹாபாக்களின் நடைமுறையைப் பார்க்கும் போதும் ஷூராவின் பெரும்பான்மைக் கருத்தை முடிவாக எடுக்க வேண்டும் என்பதே பலமான கருத்தாக உள்ளதாக கலாநிதி அஹ்மத் ரைஸூனி கருதுகின்றார்.

இக்கருத்தை அதிகமான இஸ்லாமிய அறிஞர்களும் கொண்டுள்ளனர். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, முஸ்தபா அஸ் ஸிபாஇ, மஹ்மூத் ஷல்தூத், மஃரூப் தவாலீபி, ஸஈத் ஹவா, தவ்பீக் ஷாவி, அப்துல் கரீம் ஸைதான், யூசுப் அல் கர்ளாவி, அலி முஹம்மத் ஸல்லாபி, அக்ரம் ழியா அல் உமரீ போன்ற பலர் இக்கருத்தில் உள்ளனர்.

நபி (ஸல்) அவார்கள் இது பற்றிய வழிகாட்டல்களையும் தலைமைக்கு கூறியுள்ளார்கள். ”நீங்கள் இருவரும் (அபூபக்ர், உமர்) ஒரு கருத்தில் உடன்பட்டால் அதற்கு நான் முரண்பட மாட்டேன்” என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்).

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உறுதி என்பது என்ன என்று வினவிய போது : அறிவுள்ளவரிடம், (மற்றொரு அறிவிப்பில் கருத்துள்ளவரிடம்) கலந்தாலோசனை செய்து அதற்குக் கட்டுப்படுவதாகும் எனக் கூறினார்கள். (பத்ஹூல் பாரி).

பத்ர் யுத்தம் தொடர்வது பற்றி நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அபூபக்ர், உமர், மிக்தாத் போன்ற ஸஹாபிகள் தமது கருத்துக்களை தெரிவித்தார்கள். எனினும் நபியவர்கள் அன்ஸாரித் தோழர்களின் கருத்தை எதிர்பார்த்து தொடர்ந்தும் கருத்துக்களை கூறுமாறு வேண்டினார்கள். காரணம் முஹாஜிரித் தோழர்களை விட அன்ஸாரித் தோழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாக என இமாம் இப்னு இஸ்ஹாக் தெரிவிக்கின்றார்.

இதே போன்று உஹத் யுத்தத்தின் போது மதீனாவின் உள்ளே இருந்து போராடுவதா அல்லது மதீனாவுக்கு வெளியே சென்று போராடுவதா என்பது பற்றி நபியவர்கள் ஸஹாபிகளுடன் கலந்தாலோசித்து அதிகமானவர்களின் கருத்துக்கு ஏற்ப மதீனாவுக்கு வெளியே சென்று போராடினார்கள். இது விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு உள்ளே இருந்து போராட வேண்டும் என்ற கருத்தில் இருந்தார்கள். எனினும் பெரும்பான்மையினரின் கருத்தை தனது கருத்தாக இறுதியில் எடுத்து அமுல்படுத்தினார்கள்.

அகழி யுத்தத்தின் போது முஷ்ரிக்குகள், யூதர்கள், முனாபிக்குகள் அனைவரும் ஒன்றாக முஸ்லிம்களுக்கு எதிராக இணைந்தார்கள். இதன் கனதியைத் தனிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதன்படி தாம் முஸ்லிம்களுக்கு சார்பாக நடக்க வேண்டும் எனவும் அதற்காக அவ்வருட மதீனா நகர விளைச்சலில் மூன்றில் ஒன்றைத் தருவதாகவும் கூறினார்கள்.

எனினும் இது விடயமாக தனது தோழர்களுடன் பேசிய பின்னரே இறுதி முடிவை எடுக்க முடியும் என நபியவர்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பாக குறிப்பாக அன்ஸாரிகளுடன் கலந்துரையாடிய போது அவர்கள் இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது எனவும், நாம் அவர்களுக்கு முன்னால் இழிந்து போக முடியாது எனவும் தெரிவித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது கருத்தை விட்டுக் கொடுத்து அன்ஸாரிகளது கருத்தை ஏற்றுக் கொண்டு கத்பான் கோத்திரத்தாருடன் செய்யவிருந்த ஒப்பந்தத்தை கைவிட்டு விட்டார்கள். (ஸீரதுல் இப்னி ஹிஷாம்).

உமர் இப்னுல் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மதீனாவின் கவர்னர் பொறுப்பை ஏற்றதன் பின்னர் அங்கு காணப்பட்ட பத்து சட்ட வல்லுனர்களை அழைத்துக் கூறினார்கள் : நான் உங்களை நன்மை தரும் ஒரு விடயத்திற்காக அழைத்தேன். நீங்கள் சத்தியத்திற்கு உதவியாளர்களாக இருக்க வேண்டும். உங்களின் கருத்தைப் பெறாமல், அல்லது உங்களில் சமூகம் தந்தவர்களின் கருத்தைப் பெறாமல் நான் முடிவுகள் பெற மாட்டேன். (தாரீகுல் உமமி வல் முலூக் – இமாம் தபரீ).

பெரும்பான்மைக் கருத்தை முடிவாக எடுக்காமல் தலைவர் பொறுத்தமாகக் கருதும் கருத்தை அமுல்படுத்துவது என்பது பலபோது சர்வாதிகார நிலைமைகளை தோற்றுவிக்கலாம். அதேநேரம் முரண்பாட்டு நிலைமைகளை உருவாக்கலாம்.

தற்காலத்தில் நாம் அரபு இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு ஷூரா என்ற பொறிமுறையை பிழையாக பிரயோகம் செய்வதை ஒரு பிரதான காரணியாக உள்ளதை அவதானிக்கலாம்.

மற்றும் நிறுவனங்கள் அமைப்புக்களில் காணப்படுகின்ற முரண்பாட்டுக்கும், ஒத்துழையாமைக்கும் தலைவரின் தனிப்பட்ட போக்கும், தனது அதிகாரத்தை முடிவெடுப்பதில் பிரயோகிப்பதையும் காரணமாக அடையாளப்படுத்தலாம்.

ஷூரா சபையில் கலந்து கொள்ளும் ஆளுமைகள் சரியான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருக்குமாயின் நிச்சமயாக அவர்களது கருத்துக்கள் தரமானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். எனவே இவர்களது கருத்துக்களை கேட்கும் இடமாக மாத்திரம் ஷூரா சபைகள் காணப்பட்டு, தலைவர் தான் திருப்திகாணும் கருத்தை மாத்திரம் முடிவாக எடுக்குமாயின் ஷூரா செய்வதன் நோக்கம் பிழைத்து விடும்.

Leave A Comment