பசுமைச் சூழலை நேசிப்போம் பாவமறியா ஜீவன்களை காப்போம்

February 24, 2018
12,344 Views

முஹம்மத் பகீஹுத்தீன்

அறிமுகம்:

சுற்றுச் சூழல் என்பது மனிதனைச் சுற்றியுள்ள இறைவனால் படைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் போன்ற உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தொகுப்பாகும். சுருக்கமாக சொன்னால் சூழல் என்பது நம்மை சுற்றியுள்ள அனைத்துமாகும்.

இயற்கை வளம் என்பது இறைவன் அள்ளி வழங்கிய கொடை. தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் சூழலின் பாதுகாப்பு வேலிகளாகும்.

சூழல் என்பது மனித நலனுக்காகவும், அவனது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், மனிதனுக்கு சேவை புரிவதற்காகவுமே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. அதாவது மனிதவாழ்வின் நிலைப்புக்காக சூழல் அயாராது பணியாற்றுகிறது. நாம் சூழலின் மீது நன்றிக் கடன் பட்டுள்ளளோம்.

1972 ஆம் ஆண்டில் தான் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகச் சுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாம் மனிதன் தோன்றிய காலம் தொட்டே சுற்றுச் சூழல் பராமரிப்பு குறித்து பேசியுள்ளது.

மேலும் சூழலுடனான உறவு குறித்தும் அதனை பேணிப் பாதுகப்பதன் அவசியம் பற்றியும் அதன் மீது மிகுந்த கரிசனை கொள்ளுமாறும் இஸ்லாமிய ஷரீஆ போதனை செய்துள்ளது. அவ்வாறே பௌதிக சூழலில் சீர்கேடு செய்யும் மனிதனை தண்டிப்பதற்கான சட்டத்தையும் வகுத்துத் தந்துள்ளது.

இயற்கை மனிதனின் நண்பன்

சுற்றுச் சுழலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அன்பும் நட்பும் கருணையும் என்றே இஸ்லாம் வழிகாட்டுகிறது. மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்று கூறுவது கூட சூழுலுக்கு அவன் செய்யும் இழுக்காகவே இஸ்லாம் பார்க்கிறது. காரணம் இயற்கையை வென்று வாழுதல் என்பது சுற்றுச் சூழலை எதிரியாய் நோக்குவதாகும். குர்ஆனிய சிந்தனையானது இயற்கை மனிதனின் அன்புக்கு பாத்திரமான நண்பன் என்றே அறிமுகம் செய்கிறது. சுற்றுச் சூழல் மீது அன்பும் பற்றும் வைத்து நேசித்து வாழுமாறே அது பணிக்கிறது. சுற்றுச் சூழலின் ஒவ்வொரு அங்கமும் படைத்த ரப்புக்கு பணிந்து இறைவன் வகுத்து வைத்துள்ள இயற்கை நியதிகளுக்கு கட்டுப்பட்டே தொழிற்படுகின்றன என்பது எமது ஈமானாகும்.

மனித நலனுக்காகவே இயற்கை வளங்கள் இருக்கின்றன. அதனை அல்லாஹ் மனிதனின் வாழ்கை வசதிக்காக வசப்படுத்தி தந்துள்ளான். எனவே அதனுடனான உறவு நட்பே அன்றி வேறில்லை. பசுமை சூழலை நேசித்து வாழ்வதுதான் மனிதன் இயற்கை மீது காட்டும் கருணையின் வெளிப்பாடாகும்.

எனவே சுற்றுச் சூழலை பாதுகாப்பது, அதனை பசுமையாக வைத்துக் கொள்வது, சுற்றாடல் சுத்தத்தைப் பேணுவது மனிதன் மீதுள்ள தார்மீகக் கடமையாகும்.

மனித இனத்தின் நீடித்த இருப்புக்கும் சீரான உலக வாழ்வின் நீட்சிக்கும் பரந்த சேவை செய்யும் சுற்றுச் சூழலை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு மனிதன் மீதும் உள்ள பொறுப்பாகும்.

