ஷூரா எனும் பொறிமுறையைப் பலப்படுத்துவோம் (02)

March 6, 2020
1,329 Views

ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

ஷூரா செய்வதற்கான ஆரோக்கியமான சூழலின் அவசியம்

ஷூரா எனும் போது பொது விவகாரங்களில் பொறுத்தமான முடிவைப் பெற்றுக் கொள்வதற்காக கருத்துக்கள் கலந்துரையாடப்படும் இடமாகும். பொறுத்தமான முடிவுகள் பெறப்படும் போது காலம், சூழல், இடம் என்பவற்றின் வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு காலத்தில் எடுக்கப்படும் முன்மொழிவுகள் இன்னொரு காலத்திற்கு பொறுத்தமற்றதாகக் காணப்படலாம். அதே போன்று ஒரு இடத்திற்கு பொறுத்தமான முடிவு இன்னொரு இடத்திற்கு பொறுத்தம் இல்லாது இருக்கலாம். எடுக்கப்படக் கூடிய முடிவுகள் அதன் விளைவுகளைக் கருத்திற் கொண்டு எடுக்கப்படுவது மிக முக்கியமானது.

இந்த இடத்தில் ஷூரா நடைபெறும் சபை கருத்துக்கள் சொல்லப்பட சாதகமான சூழலாக இருப்பது மிக முக்கியமானது. அனைவரும் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாது சுதந்திரமாக தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உத்தரவாதம் அங்கு நிலவ வேண்டும்.

கருத்துத் தினிப்புக்கள், கருத்து ஆக்கிரமிப்பு இருப்பது ஷூரா செய்தல் என்ற அடிப்படைக் கொள்கைக்கு முரண்படும் ஒரு செயலாகும். சமூகத்தில் இப்படியான நோய்கள் இருப்பதை ஆங்காங்கு அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இது ஷூராவின் நோக்கத்தையே இல்லாமல் செய்கின்றது.

ஏலவே தான் தயாராகி வந்த கருத்தை எவ்வாறாவது பிறர் ஏற்கும் வகையில் சொல்வதில் சிலர் அக்கரையாக இருக்கின்றனர். தனது கருத்துக்கு அல்லது அபிப்பிராயத்திற்கு மற்றவர்கள் உடன்படும் வரை அவர்கள் வாதிடுவார்கள். அல்லது பிறர் சொல்லும் கருத்துக்களை பலபோது பொறுத்தமற்றது என்று கூறுவதன் மூலம் தமது கருத்துக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான சூழலை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இது ஷூரா செய்வதற்கான அழகிய சூழலாக இருக்காது. தலைவராக இருந்தாலும் அவரை விட தரத்தில் குறைந்தவர்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் பண்பாடு வளர்க்கப்பட வேண்டும். தனக்கு மாத்திரமல்ல, மற்றவர்களும் பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தனது கருத்துக்கள், அல்லது தலைவரது கருத்துக்கள் தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று காணப்படுமாயின் ஷூராவின் பெறுமானமே இல்லாமல் போகின்றது. ஷூரா எந்த நோக்கத்திற்காக விதியாக்கப்பட்டதோ அந்நோக்கம் நிறைவேற்றப்படாமல் ஷூராவின் அந்தஸ்து குறைந்து விடுகின்றது.

ஷூரா செய்வதன் பயன்கள்

இஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்த ஷூரா என்ற வழிமுறையானது பல்வகை பயன்களை தருகின்றது. இதன் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள், சமூகங்கள், மற்றும் தேசம் நிச்சயம் பயன்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஷூரா செய்வதன் மூலம், தான் குறித்த நிறுவனத்தைச் சார்ந்தவன், அதன் வளர்ச்சியில் தானும் பங்களிப்பு செய்துள்ளேன், தொடர்ந்தும் என்னால் பங்களிப்பு செய்யலாம் என்ற நம்பிக்கையையும், நிறுவனத்தின் பாலான ஈர்ப்பையும் வளர்கின்றது.

கருத்துக்கள் உள்வாங்கப்படாத போது இப்படியான ஈர்ப்பு நிலை இல்லாது இருப்பதை சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளில் நாம் தாராளமாகக் காண்கின்றோம். இப்படியான நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சி, எழுச்சியில் தானும் ஒரு பங்காளி என்ற பற்றில்லாது, தான் ஒரு ஊழியன் மாத்திரமே என்று அவர்கள் தம்மைக் கணித்துக் கொள்வார்கள்.

