கூட்டு ஸகாத்தின் அவசியம்

April 20, 2018
3,530 Views

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

இஸ்லாம் விதியாக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் பிரதானமானது. இதன் மூலமாக இஸ்லாம் மக்களுக்கு மத்தியில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதுடன், சமூக நலன்களை அடைவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸகாத் பெறத் தகுதியான எட்டுக் கூட்டத்தாரையும் நோக்குமிடத்து அதில் பகீர், மிஸ்கீன் என்ற வறுமையுடன் தொடர்பான இரு சாரார் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏனைய கூட்டத்தார்கள் பற்றிய விரிவான விளக்கங்களைப் பார்க்கும் போது ஸகாத்தின் நீண்ட கால இலக்குகள் எவை, அவை சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை தோற்றுவிக்க விளைகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாம் நேர்த்தி, ஒழுங்கைப் போதிக்கும் மார்க்கம். எந்தவொரு காரியத்தையும் கிரமமாகவும், கட்சிதமாகவும் செய்யுமாறு எம்மைப் பணிக்கின்றது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் இஸ்லாத்தின் தூண்கள் என்ற வகையில் தூண்கள் சரியாகப் போடப்பட்டால் தான் சமூகம் சீராகப் பயணிக்க முடியும். நீண்ட காலம் நிலைத்துப் பணியாற்ற முடியும்.

ஸகாத்தை தனிநபர்களாகக் கொடுப்பதனால் இவ்விலக்குகளை அடைந்து கொள்வது மிகவும் சிரமமானது. ஒவ்வொருவரும் தான் நினைத்த தொகையை தான் விரும்பும் நபருக்குக் கொடுப்பதனால் சமூகத்தில் ஒருவகையான ஒழுங்கீனம் வளர்ந்துள்ளது. தனிநபர் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஏழைகளை என்றென்றும் வறுமை நிலையிலேயே ஆக்குகின்ற ஸகாத் விநியோக முறையே இன்று அதிகமான இடங்களில் காணப்படுகின்றது.

ஸகாத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பொது நலன்கள் நிறைவேற்றப்படாத நிலையும் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. இஸ்லாத்தை மக்களுக்கு முன்வைத்தல், எமது இருப்பை இந்நாட்டில் பலப்படுத்துவதற்கான சகவாழ்வு வேலைத்திட்டம் போன்றவற்றிக்கு ஸகாத் பங்களிக்க வேண்டிய கட்டத்தில் வாழ்கின்றோம். எனினும் நாம் இச்சிந்தனையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கின்றோம். காரணம் ஸகாத்தின் நோக்கங்கள், அதன் தாத்பரியங்கள் பற்றிய போதிய, பரந்த தெளிவின்மையே. அத்துடன் முறையற்ற ஸகாத் விநியோகமும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.

இவ்வகையில் ஸகாத் வசூலித்தல், விநியோகம் என்பன கூட்டாக நிறுவன ஒழுங்கில் நடைபெற வேண்டும். இது இஸ்லாமிய அரசின் கடமைகளில் ஒன்று. ஆனால் இத்தகைய சூழல் இன்று இல்லாமல் போயுள்ளது. இதனை நாம் எமது சூழலில் இதற்கான தனியான சபைகளை உருவாக்குவதன் மூலம் அமுல்படுத்தலாம். இதனால் ஸகாத்தின் நோக்கங்களில் குறைந்த அளவையாவது நாம் அடைந்து கொள்ள முடியும்.

ஊர் மட்டங்களில் இச்சபைகள் ஆரம்பிக்கப்பட முடியும். இதற்கான நடைமுறை உதாரணங்கள் இலங்கையில் சில இடங்களில் காண முடிகின்றமை மகிழ்ச்சியைத் தருகின்றது. தகுதியானவர்கள் உள்வாங்கப்பட்டு, ஸகாத்தின் சமூக மேம்பாட்டிற்கான வகிபாகத்தை இவர்கள் சரியாக புரிந்து கொண்டு , இவர்களுக்கு ஊர் மக்கள் ஒத்தழைப்பு வழங்கும் சந்தர்ப்பத்தில் ஊர் மட்டத்தில் நல்ல விளைவுகளைக் கண்டு கொள்ளலாம்.

தகுதியான ஆலிம்கள், ஸகாத் கொடுக்க தகுதியானவர்கள், துறைசார்ந்தவர்கள், பள்ளி நிர்வாகிகள் என்போரை கொண்டதாக இச்சபை அமைய வேண்டும். நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

நீதி, நியாயம், பக்குவம், தூரநோக்கு கொண்டவர்கள் இச்சபையில் இருக்க வேண்டும். பக்கசார்புடன் நடந்து கொள்வோர், பண கொடுக்கல் வாங்கலில் நேர்மையற்றவர்கள், அமானிதம் பேணாதவர்கள், மக்களின் உள்ளங்களைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றவர்கள் இச்சபைகளுக்கு உள்வாங்கப்படக் கூடாது.

ஒழுங்குகளை வகுத்து செயற்பட வேண்டும். ஸகாத் கொடுக்கக் கடமைப்பட்டோர், ஸகாத் கடமையாகும் பொருட்கள், ஸகாத் பெறத் தகுதியானோர் தொடர்பான போதிய விரிவான அறிவு இவர்களிடம் காணப்பட வேண்டும்.

ஸகாத் கடமைப்பட்டோருக்கு ஸகாத்தின் மூலம் இஸ்லாம் எதிர்ப்பார்க்கும் இலக்குகள், நோக்கங்களை தெளிவுபடுத்த வேண்டும். தனிநபர்களாக ஸகாத் கொடுப்பதை விட கூட்டாக ஸகாத் கொடுப்பதன் தேவை, முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போது அவர்கள் கூட்டு ஸகாத் முறைக்கு ஒத்துழைப்பார்கள்.

அதேபோன்று ஸகாத் பெறத் தகுதியானவர்களின் மனோநிலையை கட்டியெழுப்ப வேண்டும். விட்டுக் கொடுப்பு, தனக்குத் தேவையிருந்தும் பிறரை முற்படுத்தல், ஸகாத் சபைக்கு ஒத்தாசையாக இருத்தல் போன்ற பண்புகள் அவர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனைனில் தேவையுடையோர் அதிகமாக உள்ளனர். ஆனால் அனைவரின் தேவைகளை பலபோது நிவர்த்திக்கும் அளவுக்கு ஸகாத் பணம் கிடைத்திருக்காது. நீண்டகால பொருளாதார மேம்பாட்டை நோக்கி செயற்பட வேண்டியிருப்பதனால் ஸகாத் பெறத் தகுதியானோரின் ஒத்துழைப்பு மிகப் பிரதானமானது.

ஷூரா அடிப்படையில் முடிவுகள் பெறப்பட வேண்டும். குறிப்பாக ஸகாத் பெறத் தகுதியானவர்களை தீர்மானிக்கும் போது அதற்கான வரையறைகள் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நபர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஏழைகளின் துயர்களைத் துடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், குறுகிய, நீண்ட காலத்தில் சமூகத்தை மேம்படுத்தி, ஸகாத் பெறத் தகுதியானவர்களின் வரிசையில் இருப்போரின் எண்ணிக்கையை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பில் அதிகூடிய கவனம் எடுப்பது மிக முக்கியமானது.

இதன் மூலமாக கௌரவமான சமூகமாக எமது சமூகத்தை நாம் உருவாக்க முடியும். இதில் ஒவ்வொரு தரப்பினரும் தமது வகிபாகத்தை சரியாக செய்யுமிடத்து கூட்டான இச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

Leave A Comment