சூழல் மாசடைவதற்கு காரணமாக அமைவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தன்னை சுற்றியுள்ள சூழலை பாதிக்கும் வகையில் நடந்து கௌ;வது ஒரு குற்றம் என்பதே எமது ஆழ்ந்த நம்பிக்கையாகும். இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி சூழல் மாசடைவதற்கு காரணமாக அமையும் குற்றவாளிக்கு ‘எச்சக்ரிகை’ என்ற எளிய வடிவில் தொடங்கி ‘மரண தண்டனை’ என்ற எல்லை வரைக்கும் தண்டனைகள் வழங்கலாம் என ஷரீஆ சட்டப் பரப்பு விவரிக்கிறது. காரணம் சூழலுக்கு தீங்கு செய்தல் என்பது பூமியில் சீர்கேடு விளைவிப்பதாகும். அத்தீங்கு காரணமாக மனித நலன் பாதிக்கப்படுகிறது. அவனது உயிர், உடமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. மொத்தத்தில் மனித வாழ்வின் இருப்புக்கே அபயாகரமாக மாறுகிறது. எனவே இஸ்லாம் அதற்கான உச்சபட்ச தண்டனைiயாக மரண தண்டனை விதிப்பதற்கு இடம் கொடுத்துள்ளது. சூழல் சீர்கேடுகளை விளைவிக்கும் மனிதர்களை அல்லாஹ் விரும்புவதில்லை என்றும் அவன் நரகிற்கு தகுதியானவன் என்றும் ஸுரா பகரா 205ம் வசனம் தெளிவாக விளக்குகிறது.

எனவே சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்துவது அல்லது நாசப்படுத்துவது பெரும் பாவமாகும். இதனால் தான் நிழல் தரும் மரங்களை வெட்டுபவனின் தலையை அல்லாஹ் நரக நெருப்பிற்கு இலக்காக்குகிறான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

பசுமை சூழல்

இஸ்லாம் பசுமை சூழலை பாதுகாக்குமாறு தூண்டுகிறது. சூழலை பராமரிக்கும் மனிதனுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது. ‘யாராவது ஒரு முஸ்லிம் மரமொன்றை நடுகின்றார் அல்லது பயிரிடுகின்றார். அதிலிருந்து பறவையோ, மனிதனோ, மிருகமோ சாப்பிட்டால் அது அவருக்கு ஸதகாவாக அமைகிறது.’ தன் கரத்தால் ஒரு மரம் நாட்டி, கனி தரும் காலம் மட்டும் காத்து வந்தால் அதிலிருந்து யார் பயன் பெற்றாலும் அவனுக்கு அது நிலையான தர்மமாகும்.

பராமரிப்பபின்றி விளைச்சல் இல்லாமல் போன தரிசு நிலங்களை உயிர்ப்பிக்குமாறு இஸ்லாம் தூண்டுகிறது. அவ்வாறு இறந்த பூமியை உயிர்ப்பித்தவனுக்கு அந்த நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். பௌதிக சூழலின் பசுமை என்பது பொதுவாழ்வின் ஆதார சுருதியாகும்.

அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான் என்ற ஹதீஸ் தொடரில் உங்கள் வீட்டு முற்றத்தை அழகாக வைத்திருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுற்றப்புறச் சூழலை அசுத்தபடுத்துவது தீமையாகும்

சுற்றுப்புற சூழலுக்கு மனிதனால் இடர்கள் ஏற்படக் கூடாது. ‘சுத்தம் ஈமானின் பாதி’ என்ற ஹதீஸ் சூழல் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதுமாகும். சூழல் பராமரிப்பு என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை பகுதியுடன் சம்பந்தப்படுகிறது. அதாவது சூழல் பராமரிப்பு என்பது ஒரு முஸ்லிமின் விசுவாசக் கோட்பாடான அகீதாவுடன் இணைந்த ஒன்றாகும். அதனை ஒரு சாதாண விடயமாக நோக்க முடியாது என்பதையே ஷரீஆ அழுத்திச் சொல்கிறது. ‘முஸ்லிம்களின் பாதையில் யார் மன வேதனை தரும் தீங்குகளை விளைவிக்கின்றானோ அம்முஸ்லிம்களின் சாபம் அவர் மீது நிச்சயமாகிவிடும் என நபிகளார் கூறியுள்ளார்கள். எனவே சுற்றுப்புற சூழலை அசுத்தப்படுத்துவது மனிதப் பண்பல்ல என்பதை புரிந்து நாகரிகமாக வாழவேண்டும் என்றே ஹதீஸ் வழிகாட்டுகிறது. முஸ்லிம்களின் தெருக்களில் குப்பை கூலங்கள் இருப்பது அநாகரிகம் என்பதை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.