ஷூராவின் மூலமாக பொருத்தமான நபர்கள் பொருத்தமான இடங்களில் அமர்த்தப்பட வழியேற்படுகின்றது. பொறுப்புக்களுக்கு உரியவர்கள் இதன் மூலம் அடையாளப்படுத்தப்படுவார்கள். இன்று அதிகமான மனித வளங்கள் முறையற்ற ஒழுங்கில் பயன்படுப்படுகின்றமையால் அவைகளின் மூலம் உரிய பயனை பெற முடியாமல் இருக்கின்றது. மனித வளங்களின் தேவை அதிகமாக உணரப்படக்கூடிய இக்காலத்தில் ஷூரா செய்வதன் மூலம் மனித வளங்களின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கலாம்.

ஷூராவின் மூலம் உள்ளங்கள் ஒன்றுபடுகின்றன. ஒவ்வொருவரும் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலைமை காணப்படும் போது, அவற்றை பிறர் செவிமடுக்கும் சூழல் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நம்பிக்கையுடன் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள். தொடர்ந்து வரக்கூடிய அமர்வுகளுக்காக தயாராகி வருவார்கள்.

ஷூரா செய்வது பணிவை ஒருவனிடம் வளர்க்கும். தான் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் பிறர் கருத்தையும் நான் உள்வாங்க வேண்டும் என்ற அடிப்படையை ஷூரா எற்படுத்துகின்றது. இதற்குப் புறம்பாக சர்வாதிகாரியாக நடந்து கொள்வது கர்வத்தையும் தற்பெருமையையும் வளர்க்கும். கலந்துரையாடல் செய்வது என்பது ஒருவனது குறையாக ஒருபோதும் பார்க்கப்பட மாட்டாது. கலந்தாலோசனை செய்யாது இருத்தல் என்பதுதான் ஒருவனது தரக் குறைவைக் காட்டும் என கலாநிதி அஹ்மத் ரைஸூனி குறிப்பிடுகின்றார்.

வெற்றி, முன்னேற்றத்திற்கான பாதை ஷூரா செய்வதாகும். வேகமாக மாறிவரும் இவ்வுலகில் தனித்து யாரும் செயற்பட முடியாது. சாதிக்கவும் முடியாது. தனக்கு அனைத்தும் தெரியும் என்று பயணிப்பவனின் பயணம் குறுகியது. அதற்கு நீண்ட ஆயுள் கிடையாது.

கலீபா உமர் (ரழி) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இக்கருத்தை மேலும் தெளிவுபடுத்துகின்றது. அவர்களது காலத்தில் பாரசீகத்திற்கு எதிராக நடைபெற்ற ஒரு யுத்தத்தின் போது பாரசீகத் தளபதி யுத்தத்தை நிறுத்துவது பற்றிக் கலந்துரையாட முஸ்லிம்களின் தளபதியை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கு முஸ்லிம் தளபதி இது விடயமாக தான் தனது போராளிகளுடன் கலந்துரையாடிய பின்னரே தமது கருத்தைத் தெரிவிக்க முடியும் எனக் கூறினார். திகைத்துப்போன பாரசீகத் தளபதி, ஏன் நீங்கள் தலைவர் அல்லவா, ஷூரா செய்வோரை நாம் தலைவர்களாக நியமிப்பதில்லை என்று கூறினார். அதற்கு முஸ்லிம் தளபதி, இதனால் தான் நாம் உங்களை வெற்றி கொள்கின்றோம். மற்றும் ஷூரா செய்யாதவர்களை நாம் தலைவர்களாக நியமிக்க மாட்டோம் என்று கூறினார்.

காலம் மனிதர்களின் பெறுமானங்களை மாற்றிவிட்டது. இன்று பெயரளவில் ஷூரா நடைபெறுகின்றது. தகுதியானவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை. தனக்கு விருப்பமானவர்கள், தனது கருத்துக்கு தலை சாய்ப்பவர்களிடம் கருத்துக் கேட்டும் உளப்பாங்கு வளர்ந்து வருகின்றது. இதனால் பொது நலன்கள் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன.

இதனால் சமூகம், நாடு இன்னும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். இது ஒருவகையில் பெரும் துரோகமும் மோசடியுமாகும். இது விடயமாக சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். (தொடரும்).

Leave A Comment