– எம். எச். எம். நாளிர் –
பகுதி 19 …
- நடுநிலைமை : குறைஷிகளில் மக்ஸூம் கிளையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண், திருட்டுக் குற்றத்துக்காக தண்டனை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானாள். அவ்வேளை அவளது தண்டனையைக் குறைப்பதற்காக, நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் (ரழி) அவர்களின் மகனான உஸாமா (ரழி) அவர்களை குறைஷியர், நபி (ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்வதற்காக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபியவர்களுடன் பேசிய போது, ‘உஸாமா, அல்லாஹ் விதித்த தண்டனை தொடர்பாக பரிந்து பேச வந்திருக்கிறாயா? முன்னைய சமூகங்கள் பலவான்கள் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனர்கள் திருடினால் தண்டனை வழங்குவார்கள். இது தான் அவர்களை அழிவுக்குள்ளாக்கியது. அல்லாஹ் மீது சத்தியமாக முஹம்மதின் மகள் பாத்திமா களவெடுத்தாலும் அவரது கையைத் துண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்’ என உறுதியாகக் கூறினார்கள்.
- நலன் விரும்பும் மனப்பான்மை : இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் ஸபீத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் மக்காவுக்கு வியாபாரத்துக்கு வந்தார். ஆஸ் இப்னு வாஇல் என்பவர், அவரிடம் பண்டங்களை வாங்கினார். ஆனால், அதற்கான பணத்தைக் கொடுக்கவில்லை. அதனைப் பெற்றுத் தருமாறு தனது நேசக் கோத்திரத்தவரிடம் முறையிட்ட போதும் எவரும் பொருட்படுத்தவில்லை. எனவே அபீகுபைஸ் மலையிலேறி, தனக்கிழைக்கப்பட்டுள்ள அநியாயத்தை உரத்த தொனியில் கவிதையாகப் பாடி முன்வைத்தார். அதனைக் கேட்ட சுபைர் இப்னு அப்துல் முத்தலிப், அவரை அணுகி விசாரித்தார். அவருக்கு நிவாரணம் வழங்கவும், இனிமேல் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாதிருக்கவும் அப்துல்லா பின் ஜுத்ஆன் என்பவரின் வீட்டில் பிரமுகர்கள் ஒன்றுகூடினர். இதில் தனது பெரிய தந்தை சுபைர் அவர்களுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களும் பங்கேற்றார்கள். இக்குழு, ‘ஹில்புல் புழூல்’ எனப்பட்டது. இதில் கலந்து கொண்டமையை நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் மகிழ்வோடு சொல்லிக்காட்டினார்கள். இப்போது கூட அவ்வாறான ஒன்றுக்கு அழைக்கப்பட்டால் சென்நிற ஒட்டகங்கள் கிடைக்கப் பெறுவதை விட அதனை கௌரவமாகக் கருதுவேன் எனக் கூறினார்கள்.
- சுறுசுறுப்பு : ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக குறைஷியர் மதீனாவின் எல்லைக்கு வந்து விட்டார்கள். மதீனாவிலிருந்து வெளியேறுவதற்கு முஸ்லிம்களுக்கு கால அவகாசம் போதாமலிருந்தது. எனவே பாரசீக முறையைத் தழுவி அகழி தோண்டி போராடுவதற்காக ஆயத்தமானார்கள்.
ஸஹாபாக்கள் இடையறாது அகழியை தோண்டிக் கொண்டிருந்தார்கள். உடைப்பதற்குக் கடினமான பாறைகளை நபி (ஸல்) அவர்கள் தமது கடப்பாறையால் உடைத்து சில சுபசோபனங்களையும் முன்வைத்தார்கள். முஹாஜிரீன்களும், அன்ஸாரிய்யூன்களும் கடுங்குளிரில் அகழ்ந்தெடுக்கும் மண்ணை நபி (ஸல்) அவர்கள் வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உடம்பில் புழுதி படிந்திருந்தது. ஸஹாபாக்களோடு சேர்ந்து, நபி (ஸல்) அவர்களும் அப்துல்லா இப்னு ரவாஹா (ரழி) பாடிய கவிதைகளைப் பாடி களைப்பகற்றிக் கொண்டிருந்தார்கள். பசி தாங்க முடியாத ஸஹாபாக்கள் வயிற்றில் கற்களைக் கட்டியிருந்தனர். அதனை நபி (ஸல்) அவர்களுக்கு காட்டிய போது தாம் இரண்டு கற்களைக் கட்டியிருப்பதாக திறந்து காட்டினார்கள். இவ்வாறு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றியிருப்பதை ஸீறாவில் காணலாம்.
- நேரத்துக்கு இயங்குதல் : நேரத்துக்கு இயங்குதல் நபி (ஸல்) அவர்களின் தனிச் சிறப்பாகும். இதற்காக உரிய நேரத்தில் தொழச் சொல்லியதன் மூலமும் தொழச் செய்ததன் மூலமும் ஸஹாபாக்களைப் பயிற்றுவித்தார்கள். சிறந்த செயல் எதுவென ஒரு ஸஹாபி வினவிய போது, ‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது’ என உபதேசித்தார்கள். ஆனால் மனிதன் என்ற வகையில் ஒரு நாள் ஸுபஹு நேரத்தில் நபியவர்களைக் காணவில்லை. தொழுகைக்கு விரைந்து வாருங்கள்; வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்று அதான் ஒலித்த பிலால் (ரழி) அவர்கள், அப்போதும் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தைக் காணவில்லை. தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என இரு முறை ஒலித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழைந்தார்கள்.
பிலால் (ரழி) அவர்கள் வழமைக்கு மாறாக மேலதிகமாக கூறிய தொடர் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கவில்லை. ஆனால் அந்தத் தொடரை ஸுபஹுத் தொழுகைக்கான அதானில் சேர்த்துக் கொள்ள அனுமதித்தார்கள். இது ஒவ்வொருவரும் நேரத்துக்குச் செயற்பட வேண்டுமென்பதை உணர்த்திக் காட்டுவதற்கான ஒரு படிப்பினையாகவும், நாள்தோறும் காலையில் ஒலிக்கின்ற அறிவுரையாகவும் அமைந்து விட்டது.
தொடரும்…