வளங்களை பாதுகாத்தல்

மனிதனை சுற்றியுள்ள சகல வளங்களும் இறையருளாகும். அவை பாதுகாப்பு அரண்கள். அதனை பாதுகாத்து பரிhமரிக்கும் பொறுப்பு மனிதனின் மீது விதியாக்கப்பட்டுள்ள கடமை என்றே இஸ்லாம் வழிகாட்டுகிறது.

‘ஒரு மனிதன் வீணாக ஒரு சிட்டுக் குருவியை கொலை செய்தால், மறுமையில் அது இந்த மனிதன் என்னை எந்தப் பயணுள்ள தேவைக்காகவும் கொல்லவில்லை. வெறுமனே வீணுக்காகவே கொன்றான் என்று முறையிடும்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பசு மாடுகள் மனித நலனுக்காக உள்ள பொதுச் சொத்தாகும். எனவே அவற்றை அறுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நபிகளாருக்கு விருந்தளித்த ஒரு அன்ஸாரி தோழரிடம் பால் தரும் ஆட்டை அறுத்து விடாதே என எச்சரித்த செய்தியை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.

நாய்கள் கூட மனிதன் போன்ற ஒரு சமூகமே. அதுவும் சுற்றுச் சூழலில் வாழவேண்டும். அந்த இனம் அழியக் கூடாது. எனவே அதனை கொல்லாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நீர் பற்றி இஸ்லாம் மிகுந்த கரிசனை செலுத்தியுள்ளது. தண்ணீரில் வீண் விரயம் செய்ய வேண்டாம் என்று இறை தூதர் எச்சரித்த போது ‘ஓடும் நதியில் வுழு செய்தாலும் வீண்விரயம் கூடாது’ என்று எச்சரித்துள்ளார்கள்.

ஒழுக்கப் பண்பாடும் சூழுல் மாசடைதலும்

மனிதன் இறை வழிகாட்டல்களை மீறி நடக்கும் போது இயற்கை சீற்றம் கொள்கிறது. அவனது பாவங்கள் சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக அமைகிறது என அல்-குர்ஆன் பல்வேறு இடங்களில் விரிவாக பேசுகிறது. எனவே சீரான ஒரு மனிதனாக வாழ முனைவது தனக்கு மட்டும் நன்மைபயக்கும் விடயமன்று. அது அவன் சூழல் பராமரிப்புக்கு செய்யும் தொண்டாகும். எனவே இறைவன் படைத்த இயற்கையின் நியதிகளை மாற்றும் வகையில் தொழிற்படுவது, அநியாயங்கள் செய்வது, ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற்றவர்கள் சர்வாதிகாரம் செலுத்துவது, மனோ இச்சைக்கு அடிமைப்படுவது, இறைவன் கொடைகளுக்கு நன்றி மறந்து வாழ்வது ஒழுக்கம் கெட்ட வாழ்வு முறையாகும். இதனால் இயற்கை சூழல் சீர்கெடுகிறது என அல்லாஹ் வலியறுத்தியுள்ளான். அல்-குர்ஆன் உதாரணங்களாக எடுத்துக்காட்டியுள்ள முன்னைய சமூகங்களான ஆத், சமூத் கூட்டம் அழிக்கப்பட்ட வரலாறும் பிர்அவ்னின் சாம்ராஜ்யம் அழிந்து போன கதையும் பௌதிக சூழலின் சீர்கேட்டுக்கு சிறந்த உதாரணங்களாகும். எனவே ஒழுக்க வாழ்வும் சூழலை பாதுகாக்க இன்றியமையாததாகும்.

ஒரு நாடு என்ற வகையில் சூழல் பராமரிப்பு 

ஒரு நாடு என்ற வகையில் நிலையான சூழல் பராமரிப்பு குறித்து பின்வரும் விடயங்களில் கவனக் குவிப்பு இருப்பது கட்டாயமாகும். பல்வேறு காரணங்களால் பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைதல் மற்றும் காபன் உறிஞ்சப்படுவதை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விளை திறனுடைய நடவடிக்கைகள், இயற்கைவளப் பாதுகாப்பு, முறையற்ற கிருமிநாசினிப் பாவனை, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம், பசுமை நுகர்வு, தேசிய சுற்றாடல் கொள்கைகளை சர்வதேச சூழல் ஒப்பந்தங்களுடன் ஒருங்கினைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

இவற்றை பாதுகாப்பதற்காக இளம் பரம்பரைக்கு விழிப்புணர்வூட்டல், நாட்டு மக்களின் பொதுக் கருத்தில் தாக்கம் ஏற்படும் வகையில் பரப்புரை செய்தல், தடுப்புச் சட்டம் இயற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டுதல் பயனளிக்கும்.

