ஸலாமா வாராந்த நினைவூட்டல் 05

May 21, 2026
12 Views

சிறந்த தோற்றத்தை விரும்பும் இமாம் அபூ ஹனீபா (ரஹ்)

இமாம் அபூ ஹனீபா அவர்கள்இ தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்களும் தோழர்களும் கண்ணியமான தோற்றத்துடன் இருப்பதை பெரிதும் விரும்புபவராக இருந்தார்கள். குறிப்பாக அவர் தொழுகைக்காகத் தயாராகும் போதுஇ தனது மிகச் சிறந்த ஆடைகளை அணிந்து நறுமணம் பூசிக் கொள்வார். “நான் அகிலத்தைப் படைத்த அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கப் போகிறேன்” என்பதே அவரின் இந்தச் செயலுக்கான காரணமாக இருந்தது.
ஒரு முறை, தம் அருகில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் மிகவும் கிழிந்த, கந்தலான ஆடையில் இருப்பதைக் கண்டார். உடனே அவர் கைகளில் இரகசியமாக ஆயிரம் திர்ஹம்களைக் கொடுத்து, “இதைக் கொண்டு உமது ஆடைகளையும் தோற்றத்தையும் செப்பனிட்டுக் கொள்ளும்” என்று மெல்லிய குரலில் கூறினார்.
அதற்கு அந்த மனிதர், “என்னிடம் போதிய வசதி உள்ளது, எனக்கு இது தேவையில்லை. உலக இன்பங்களைத் துறந்து (ஸுஹ்த்) வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஆடையை அணிகிறேன்” என்றார்.
அப்போது இமாம் அவர்கள் அவரிடம் பின்வருமாறு கேட்டார்கள்:
“ ‘நிச்சயமாக அல்லாஹ், தான் ஓர் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையின் அடையாளத்தை அந்த அடியாரிடம் காணவே விரும்புகிறான்’ என்ற நபிமொழி உமக்குத் தெரியாதா?” (திர்மிதி).

கஃபாவின் சாவியை வைத்திருக்கும் குடும்பம்

இவர்கள் ‘பனூ ஷைபா’ எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கஃபாவின் சாவியை பாதுகாப்பதும், அதற்கான பொறுப்பையும் மேற்கொள்வதும் இவர்களே.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, அதாவது 16 நூற்றாண்டுகளுக்கு மேலாக குஸை இப்னு கிலாப் சந்ததியினருக்கு கஃபாவின் சேவையைச் செய்யும் உரிமை வழங்கப்பட்டது. அந்த வரிசையில் இன்றும் ‘ஆல் ஷைபா’ குடும்பத்தினர் கஃபாவின் பராமரிப்பாளர்களாக உள்ளனர்.
கஃபாவைத் திறப்பதும், மூடுவதும், அதை சுத்தம் செய்வதும் போன்ற பணிகள் அனைத்தும் இவர்களுடைய பொறுப்பாகும். இந்த பொறுப்பு நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டது. பனூ ஷைபா குடும்பம் ஸஹாபி உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களின் சந்ததியினராகும்.
மக்கா வெற்றியின் போது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை அவரிடம் வழங்கி,
“இதனை எடுத்து கொள், தல்ஹாவின் குடும்பமே! இது நியாய நாள் வரை உங்களிடமே இருக்கும்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் திரும்பி விடுங்கள்

(وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ)

“உங்கள் இறைவனிடத்திற்கு திரும்புங்கள். அவனுக்கு முழுமையாக நீங்கள் கட்டுப்படுங்கள்” (சூறத்துஸ் ஸுமர்: 54) அதாவது: உங்கள் உள்ளங்களாலும் உங்கள் செயல்களாலும் அல்லாஹ்விடம் திரும்புங்கள். அல்லாஹ்வின் அருள், இரக்கத்திலிருந்து நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பான்.

Leave A Comment