ஷூரா எனும் பொறிமுறையைப் பலப்படுத்துவோம் (1)

January 24, 2020
1,900 Views
  • ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

இஸ்லாம் ஷூரா செய்வதை வலியுறுத்தியுள்ளது. அதன் தேவையை பல அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன. வீடு முதல் ஆட்சி வரை ஷூரா நடைபெற வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கின்றது.

கூட்டுச் செயற்பாடு, கூட்டுப் பொறுப்பு காணப்படும் அனைத்து இடங்களிலும் ஷூரா நடைபெற வேண்டும். பரஸ்பரம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, அவற்றை கலந்துரையாடி பொறுத்தமான முடிவுகள் பெறப்பட வேண்டும்.

இன்று இதற்கான தேவை அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமான இரு காரணங்களை அடையாளப்படுத்தலாம். ஒன்று, ஊர்  மட்டம் முதல் தேசிய மட்டம் வரை அதிகரித்து வரும் நிறுவனங்கள், அமைப்புக்கள். மற்றையது அமானிதங்கள் குறைந்து செல்வதனால் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரால் தனிப்பட்ட நலன்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றமை.

தேசிய மட்டத்தில் ஜமாஅத்துகள், நலன்புரி  தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத்ரஸாக்கள் என நிறுவனங்களும் அமைப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

அதே போன்று ஊர் மட்டங்களில் பள்ளிவாசல் நிர்வாகம், அதன் கீழ் காணப்படும் ஏனைய துணைக் குழுக்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டுக் கலகங்கள், இளைஞர் மன்றங்கள், அபிவிருத்தி சங்கங்கள் என பல வடிவங்களில் மக்கள் கூட்டாக செயற்பட்டு வருகின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய ஷூரா சபை போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் கிராம மட்டத்தில் இயங்கும் சிறிய அமைப்புக்கள் வரை ஷூரா எனும் பொறிமுறையை அமுல்படுத்தி வருகின்றன.

இவை அனைத்தும் கூட்டு அமைப்புக்கள் என்ற வகையில் சமூகத்தை நோக்கி செயற்படுகின்றன. அதற்கான முறைமைகளை வகுத்து தமது பணிகளை செய்து வருகின்றன. நல்ல பல செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுப்பதனால் சமூகத்திற்கு நல்ல பயன்கள் கிடைக்கின்றன.

இந்த அனைத்துத் தரப்பினரும் கூட்டுச் செயற்பாடு என்ற இடத்தில் செயற்படுவதனால் இஸ்லாம் கூறும் ஷூரா பற்றிய முக்கிய பல அடிப்படைகளை அறிந்திருப்பது முக்கியமானது. கருத்துக்களை முன்வைப்பதற்கான சூழல் எவ்வாறு காணப்பட வேண்டும், முடிவுகள் பெறுவதற்கான முறை எத்தகையது, பெரும்பான்மைக் கருத்தை முடிவாகப் பெறுவதா அல்லது தலைவருக்கு இது தொடர்பில் காணப்படும் அதிகாரங்கள் எவை போன்ற பல விடயங்கள் தொடர்பான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் எவை என்பது பற்றி அறிந்து செயற்படும் போது ஷூரா மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அடைந்து கொள்ள முடியும்.

ஷூராவின் முக்கியத்துவம்.

அல்குர்ஆனில் ஷூரா செய்வதன் அவசியம் பற்றி பல வசனங்கள் வந்துள்ளன. குடும்ப வாழ்வில் ஷூரா செய்வதன் தேவையை அல்குர்ஆன் கூறுகின்றது. குழந்தைக்கு பாலூட்டும் விடயமாக கலந்தாலோசனை செய்யுமாறு அல்லாஹ்தஆலா பெற்றோருக்கு கட்டளையிட்டுள்ளான். “அவர்கள் இருவரும் பரஸ்பர திருப்தி, ஆலோசனையின் அடிப்படையில் பால்குடியை நிறுத்த விரும்பினால் அவ்விருவர் மீதும் குற்றமில்லை” (பகரா 233).

”மேலும் அவர்கள் தமது இரட்சகனுக்கு கட்டுப்படுவார்கள். மற்றும் தொழுகையை நிலைநாட்டுவார்கள். தமது விவகாரங்களை தமக்கு மத்தியில் கலந்தாலோசனை செய்வார்கள். மற்றும் நாம் அவர்களுக்கு வழங்கியதில் இருந்து செலவு செய்வார்கள்” (ஷூரா: 37-38) இது ஒரு மக்கி வசனமாகும்.

