பிறரின் உரிமையை அபகரிப்பது மிகப் பெரிய பாவம்
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிமின் உரிமையை பொய்ச் சத்தியத்தின் மூலம் அபகரித்துக் கொண்டவன் மீது அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கி, சொர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான்.
அப்போது ஒருவர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! அது மிகவும் சிறிய பொருளாக இருந்தாலும் அப்படியா?
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஆம், அது அராக் மரத்தின் ஒரு சிறிய குச்சியாக இருந்தாலும் கூட.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இஸ்லாம் மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை மிகுந்த முக்கியத்துவத்துடன் வலியுறுத்துகிறது. பிறரின் உரிமைகளைப் பொய்ச் சத்தியம், அதிகாரம் அல்லது வேறு எந்த அநியாயமான வழியிலும் அபகரிப்பது பெரும் பாவமாகும். அபகரிக்கப்பட்டது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் அதற்கான எச்சரிக்கை கடுமையானதே.
எனவே, ஒரு முஸ்லிம் மக்களின் உரிமைகள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறரின் உரிமையை மீறியிருந்தால், உண்மையான தவ்பாவுடன் அந்த உரிமையை அதன் உரியவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மனிதர்களின் உரிமைகள் குறித்து இவ்வளவு கடுமையான எச்சரிக்கை இருக்கும்போது, அல்லாஹ்வின் உரிமைகளைப் புறக்கணிப்பதன் ஆபத்து இன்னும் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
படைப்புகளுக்கு அன்பு காட்டுங்கள்
ஒரு மனிதன் அல்லாஹ்வின் படைப்புகளிடம் எவ்வளவு அதிக கருணையுடன் நடந்து கொள்கிறானோ, அவ்வளவு அதிகமாக அல்லாஹ்வும் அவன்மீது கருணை புரிவான். ஏனெனில், செயலுக்கேற்பவே அதன் கூலி அமையும்.
எனவே, மனிதர்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்கு நலவை நாட வேண்டும். இது விடயத்தில் இன மாத மொழி வேறுபாடுகளைப் பார்ப்பதல்ல. மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும்.
எனவே, உள்ளத்தில் காழ்ப்புணர்வு, வஞ்சகம், பொறாமை, பழிவாங்கல், பதவியாசை, கடினசித்தம் போன்ற நோய்கள் வளர இடம் கொடுக்கக் கூடாது. இத்தகைய உள்ளங்களைக் கொண்டவர்களால் தான் மனிதர்களுக்கு தீங்கு வருகின்றது.
அல்லாஹ் அன்பானவன். கருணையுள்ளவன். அன்பை, கருணையையே அவன் விரும்புகின்றான்.
வரலாற்றில் அரபிகள் காட்டிய மத சகிப்புத்தன்மை
கி.பி 647 முதல் 657 வரை பதவி வகித்த பேட்ரியார்க் மூன்றாவது இஷோ யஹப், அவர் கூறுகின்றார் ‘இறைவன் உலகின் ஆட்சியை வழங்கியுள்ள அரபிகள் எங்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் எதிரிகள் அல்லர். மாறாக, எங்களது மதத்தைப் பாராட்டுகிறார்கள். எங்கள் புனிதர்களையும், குருமார்களையும் கௌரவிக்கிறார்கள். மேலும், எங்கள் தேவாலயங்களுக்கும் மடங்களுக்கும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.”
ஸதகா
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில், அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் ஏழு நபர்களுக்கு நிழல் அளிப்பான். அவர்களில் ஒருவர், வலது கை கொடுப்பதை இடது கை அறியாதவாறு மிக ரகசியமாக தர்மம் செய்த மனிதர் ஆவார்.”





