தலைமைகள் தம்மை மாற்றிக் கொள்வதற்கான மாதம் (01)

May 21, 2018
1,468 Views
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்
தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா.
 
அருள்மிகு சங்கையான ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் பல்வேறு சுபசோபனங்களை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குகின்றது.
 
ரமழான் மாதம் மாற்றத்திற்கான மாதம். அது எமது சிந்தனைகள், நடத்தைகள், பண்பாடுகளை மாற்றுவது போன்று ஈமானிலும் அதிகரிப்பை ஏற்படுத்துகின்றது. சமூகத்திற்கு மத்தியில் வளர வேண்டிய உயர் விழுமியங்களை இம்மாதத்தின் தென்றல்கள் தன்னகத்தே கொண்டுள்ளது.
 
ரமழான் மாதத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியவர்கள் யார் என்ற கேள்வி இன்றைய காலத்தில் தோன்றுகின்றது. அது சமூகத்தில் உள்ள பொது மக்களா, அல்லது பொது மக்களை நல்வழிப்படுத்துவதில் அதிகூடிய கவனம் எடுக்கின்ற சமூகத்தின் தலைமைகளா?.
 
அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும், அல்குர்ஆனை அதிகமதிகம் ஓத வேண்டும், பள்ளியுடனான தொடர்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும், சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள், இவற்றின் மூலமாக ஈமான் பலமடைகின்றது. தக்வா வளர்கின்றது என சமூகத்துக்கு மத்தியில் உலமாக்கள், சமூகத் தலைமைகள் நிறைய விளக்கங்களை கொடுக்கின்றனர். பயான்கள் செய்து வருகின்றனர்.
எமது பண்பாடுகள் சீராக வேண்டும். விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், சகோதரத்துவம், சகித்துக் கொள்ளல், ஒத்துழைத்தல் போன்ற பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல காரியங்களில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்றெல்லாம் பொது மக்களுக்கு சமூகத் தலைமைகள் வழிகாட்டி வருகின்றனர்.
 
இது சரிதான். இவை சொல்லப்பட வேண்டிய அம்சங்கள். சமூகம் இந்த விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகவும் உள்ளதை நாம் உணர்கின்றோம். இது ஒரு பக்கம். இதில் மற்றுமொரு பக்கமும் இருக்கின்றது.
 
இவற்றை மக்களுக்கு மத்தியில் போதிக்கின்ற உலமாக்கள், தலைமைகள் போதிக்கப்படுகின்ற இந்த அம்சங்களில் எவ்வளவு அவர்கள் நடைமுறைப்படுத்த முனைகின்றார்கள் என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது.
 
இன்று அறிவை தேடிப் பெற்றுக் கொள்ள பல வழிகள் காணப்படுகின்றன. மக்கள் பல விடயங்களில் தெளிவுடன் இருக்கின்றார்கள். அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வமும் காட்டுகின்றார்கள். ஆனால் அறிவைப் போதிப்பதிலும் அதனைப் பெற்றுக் கொள்வதிலும் காணப்படும் ஈடுபாடு போல் அதனை சொந்த வாழ்வில் எடுத்து நடப்பதில் பலவீனம் காணப்படுகின்றது.
 
அவ்லவிய்யாத் என்ற முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்கள் பற்றிய அறிவின் ஒருபக்கப் பார்வை, தம்மிடம் காணப்படுகின்ற தனிப்பட்ட நியாயங்கள், பலவீனங்கள், சட்டங்களில் காணப்படுகின்ற சலுகைகள் பற்றிய பரப்பை பொது மக்களுக்கு போதிப்பதை விட அவற்றை தலைமைகள் அறிந்து அவற்றை கடைபிடிக்கின்ற போக்கு என இதற்கு பல காரணங்களைக் கூற முடியும்.
 
இது ஒருவகையில் பிழையான முன்மாதிரியாகும். இஸ்லாம் இப்படியான வாழ்வொழுங்கை அங்கீகரிக்கவில்லை. இப்போக்கை அல்குர்ஆன் கண்டிக்கின்றது. தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்புக்கள், அல்குர்ஆன் ஓதுவதன் மகிமை, சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதன் முக்கியத்துவம், தராவீஹ் தொழுகையின் பயன்கள் போன்ற இன்னோரன்ன அமல்களின் சிறப்புக்களை அறிந்து வைப்பதன் பயன் என்னவாக இருக்கும். அவற்றை நடைமுறைப்படுத்தாத போது??.
 
இன்று சமூகத்தில் காணப்படும் பெரிய இடைவெளிகளில் ஒன்று கற்றதை நடைமுறையில் கொண்டுவருவதில் காணப்படும் அசிரத்தை. இதனால் ஒருவகையான அவநம்பிக்கை சமூகத்தில் வளர்க்கப்படுகின்றது. எவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
 
ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதன் முக்கியத்துவத்தை போதித்த நபி (ஸல்) அவர்கள் அதனை நடைமுறையில் செய்து காட்டினார்கள். தன்னுடன் தனது தோழர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். ரமழான் காலத்தின் இரவை நின்று வணங்கி உயிர்ப்பித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அதற்கு ஸஹாபிகளை நபி (ஸல்) அவர்கள் பயிற்றுவித்தார்கள்.
 
எமது தலைமைகள் தமது பலம், பலவீனங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தம்மை சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த சந்தர்ப்பம் ரமழான் மாதமாகும். அதிலும் குறிப்பாக ரமழானின் கடைசிப் பத்து நாட்களாகும்.
 
ரமழான் காலத்தில் பெரும் இமாம்கள், அறிஞர்கள் அல்குர்ஆனை ஓதுவதற்காக நேரம் எடுத்துக் கொணடார்கள். இமாம் ஸூஹ்ரி, இமாம் கதாதா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் புஹாரி போன்ற பெரிய அறிஞர்கள் ரமழான் மாதத்தின் பல தடவைகள் அல்குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.
 
இதன் கருத்து அவர்கள் ரமழான் மாதத்தை பார்த்த பார்வை. இது தம்மை மாற்றிக் கொள்வதற்கான மாதம். அல்லாஹ்வுடனான உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம். இதில் பிறரை விட நாம் போட்டியுடன் செயற்பட வேண்டும். வருடத்தில் 11 மாதங்கள் மக்களுக்கு வழங்கிய நான் இம்மாதத்தை எனக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் பார்த்தார்கள்.

Leave A Comment