இவ்வசனத்தில் இஸ்லாத்தின் இரு பெறும் கடமைகளாகிய தொழுகை, ஸகாத் ஆகியவற்றுக்கிடையில் ஷூரா பற்றிய கட்டளை வந்திருப்பது கலந்தாலோசனை செய்வதன் கட்டாயத்தன்மையை விளக்குவதற்குப் போதுமானதாகும். அதாவது இஸ்லாமிய அரசு தோன்ற முன்னரே ஷூரா செய்வதன் அவசியம் இங்கு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷூரா செய்தல் என்பது அரசியலுடன் தொடர்பான ஒரு அங்கம் என்பதுடன் சுருங்கியதல்ல. அது முஸ்லிம் சமூகத்தின் ஓர் அடிப்படையான தனித்துவமான பண்பாகும் என ஷஹீத் செய்த் குத்ப் விளக்குகின்றார்.

ஷூராவிற்கு இஸ்லாம் உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும் என இமாம் இப்னு அதிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார். மற்றும் யார் அறிஞர்களிடம் கலந்தாலோசனை செய்யவில்லையோ அவர் கட்டாயம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இதில் கருத்து வேறுபாடு கிடையாது என்றும் கூறுகின்றார். (தப்ஸீர் குர்துபி).

”(நபியே) நீர் அவர்களை மன்னித்து விடுவீர்களாக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேற்பீர்களாக. மற்றும் விவகாரங்களில் அவர்களை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்வீர்களாக. உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால் அல்லாஹ் மீது பொறுப்புச் சாட்டிச் செயற்படுவீராக ” (ஆல இம்ரான்: 159). இது ஒரு மதனி வசனமாகும்.

உஹது யுத்தம் பற்றிப் பேசுகின்ற வசனங்களின் போது ஷூரா பற்றிய மேற்படி வசனமும் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் மிகப் பொறுப்பான விடயங்கள் தீர்மானிக்கப்படும் போது அதற்குத் தகுதியானவர்களிடம் கலந்தாலோசிப்பது கட்டாயக் கடமையாகும்.

நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞரான இமாம் இப்னு ஹூவைஸ் மின்தாத் என்பவர் ஷூரா செய்வதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்குகின்றார். “அறியாத விடயங்களிலும், மார்க்கத்தில் சிக்கலான இடங்களிலும் அறிஞர்களை கலந்தாலோசிப்பது பொறுப்பாளர்களின் கடமையாகும். மற்றும் போராட்டம் பற்றி அத்துறை சார்ந்தவர்களிடமும், நலன்கள் பற்றி அது தொடர்பான ஆளுமைகளிடமும், நாட்டு நலன், அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர்கள், மற்றும் இத்துறை சார்ந்தோரிடமும் பொறுப்பாளர்கள் ஷூரா செய்வது கடமையாகும்”.

சுன்னாவில் ஷூரா செய்வதன் முக்கியத்துவம்.

வஹி அருளப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஸஹாபாக்களுடன் கலந்தாலோசனை செய்வார்கள் என அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹிஜ்ரத் தொடர்பாக அபூ பக்ர் (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் கலந்துரையாடினார்கள்.

பத்ர் யுத்தம், உஹத் யுத்தம் போன்ற ஆரம்ப யுத்தங்கள் செய்வது தொடர்பாக ஸஹாபாக்களுடன் கலந்துரையாடிய நபி (ஸல்) அவர்கள் யுத்தத்தின் பின்னரும் கலந்தாலோசனை செய்துள்ளார்கள். பத்ர் யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகள் விடயத்தில் என்ன செய்வது என்ற கருத்துக்களை ஸஹாபாக்களிடம் ஷூரா செய்து முடிவெடுத்தார்கள். உஹத் யுத்தத்தை மதீனா நகரத்தின் உள்ளே இருந்து மேற்கொள்வதா அல்லது மதீனாவுக்கு வெளியில் சென்று எதிர் கொள்வதா என்ற விடயத்தில் தனது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.

அகழி யுத்தத்தின் போது செய்த கலந்துரையாடலின் விளைவாக ஸல்மானுல் பாரிஸி (ரழி) அவர்களின் கருத்தை மையமாக வைத்து அகழி தோன்றும் பணியை செய்தார்கள். (தொடரும்).

 

Leave A Comment