இஸ்லாமிய வரலாற்றில் சூழல் பராமரிப்பு

இஸ்லாமிய வரலாற்றில் சூழல் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவதானிக்கும் போது வியப்புறாத உள்ளங்களே இருக்க முடியாது.

ஈராகின் யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஆட்டுக் குட்டி தடுக்கி விழுந்தாலும் அதற்கு நான் பொறுப்பாவேன் என்று கூறிய உமர் (ரழி) அவர்களின் வார்த்தை இயற்கை வளங்களின் உயிர் பாதுகாப்புக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறே ஒட்டகங்களின் முதுகில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக பொதி சுமத்தக் கூடாது என கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் தடை விதித்தார்கள்.

பண்டைய காலத்தில் பேக்கரிகளின் கூரை உயரமாகவும், உலை அடுப்புகளின் துளை புகை வெளியேறும் வகையில் பெரிதாகவும் மக்களுக்கு அசௌகரியங்கள் கொடுக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்றும் சட்டி சூடான பிறகு சுத்தமான துணியால் சுத்தம் செய்து விட்டே ரொட்டி சுட வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவால் சட்டம் போடப்பட்டிருந்தது. அறிஞர் ஷீராதி அவர்கள் இது குறித்து குறிப்பிடும் போது பேக்கரிகளில் ரொட்டிக்காக மா பிணையும் போது கொசு விரட்டுவதற்காக பக்கத்தில் இன்னொருவர் அமர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுத்தம், சுகாதாரம், மக்கள் நலன் என்பன சூழல் பராமரிப்பில் எவ்வளவு முக்கியமானது என்பதை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகுந்த கரிசனையோடு நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

நமது பொறுப்பு என்ன?

தனிநபர் என்ற வகையில் நிலையான சூழல் பராமரிப்புக்கு பலவழிகளில் நாம் உதவ முடியும். எனவே பின்வரும் எளிமையான விடயங்களில் கரிசனை செலுத்துவதன் மூலம் இயற்கையை காத்து இனிதாய் வாழலாம்.

நமது உயிர்காக்கும் இயற்கையின் நிகரில்லாத உதவிக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க பின்வரும் விடயங்களில் கைகோர்த்து ஒத்துழைப்போம்.

1. மரம் நடுவோம் 
ஒரு மரத்தை நடுவதென்பது வெறுமனே ஒரு செயல் மாத்திரமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. மானுடத்தின் மீது மனிதன் கொள்ளும் மிகப் பெரிய கரிசனையின் வெளிப்பாடு அது.

‘நாளை உலகம் அழியப் போகிறது என்று தெரிந்தாலும் உங்கள் கையில் மரக் கன்று இருந்தால் அதை நடுங்கள்’ என நபிகளார் கூறியுள்ளார்கள். எனவே ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு மரம் நடுவோம். நமது முற்றத்தில் வீட்டுத் தோட்டம் அமைத்து நச்சு கலவாத உணவை உண்போம்.

2. நீர் வாழ்வின் உயிர் நாடி 
உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பயன்படுத்த முடியுமான நன்னீர் வளம் 0.007 வீதம் மட்டுமே உள்ளது. பாதுகாப்பான குடிநீர் இன்றி எட்டு செக்கனுக்கு ஒருகுழந்தை மரணிக்கிறது. உலகில் சுமார் 200 கோடி மக்கள் தூய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

உலகில் 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே ஓவ்வொரு துளி நீரையும் வீண்விரயம் செய்யாமல் காப்போம். ‘தண்ணீரைப் பொருத்தவரை மனிதர்கள் யாவரும் அதில் பங்காளிகள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நீரில் அடுத்தவர்களுக்கும் பங்குண்டு.

