முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் – பகுதி 4

February 10, 2023
937 Views

எம். எச். எம். நாளிர் – 

பகுதி 4 ….

  1. கல்வி – கற்றல் கற்பித்தல்

கற்றல் கற்பித்தல் செயற்பாடு என்பது இரு வழித்தொடர்பாடலாகும். கற்போன், கற்பிப்போன் என்ற இரு சாராரும் இதில் பங்கேற்கிறார்கள். இரு சாராருக்குமிடையிலான தொடர்பை கல்வி என்ற கருப்பொருள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றது. எனவே தான், அல்குர்ஆனும்> ஸுன்னாவும் கல்வியின் அவசியம் குறித்தும் கற்றல் கற்பித்தலின் முக்கியத்துவம் குறித்தும் நிறைய பேசி வருகின்றன.

அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் (இப்னு மாஜா) என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அறிவு முஃமினிடமிருந்து தொலைந்து போன (சொத்)தாகும். அதனை எங்கு கண்டாலும் பெற்றுக் கொள்வதற்கு அவன் மிக அருகதையுடையவனாவான். (திர்மிதி) அறிவைக் கற்று அதனை சகோதர முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுப்பது உயர்ந்த தர்மமாகும் (இப்னு மாஜா) அல்லாஹ் எவருக்கு நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் ஆழமான அறிவைக் கொடுக்கிறான். (புகாரி) இவை முன்மாதிரி முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கல்வி பற்றிச் சுட்டிக் காட்டிய சில போதனைகளாகும்.

நபி (ஸல்) அவர்களால் கல்வி பற்றிக் கூறப்பட்டுள்ள மற்றும் சில ஆதாரங்களை மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப், தமது தித்திக்கும் திருமறை என்ற நூலில் பின்வருமாறு சுருக்கமாகவும், அழகாகவும் முன்வைக்கின்றார்.

கல்வியைத் தேடுங்கள், ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதனைத் தேடுபவன் தூய செயல் செய்தவனாவான், கல்வியைப் பற்றி பேசியவன் இறைவனைப் புகழ்ந்தவனாவான். அதை நாடிச் செல்பவன் இறைவனை தோத்திரம் செய்தவனாவான். அதைக் கற்றுக் கொடுத்தவன் தர்மம் செய்தவனாவான். தகுதியுடையவர்களிடையே அதனைச் செம்மையாகப் பரத்துபவன் இறைவனுக்கு வணக்கம் செலுத்துபவனாவான்.

கல்வி அதனை அடைந்தவனுக்கு ஏவப்பட்டதையும் விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கின்றது. சுவர்க்கத்தின் பாதைக்கு அது ஒரு விளக்காக அமைகின்றது. பாலைவனத்தில் அது உற்ற நண்பன். தனிமையில் இருப்பவருக்கு அது கூட்டாளி. நட்பின்றி இருப்பவனுக்கு அது நல்ல தோழன். இன்பத்துக்கு அது வழிகாட்டுகின்றது. துன்பம் வரும்போது அதனைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியைத் தருகின்றது. அன்பர்கள் கூட்டத்தில் அது ஓர் ஆபரணம். பகைவர்களின் கூட்டத்தில் அது ஒரு கேடயம். அறிவின் துணையால் இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகின்றான்உயரிடங்களைப் பெறுகிறான். அதன் துணையால் இவ்வுலகில் மாமன்னனின் தோழமையைப் பெறுவான். மறுவுலகில் பேரின்ப வாழ்வையும் அடைவான்.

அந்த முதன்மை ஆசிரியரின் கீழ் பயிற்சி பெற்ற ஸஹாபாக்கள்> தாம் பெற்ற அனுபவத்தை மையப்படுத்தி கற்றல் பற்றி விரிவான கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அவற்றுள் சிலவற்றை நோக்குவோம். மக்களே, அறிவு தேடும்படி உங்களுக்கு உபதேசிக்கின்றேன். யார் அவற்றிலிருந்து ஒரு பகுதியைக் கற்றுக் கொள்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் அன்பு என்ற போர்வையினால் போர்த்தப்படுகிறார்என்று உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காகவென அதனைக் கற்கும் போது இறையச்சம் தோன்றுகின்றது. கற்பது ஓர் இபாதத் ஆகும். அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும். அறிவு தேடிச் செல்வது ஜிஹாத் ஆகும் என்று முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

காலையிலும் மாலையிலும் அறிவு தேடச் செல்வதை யார் ஜிஹாதாக கருதவில்லையோ அவருடைய அறிவிலும் கருத்திலும் குறைபாடிருக்கிறது என அபூதர் (ரழி) கூறுகிறார்கள்.

கற்றலின் சிறப்பை எடுத்துக் காட்டியது போன்றே கற்பித்தலின் சிறப்பையும் இஸ்லாம் சுட்டிக் காட்டியுள்ளது. நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதன் காரணமாகவும் கற்பதன் காரணமாகவும் ரப்பானிகளாக இருங்கள்.” (3:79) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வின் மலக்குகளும், புற்றிலுள்ள எறும்புகளும் நீரிலுள்ள மீன்களும் உட்பட பூமியிலுள்ள அனைத்தும் நல்லவற்றைப் படித்துக் கொடுப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்கின்றன (திர்மிதி) என்று நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள்.

ஒருவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஜிஹாதின் சிறப்பைப் பற்றிக் கேட்ட போது, ஜிஹாதை விட சிறப்பான ஒன்றை உங்களுக்கு சொல்லித் தரட்டுமா எனக் கேட்டு, நீங்கள் ஒரு பள்ளிவாசலைக் கட்டி அதில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள் என்பவற்றைக் கற்றுக் கொடுங்கள் என்றார்கள்.

 

தொடரும்…

Leave A Comment