ஸலாமா வாராந்த நினைவூட்டல் – 02

April 24, 2026
8 Views

அல்குர்ஆன் உள்ளங்களில் வாழட்டும்

அல்குர்ஆன் உள்ளங்களை ஒளியூட்டும். மனக் கவலைகளைப் போக்கும். உள நோய்களுக்கு நிவாரணியாகும். வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும். எனவே எமக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான உறவு பலமாக வேண்டும்.
அதனை நாளாந்தம் ஓதுவோம். அதன் கருத்துக்களை விளங்குவோம். அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்போம்.

 

ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வாழ்வில் இஃலாஸ்

ஒரு நாள் புழைல் பின் இயாழ் (ரஹ்) மற்றும் ஸுப்யான் அஸ்-ஸவ்ரி (ரஹ்) ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் அமர்ந்து உளத்தூய்மைஇ மறுமை குறித்த விடயங்களைப் பற்றி உரையாடினர். இருவரின் உள்ளங்களும் மென்மையடைந்து அவர்கள் அழுதே விட்டனர்.
அப்போது புழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்கள்: “அபூ அப்துல்லாஹ் (ஸுப்யான்)! நமது இந்த செயல் நமக்கு மிகப் பெரிய தீங்கை ஏற்படுத்திவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நாமிருவரும் நம்மிடமுள்ள சிறந்த விடயங்களை பரிமாறிக்கொண்டோம். எனினும் இதில் புகழ்ச்சியும் முகஸ்துதியும் கலந்துவிட்டதோ என பயப்படுகின்றேன்” என்று கூறினார். இதைக் கேட்ட ஸுப்யான் அஸ்-ஸவ்ரி (ரஹ்) அழுதுகொண்டே: “நீர் எனக்கு உண்மையை உணர்த்தி எனது உள்ளத்தை உயிர்ப்பித்து விட்டீர். அல்லாஹ் உமது உள்ளத்தையும் உயிர்ப்புடன் வைப்பானாக!” என்று கூறினார்கள்.

 

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் திக்ர்

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் மறுமை நாளில் அல்லாஹ் சிலரை திருப்திபடுத்துகிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் காலையிலும் மாலையிலும் மூன்று முறை
رضيت بالله رباً، وبالإسلام ديناً، وبمحمد ﷺ نبياً
(அல்லாஹ்வை ரப்பாகவூம் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மது ﷺ அவர்களை நபியாகவும் நான் பொருந்திக் கொண்டேன்) என்று கூறுகிறாரோ, அவரை மறுமை நாளில் திருப்திப்படுத்துவது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது.”- (மிஷ்காத் அல்-மஸாபீஹ்: 2399). இந்த வார்த்தைகளை மூன்று முறை ஓதுவதற்கு இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது, ஆனால் அதன் தாக்கம் மறுமை வரை நீடிக்கும். இதை நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவோம்.

ஆனால் கவனத்தில் கொள்ளுங்கள்…
நாள் முழுவதும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு, வெறுமனே இந்த வார்த்தைகளை மட்டும் ஓதுவது பலன் தராது. நாம் எமது நற்செயல்களை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றி, அவனுக்கு உண்மையாக அடிபணிந்து, எமது பாவங்களுக்கு அவனிடம் மன்னிப்பும் கேட்டு, அவற்றுடன் இந்த திக்ரையும் வழமையாக சொல்வதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வோம்.

மறுமை நாளில் அல்லாஹ் யாரைத் திருப்திப்படுத்துவானோ, அத்தகைய மக்களில் நம்மையும் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்.

Leave A Comment