முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர்

April 15, 2023
828 Views

எம். எச். எம். நாளிர் –

பகுதி – 8

  1. கற்பித்தல் முறை

நபி (ஸல்) அவர்கள் தமது கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் பின்வரும் உத்திகளைக் கையாண்டுள்ளார்கள்.

  • ஸஃதுக் கோத்திரத்தில் வளர்ந்து மொழிப் புலமை பெற்ற நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமான சொற்களைப் பிரயோகித்தார்கள்.
  • சந்தர்ப்பங்களை கற்றல் – கற்பித்தலுக்கான களமாகப் பயன்படுத்தினார்கள். உ-ம் : ஒரு முறை மஸ்ஜிதுந் நபவியின் வளாகத்தில் கைதிகள் கூடியிருந்தார்கள். இளம் வெயில் அவர்களின் மேனியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அங்கே ஒரு பெண் கைதி தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். குழந்தையின் உடம்பில் அந்த இளம் வெயில் பட்டபோது அவள் தனது முதுகை வெயில் படும் திசையில் திருப்பி குழந்தையைப் பாதுகாத்தாள். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இந்தத் தாய் தனது குழந்தையை நரகில் வீழ்த்த விரும்புவாளா’’ என ஸஹாபாக்களைப் பார்த்துக் கேட்டார்கள்.
  • போதனை செய்யும்போது விரைவாகக் கூறிச் செல்லாமல் சொல் சொல்லாக நிறுத்தி நிறுத்தி முன்வைப்பார்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவார்கள்.
  • நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் விரைவான போக்கை காண முடியாது. அவர்கள் பேசினால் செவியேற்பவர்கள் மனனம் செய்து விடுமளவு நிறுத்தி நிதானமாக அமைதியாக பேசி முடிப்பார்கள்.
  • முக்கியமான விடயங்களை மூன்று முறை மீட்டி மீட்டிச் சொல்வார்கள்.
  • ஸஹாபாக்கள் மனனமிட்டிருப்பதைப் பாடங் கேட்பார்கள். பிழை விட்டால் திருத்திச் சொல்வார்கள். ஒரே கருத்துள்ள வேறு சொற்களைக் குறிப்பிட்டாலும் அதனை திருத்தி விடுவார்கள். ஒரு முறை ஒரு பிரார்த்தனையைப் பாடங்கேட்ட போது ரஸூல் என்ற வார்த்தைக்குப் பதிலாக நபி என்று குறிப்பிட்ட போது அதனை ரஸூல் என்ற வார்த்தை மூலமே கூற வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
  • எழுதப்பட்ட பிரதிகளை வாசிக்குமாறு கூறி அவற்றை செவிமடுத்தார்கள்.
  • போதனைகளின் ஆரம்பத்திலோ, இடையிலோ கேள்விகளை எழுப்பி சிந்திக்கத் தூண்டுவார்கள்.
  • கதைகள், சம்பவங்களை எடுத்துக்காட்டி விளக்கம் செய்வார்கள்.  உ-ம் : நாய்க்கு நீர் புகட்டியமை, பூனையை பசிக்க விட்டுக் கொன்றமை.
  • உதாரணங்கள், உவமைகளைக் கையாளுவார்கள். உ-ம் : தனது வீட்டுக்கு பக்கத்தால் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒருவர் ஐமுறை குளித்து வந்தால் அவர் அசுத்தமாக இருப்பாரா எனக் கேட்டு ஐவேளை தொழுகைக்காக வுழுச் செய்வதன் பயனை எடுத்துக் காட்டினார்கள்.
  • சுற்று வட்டாரத்திலுள்ள சாதனங்களைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுத்தல். உ-ம் : இலையுதிர் காலத்தில் மரத்தைக் குலுக்கி இலைகளை உதிரச் செய்து தொழுகை மூலம் பாவங்கள் உதிர்கின்றன என்பதை எடுத்துக்காட்டல். அபூதர் (ரழி) அவர்களை அழைத்துச் சென்று மரத்தைக் குலுக்கிய அவ்வேளை, அவர்களை கற்கத் தூண்டுவதற்காக, ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கக்கூடாதா என்று கேட்ட பின்பே விளக்கம் கொடுத்தமை நோக்கத்தக்கதாகும். இவ்வாறே அபூதர் (ரழி) அவர்களும் மற்றவரிடம் போலச் செய்தார்கள்.
  • தேவையான போது நகைச்சுவையாகவும் நடந்து கொண்டார்கள். ஒரு வயோதிப பெண்மணி,அல்லாஹ்வின் தூதரே, நான் சுவனம் செல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்றார். அதற்கு தாயே கிழவிகள் சுவனம் போகமாட்டார்கள் என்றார்கள். அம்மாது அழ ஆரம்பித்து விட்டார். அப்போது அவர் கிழவியாக இருக்கும் நிலையில் சுவனம் செல்ல மாட்டார் என்று கூறி, ஆதாரமாக 56:35-36 அல்குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள்.
  • சைகை மூலம் உணர்த்தல், உ-ம் : தக்வா இங்கே இருக்கின்றது என்பதை நெஞ்சில் கையை வைத்துக் காட்டினார்கள். தானும் அநாதைகளைப் பராமரிப்போரும் சுவர்க்கத்தில் இப்படியிருப்போம் என்பதை சுட்டு விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டி விளக்கமளித்தார்கள்.
  • முக்கியமான கருத்துக்களை முன்வைக்குமுன் தோழர்களை போதனையின் பால் ஈர்ப்பதற்காகப் பொருத்தமான பிரவேசங்களைப் (Engagement) பயன்படுத்தினார்கள். உ-ம்: முதலாவது பிரசாரத்தை ஸபா குன்றில் ஏறி ஆரம்பித்தபோது,

இந்த மலைக்குப் பின்னால் உங்களைத் தாக்குவதற்காக ஒரு படையணி காத்திருக்கிறது எனக்கூறினால் நீங்கள் நம்புவீர்களா?’’ எனக் கூடியிருந்தவர்களிடம் கேட்டவர்கள், அவர்கள்  ஆம்’’ என்று விடையளித்த பின்பே தமது உரையை ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தான், ஹஜ்ஜதுல் விதாவில் தனது இறுதிப் பேருரையை நிகழ்த்து முன், இது என்ன மாதம்? இது என்ன நாள்? இது எந்த இடம்? எனக் கேட்டு, கூடியிருந்தவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தியதன் பின் உரையைத் தொடங்கினார்கள்.

மாதத்தில் இத்தனை நாட்கள் என்பதைக்கேட்டு மூன்று முறை இரு கைகளையும் விரித்துக் காட்டினார்கள். இதில் மூன்றாம் முறை காட்டும் போது ஒரு விரலை மடித்துக் காட்டினார்கள்.

தொடரும்…

Leave A Comment