3. பொலித்தீன் ஆரோக்கிய வாழ்வின் எதிரி 
பொலித்தீன் பாவனை புற்று நோய், ஆண்மைக் குறைபாடு மற்றும் தீராத கொடிய நோய்களை உருவாக்கும். பிளாஸ்டிக் பாவனை நிலத்தின் வளத்திற்கு எதிரியாகும். பிளாஸ்டிக் பொருட்களை நிலத்தில் எறிவது மண்ணில் விஷம் கலப்பதாகும். அன்புக்கு நஞ்சூட்டுவது பாவமன்றோ!

வீடுகளிலும் அலுவலகங்களிலும் பொலித்தீன் பாவனையை தவிர்ப்போம். முடிந்தளவு துணிப்பைகளைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம்

4. டெங்கு ஒழுpப்புத் திட்டத்திற்கு கைகொடுப்போம்
டெங்கு கொடூரமான ஆட்கொள்ளி நோய். எனவே நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை சூழலுக்கு சேர்க்காதிருப்போம். அவை சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை. மக்களுக்கு தீங்கு தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாமும் நமது சுற்றமும் நோநொடியில்லாமல் வாழ சுத்தமான சூழலை நேசிப்போம்

வீடுகளிலோ வீதிகளிலோ பொது இடங்களிலோ டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை முறையாக அகற்றுவோம். வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்கானிப்போம். மாதாந்தம் ஒரு கூட்டு சிரமாதானம் செய்வோம்

5. குப்பைகளை குறைப்பதற்கு 5சு ஸிஸ்டத்தை கடைப்பிடிப்போம். 
திண்மக் கழிவுகள் காரணமாக சூழல் மாசடைகின்றது. இலங்கை முழுவதிலும் 60-65 வீதமான கழிவுகளே உள்ளுராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்படுகின்றது. 35 வீதமான கழிவுகள் வீட்டுத்தோட்டங்களிலும் வீதியோரங்களிலுமே சிதறிக் காணப்படுகின்றன.

நாம் நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி பொருட்களை வாங்கிக் குவிப்பதில் தீவிரம் காட்டுகிறோம். இதற்குப் பதிலாக உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாகச் செயல்படுவது எமது பொறுப்பாகும். இதன் மூலம் சூழல் மாசடைவதை வெகுவாக குறைக்க முடியும்.
கழிவுகளை முகாமை செய்ய சிறந்த வழி 5S System ஆகும்.

1) Reduce – உக்காத பொருட்களின் பாவனையைக் குறைப்போம்

2) Reuse – மீள்பயன்பாடுக்கு பழுகுவோம்

3) Recycle – மீள்சுழற்சி செயற்பாட்டிற்கு ஒத்துழைப்போம்

4) Refuse – சூழலுக்கு ஆபத்தான பொருட்களைகொள்வனவு செய்ய மறுப்போம்.

5) Rethink – விலை கொடுத்து வாங்க முன்னர் மீள்பார்வை செய்வோம்.

6. கழிவுப் பொருட்களை வகைப்படுத்துவோம்.

குப்பையைத் தூக்கி எறிவதற்கு முன் உக்கும் கழிவு, உக்காத கழிவு என அவற்றைப் பிரித்திடுவோம். குப்பை கூழங்களை கண்ட கண்ட இடங்களில் சுட்டெரிப்பதும் சூழலுக்கு செய்யும் துரோகம் என்பதை புரிந்து கொள்வோம். மீள்சுழற்சிக்கு ஒத்துழைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவோம்.

சூழல் மாசடைவதற்கு காரணமாக அமைவது ஒரு குற்றம். அதன் தீய விளைவுகளை இம்மை மறுமை இரண்டிலும் நிச்சயமாக சுவைப்போம் என்பதை விசுவாசிப்போம்.

7. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்
தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் இயற்கை சூழல் என்றும் எப்பொழுதும் பசுமையாக இருப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இறந்த பூமியை வளப்படுத்துமாறு இஸ்லாம் மனிதனை வேண்டுகிறது.

மலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் மனித வாழ்வின் இருப்புக்காக சேவை செய்யும் சக்திகள். அவற்றை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. மனித இனம் குற்றமற்று நீடித்து வாழ சுற்றுச் சூழலின் மீதும் காதல் கொள்வதாலேயே அது சாத்தியமாகும். எனவே காடுகளை பாதுகாக்க உதவுவோம் உயிரணங்களின் வாழ்வுக்கு உத்தரவாதமாக இருப்போம்

இயற்கையை காப்போம் இனிதாக வாழ்வோம்.

Leave A Comment