குடும்பத்தின் ஆன்மீக வாழ்வு (1)

September 6, 2022
854 Views

அஷ்-ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

குடும்ப வாழ்க்கையில் ஆன்மீக சூழலை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என பலர் வினவுகின்றனர். இக்கேள்வி பலரிடம் உள்ளது. குடும்ப வாழ்வு பற்றிய புரிதலில் காணப்படும் சமநிலையற்ற பார்வையே இதற்குக் காரணமாகும். இது தொடர்பான சில விளக்கங்களை வழங்குவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான அடையாளங்களை அச்சமூகத்தில் உள்ள குடும்பங்களின் நிலைமையை வைத்து தீர்மானிக்க முடியும். குடும்பங்கள் என்பது தனிபர்களின் இணைப்பேயாகும். எனவே தனிநபர்களின் பண்புகள், பண்பாடுகள், சிந்தனைகளுக்கு ஏற்ப சமூகம் காணப்படும்.

இவ்வகையில் குடும்பங்களின் ஆன்மீகப் பெறுமானங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குடும்பமாக வாழக்கூடிய தனிநபர்களின் ஆன்மீகப் பண்புகளை வளர்ப்பதில் குடும்பங்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

குடும்ப வாழ்க்கையின் ஆரம்பம்

இஸ்லாம் குடும்ப வாழ்க்கை தொடர்பான அம்சங்களை விரிவாக விளக்கியுள்ளது. இதில் முதல் அம்சமான குடும்ப வாழ்க்கையின் அத்திவாரத்தை பற்றிய விடயம் காணப்படுகின்றது. ஒருவர் தனது துணைவியை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை கூறியதாக அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘ஒரு பெண் நான்கு விடயங்களுக்காக திருமணம் முடிக்கப்படுவாள். அவளது செல்வத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது குடும்ப அந்தஸ்திற்காக, அவளது மார்க்கத்திற்காக. மார்க்கம் உள்ள பெண்ணை மனந்து கொள். இல்லாவிட்டால் கைதேசப்படுவாய்’ (அபூ தாவூத், நஸாஈ)

திருமண வாழ்வில் இணைந்து கொள்ளுவது அல்லாஹ்வுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையாகும் என அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே குடும்ப வாழ்வில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அவனது வழிகாட்டல்களை எடுத்து நடக்க வேண்டும்.

குடும்ப வாழ்வு என்பது ஆன்மீகம் இழையோடும் வாழ்வாகும். மணப்பெண்னை மணமகன் பொறுப்பெடுக்கும் போது ஓத வேண்டிய துஆ, இல்லர வாழ்வை ஆரம்பிக்கும் போது ஓத வேண்டிய துஆ என கணவன், மணைவிக்கிடையில் ஆன்மீகப் பிணைப்பைப் பார்க்கலாம். அனைத்துச் செயற்பாடுகளிலும் அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சூழலை இங்கு அவதானிக்க முடியும்.

குடும்பத்துக்கு மத்தியில் தொழுகையை ஏற்படுத்துங்கள்

குடும்ப வாழ்க்கை சீராகவும், சிறப்பாகவும் காணப்பட அங்கு இறை வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும். இவற்றில் பிரதானமானது தொழுகையாகும். ‘ உங்கள் பிள்ளைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதாகினால் அடித்தாவது தொழுகையைப் பழக்குங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்கு வழிகாட்டுகின்றார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது குடும்பத்தை பாலைவனமான மக்காவிலே தனிமையாக விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வித உதவிகளும் எதிர்பார்க்க முடியாத அந்த அச்ச சூழலில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது ரப்பிடம் செய்த பிரார்த்தனையை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியை சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில் குடியேற்றியிருக்கின்றேன். எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவர்களுக்கு நீ கனிவர்க்கங்களிலிருந்து ஆகாரமும் அளிப்பாயாக!’ (சூரா இப்ராஹீம்:37)

அல்லாஹ்வின் அருள்களை குடும்பத்திற்குப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாக தஹஜ்ஜுத் தொழுகையை குடும்பமாக தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ‘அல்லாஹ் கணவனுக்கு அருள்புரியட்டும். அவன் இரவில் விழித்துத் தொழுகின்றான். தனது மனைவியையும் தொழுகைக்காக எழுப்புகின்றான். அவள் விழித்தெழ மறுக்கும் போது அவளது முகத்தில் நீர் தெளிப்பான். அல்லாஹ் மனைவிக்கு அருள்புரியட்டும். அவள் இரவில் விழித்துத் தொழுகின்றாள். தனது கணவனையும் தொழுகைக்காக எழுப்புகின்றாள். அவன் விழித்தெழ மறுக்கும் போது அவனது முகத்தில் நீர் தெளிப்பாள்’. (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழி), ஆதாரம்: அபூ தாவூத்).

கூட்டுத் தொழுகைக்கு விஷேட அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. எனினும் வீட்டில் நபிலான தொழுகைகளை நிறைவேற்றுவது சிறந்தது எனவும் மார்க்கம் எமக்கு வழிகாட்டுகின்றது. இதன் மூலம் வீட்டில் நலவுகள் எற்படும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்

‘நீங்கள் மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் உங்கள் தொழுகையில் வீட்டிற்கும் ஒரு பகுதியை ஆக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் அத்தொழுகையின் மூலம் வீட்டில் நலவுகளை ஏற்படுத்துவான்’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) அவர்கள், ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)

இவ்வகையில் குடும்பமாக நபிலான தொழுகைகளில் ஈடுபட முடியும். தஹஜ்ஜுத் தொழுகையை வீட்டில் கூட்டாக நிறைவேற்ற முடியும். ஏனைய தொழுகைகளான முன்பின் சுன்னத்துக்கள், ளுஹா, வித்ர் போன்ற தொழுகைகளை வீட்டில் தொழுவதுடன், பிள்ளைகளையும் அதற்குப் பழக்க முடியும். இதன் மூலம் தொழுகையுள்ள சிறந்த குடும்பங்களாக நாம் மாறலாம்.

Leave A Comment