இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவது காலத்தின் கடமை

February 5, 2019
1,220 Views

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா

இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரம் என்பது மனிதன் பெறக்கூடிய அதியுயர் கௌரவமாகும். இதனைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று மனித சமூகம் பல தியாகங்களை செய்து வருகின்றனர். இப்பாதையில் பலதை இழக்கின்றனர்.

இலங்கை ஒரு அழகிய நாடு. அனைத்து இயற்கை வளங்களையும் பெற்ற பசுமையான நிலம். மனித வாழ்வுக்கு மிகவும் பொறுத்தமான அனைத்துக் காலநிலைகளையும் கொண்ட இடம். இதனைப் பாதுகாப்பது இலங்கைவாழ் அனைத்து மக்களினதும் கடமையாகும். இதற்குப் பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவது நாட்டிற்கு ஏற்படுத்தும் இழுக்காகும்.

தான் வாழும் நாட்டை நேசிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் உயர்ந்த போதனைகளில் ஒன்றாகும். தான் வாழும் நாட்டுக்கு விசுவாசமானவனாக, அதன் அபிவிருத்திற்கு உழைப்பவனாக, அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதமானவனாக, அதன் நற்பெயரை உலகில் நாலா பகுதிக்கும் கொண்டு செல்பவனாக நாம் இருக்க வேண்டும்.

சுதந்திரம் என்பது வெறும் அந்நிய நிர்வாக ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதை மாத்திரம் குறிக்காது. அது சுதந்திரத்தின் ஒரு பகுதி மாத்திரமே. உண்மையான சுதந்திரம் என்பது அந்நிய நாடுகளின் ஆதிக்கம் மற்றும் தலையீடு இல்லாமல், நாட்டின் தலைமை மற்றும் குடிமக்கள் சுதந்திரமாக தனது முடிவுகளை எடுத்துச் செயற்படும் வகையில் நாடு காணப்பட வேண்டும் என்பதாகும்.

ஆனால் இன்று நிலைமை இவ்வாறு இல்லை. நாம் விரும்பியோ விரும்பாமலோ பிற நாடுகளின் தயவில் தங்கிவாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதற்குப் பிழையான நிர்வாகமே காரணமாகும். நாட்டு நலனை முதன்மைப்படுத்தாது, சொந்த இலாபங்களை இலக்காகக் கொண்டு நிர்வாகம் நடைபெறுகின்றமையால் இத்தகைய ஒரு நிலைக்கு நாம் உள்ளாகி இருக்கின்றோம்.

நாட்டுக்கு நீண்டகால இலக்குகள் இருத்தல் அவசியம். இதனை ஒரு தரப்பு மாத்திரம் தீர்மானிக்காது அனைவரது பங்காற்றலுடன் வரையப்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் இந்த இலக்குகளை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும். இங்கு அரசியல் பழிவாங்கல் இல்லாது போக வேண்டும். அப்போது தான் நாம் இலக்கு மயப்பட்ட, விழுமியங்களின் அடிப்படையிலான பிரஜைகளாக பணியாற்ற முடியும். நாட்டை வளப்படுத்த முடியும்.

இன்று நாடு பல்வேறு உள்ளார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது. போதைப் பொருள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றார்கள். கடன் சுமையால் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது.

நாம் இலங்கை மண்ணில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வந்த மக்கள். இன மத பேதமின்றி இதன் விடுதலைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் உழைத்துள்ளனர்.

ஆனால் இன்று இனரீதியான முறுகல் வேகமாக வளர்ந்து வருகின்றது. இனங்களுக்கு இடையில் பிழையான புரிதல்கள் அதிகரித்து செல்கின்றது. மத வழிபாட்டுத்தலங்கள் இலக்கு வைக்கப்படுகின்றது. குறிப்பாக மஸ்ஜித்கள் பல இடங்களில் தேசப்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் வெளி சக்திகள் இருப்பதாகவும், அரசியல் இலாபம் உழைக்க சிலர் நாடுவதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். மோதலற்ற பிராந்தியமாக உள்ள இப்பிரதேசத்தை இனங்கள் மோதிக் கொள்ளும் நாடுகளாக மாற வேண்டும் என்ற வெளிச்சக்திகளின் திட்டத்திற்கு இவர்கள் தீனி போடுகிறார்கள்.

இத்தகைய தீய செயல்களுக்கு அரசாங்கம் இதுவரை திருப்தியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கம் இதில் பொடுபோக்காக நடந்து கொள்கின்றது என்பதுவே பலரின் அவதானமாகும்.

இத்தகைய நிலை கட்டுப்படுத்தப்பட வேண்;டும். பாரபட்சம் இல்லாமல் அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாத போது நாடு வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படும். இத்தகைய நாஷகார செயல்களினால் ஒரு சிலர் இலாபம் அடைகின்றனர் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பிராந்தியத்தில் இலங்கை செல்வாக்கு செலுத்தும் நாடாக மாற வேண்டும். அதற்கு நாட்டின் இஸ்திரத்தன்மை மிக முக்கியமானது. இனங்களின் பன்மைத்துவத்தை நாட்டின் மேம்பாட்டிற்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

இதற்கு சகவாழ்வுக்கான வேலைத்திட்டங்கள் தேசிய மட்டத்திலும் ஊர் மட்டங்களில் பரவலாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அரச நிறுவனங்கள் முதல் சிவில் அமைப்புகள் வரை இதன் பிரயோகங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறைக்கப்பட்டு, ஐக்கியம் வளர்க்கப்பட்டால் தான் ‘நாம் இலங்கை நாட்டின் பிரஜைகள்’ என்ற ஒரே குரலுடன் முன்னோக்கி செல்ல முடியும்.

Leave A Comment