தலைமைகள் தம்மை மாற்றிக் கொள்வதற்கான மாதம் (02)

May 28, 2018
1,237 Views

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா

இன்று எமது சமூகத்தில் பல்வேறு தலைமைகள் செயற்பட்டு வருகின்றன. நேரடியான மார்க்க விவகாரங்களுக்கு தலைமை வழங்கி வருகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சமூகப் பொதுப் பிரச்சினைகளுக்கு வழிகாட்டல்களை கொடுக்கின்ற தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில், தஃவா செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் என பல தரப்பினர் சமூகத் தளத்தில் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள், அமைப்புக்கள் மூலமாக சமூகம் பல்வேறு பயன்களைப் பெற்று வருகின்றது. இவற்றின் தேவையும் சமூகத்திற்கு பரந்த அடிப்படையில் காணப்படுகின்றது. சமூகத்தில் பல இடைவெளிகளை இவை நிரப்பி வருகின்றன. சமூக மாற்றத்தில் இவற்றின் வகிபாகம் பாரியது என்பது தெளிவான ஒரு உண்மையாகும்.

இந்நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது பணியை இரண்டு வகையில் செய்து வருகின்றன. ஒன்று ஏனைய தரப்பினருடன்; ஒருங்கிணைந்த வகையில் செயற்படுகின்றன. அடுத்து ஒவ்வொரு தரப்பினரின் விஷேட நோக்கங்களுக்கு ஏற்ப தனியாகவும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இணைந்து செயற்படக்கூடிய கலாச்சாரம் அண்மைக் காலத்தில் எமது சமூகத்தில் வளர்ந்து வருகின்றது. இதன் பின்புலம் இயல்பானதாக இல்லாவிட்டாலும் காலத்தின் தேவை, நிகழ்வுகளின் நிர்ப்பந்தங்கள் எம்மை ஒன்று சேர்கின்றது. இதிலும் நன்மைகளே உள்ளன.

சமூகத்தில் பணியாற்றுகின்ற இவ்வகையான அமைப்புக்களின் பிரதான நோக்கம் சமூகத்தின் பொது நலன்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே. சமூகத்தின் நலன்கள் எவை, அவற்றை யார் மேற்கொள்வது என்பது தொடர்பில் வித்தியாசமான, பலபோது முரண்பட்ட கருத்துக்கள், பார்வைகள், நிலைப்பாடுகள் காணப்படுவது இயல்பு. இதில் பிரச்சினை கிடையாது.

நாம் தான் செய்ய வேண்டும், நாமே தலைமைத்ததுவம் கொடுக்க வேண்டும், எமது வழிகாட்டல்களில் தான் மற்ற அனைவரும் இயங்க வேண்டும், எமக்கு அதிகமான அனுபவங்கள் உள்ளன, எம்மை மீறிய வகையில் எந்த செயற்பாடுகளும் நடைபெறக்கூடாது என்ற சிந்திப்பே பிரச்சினைக்குறிய அம்சமாகும்.

இது ஒரு வகையில் தலைமைத்துவப் பிரச்சினை. யார் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவம் கொடுப்பது? அது ஒரு தனி சபையா, அல்லது கூட்டுத் தலைமைத்துவமா, அல்லது துறைவாரியாக ஒவ்வொரு தரப்பும் சமூகத்திற்கு தலைமை வழங்குவதா??

இது தொடர்பில் இன்று சமூகத்தில் ஒரு வகையான போட்டியிருப்பதை காண முடிகின்றது. இதன் விளைவால் தன்னை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளும், பிறரை குறைகாணும் மனோநிலையும் வளர்ந்து வருகின்றது. அமைப்புக்கள், நிறுவனங்கள் சமூகத்தில் இயங்கி வருகின்றன என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்டு அதனையும் அங்கீகரித்து அவற்றைப் பலப்படுத்த வேண்டும் என்று சிந்திக்கும் என்ற இடத்தில் இல்லாமல் வெளியில் இருந்து மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையும் காணப்படுகின்றது.

இது இருக்கின்ற கட்டமைப்பை மறுதலித்து அதற்கு மாற்றீடாக வேறொரு கட்டமைப்பைப் பற்றிய சிந்திப்பாகும். இது ஆரோக்கியமானதல்ல. இதன் மூலமாக சமூகத்தின் பிளவுகள் அதிகரிக்கும். பொது மக்களுக்கு மத்தியில் ஒருவகையான குழப்ப நிலை தோற்றம் பெறும்.

இந்த நிலமைகள் உருவாகாமல் இருக்க வேண்டுமாயின் ஒவ்வொரு அமைப்பும், நிறுவனமும் தனது தரப்பால் விட்டுக் கொடுக்க முடியுமான பகுதிகளை இணங்கான வேண்டும். ஏனைய தரப்பினருடன் மனந்திறந்து கலந்துரையாட முன்வர வேண்டும்.

நாம் சமூக மட்டத்தில் பொது மக்களை நோக்கி போதிக்கும் விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளல், பிறரை அங்கீகரித்தல், பொதுப் பணிகளில் சேர்ந்து உழைத்தல் போன்ற பண்புகள் நிறுவனங்கள், அமைப்புக்களின் தலைமைகளில் ஆரம்பத்தில் வர வேண்டிய தேவை இருக்கின்றது.

இதனைத் தான் அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது ‘ நன்மை, தக்வா சார்ந்த அம்சங்களில் நீங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயற்படுங்கள்’ (மாஇதா 2).

இந்த மனோநிலையுடன் சமூகத்தின் உயர் பீடங்களில் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். சமூகத்தின் பொது நலன், எமது எதிர்கால இருப்பு என்பன இவர்களின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி தாக்கமுள்ள சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறுவது, அடுத்த சமூகங்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியான மார்க்கமாக எப்படி இஸ்லாத்தை நாம் இந்நாட்டில் முன்வைப்பது என்பது பற்றி நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

இவற்றின் மூலமாக நாம் அனாவசியமான கருத்தாடல்களை தவிர்ந்து கொள்ளலாம். ஆரோக்கியமான வேலைத்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான வாயில்களைத் திறக்கலாம். தகுதியானவர்கள் பொறுப்புக்களுக்கு வருதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம். முரண்பாடுகள் குறைந்த பரஸ்பரம் ஒத்துழைத்து செயற்படக்கூடிய சமூகத்தை உருவாக்கலாம்.

இது குறித்து ஒவ்வொரு தரப்பினரும் சிந்திப்போம். பிறரைப் பற்றிப் பேச முன்னர் தமது நிலைமை பற்றி தமக்குள்ளால் கலந்துரையாடுவோம். நாம் விட்ட தவறுகளை அடையாளப்படுத்துவோம். அவற்றை சரி செய்து கொள்வதற்காக முன்வருவோம். மற்றவர்களை அங்கீகரித்து எமது அடிப்படைப் பணியான இஸ்லாமிய தூதை எத்திவைப்பதற்கான சிறந்த சூழலை உருவாக்குவோம்.

அல்லாஹ் எம்மனைவருக்கும் உதவி செய்வானாக.

Leave A Comment