‘நமது பிள்ளை நமது பொறுப்பு’

February 15, 2019
3,317 Views

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் – தலைவர், ஸலாமா.

பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும். இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எனது பிள்ளைகளின் முன்னேற்றம், பலவீனங்களுக்கு நான் தான் காரணம் என்ற பொறுப்புணர்வுடன் நாம் எமது பிள்ளைகள் விடயத்தில் கவனம் எடுப்போம்.

பிள்ளைப் பாக்கியம் இறையருள்.

அல்லாஹ்வின் அருள்கள் எண்ணிலடங்காதவை. அதன் பயன்களும் பலதரப்பட்டவை. இந்த அருள்களில் இஸ்லாம் என்பது நிகரில்லா அருளாகும். பிள்ளைப் பாக்கியம் அல்லாஹ் வழங்கும் பெரிய அருள்களில் ஒன்றாகும்.

இது பற்றி அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது ‘அல்லாஹ்வுக்கே வானங்களும், பூமியும் சொந்தமானது. அவன் நாடியதைப் படைக்கின்றான். தான் நாடுகின்றவனுக்கு பெண் பிள்ளைகளை கொடையாகக் கொடுக்கின்றான். நான் நாடுகின்றவனுக்கு ஆண் பிள்ளையை கொடையாகக் கொடுக்கின்றான். அல்லது ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சேர்த்தும் கொடுக்கின்றான். மற்றும் தான் நாடியவனை மலடாக ஆக்குகின்றான். நிச்சயமாக அவன் மிக அறிந்தவன். ஆற்றலுள்ளவன்’ (ஷூரா:49-50).

பிள்ளைகள் எமது வாழ்க்கைக்கு அழங்காரமாகும். இவர்கள் மூலம் வாழ்வில் நிம்மதியை சந்தோசத்தை தேடுகின்றோம். இவர்கள் வாழ்வை வளமாக்கும். வாழ்வில் ஏற்படும் பல்வேறு கஷ்டங்கள் பிள்ளைச் செல்வங்களைப் பார்க்கின்ற போது நீங்கி விடுகின்றது. ‘செல்வமும், பிள்ளைகளும் உலக வாழ்வின் அழங்காரங்களே’ என அல்குர்ஆன் கூறுகின்றது. (கஹ்ப்: 46).

பிள்ளைகள் அமானிதங்கள்

இறையருளாகக் கிடைக்கப்பெற்ற குழந்தைகள் எமக்கு அமானிதமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தந்தை தனது வீட்டுக்குப் பொறுப்பானவன். அவன் அதனைப் பராமரிப்பது பற்றி விசாரிக்கப்படுவான்….’ (புஹாரி, முஸ்லிம்).

உமர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் ‘ நீ உனது பிள்ளைக்கு பண்பாட்டைக் கொடுத்து வளர்ப்பீராக. அவனுக்கு என்ன ஒழுக்கத்தைக் கொடுத்தாய், எதனைக் கற்றுக் கொடுத்தாய் என நீ வினவப்படுவாய். மேலும் அவன் உனக்கு பணிவிடை செய்வது பற்றியும், உனக்கு கட்டுப்படுவது பற்றியும் வினவப்படுவான்’.

பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய பெற்றோரின் கடமைகள்

1. இறையன்பை வளர்த்தல்

பிள்ளைகளின் உள்ளங்களில் ஈமானிய பெறுமானங்களை பலப்படுத்த வேண்டும். மஹப்பதுல்லாஹ், மஹப்பதுர் ரஸூல் மற்றும் அல்குர்ஆனில் ஆசை வைக்கின்ற பிள்ளைகளாக அவர்கள் மாற வேண்டும். இது அவர்களது வாழ்வு சீராக அமைவதுடன் இஸ்லாத்தின் போதனைகளை பின்பற்றும் பிள்ளைகளாக அவர்களை மாற்றி விடும்.

இன்று மார்க்கத்தை விட்டு குறிப்பாக இளம் தலைமுறையை தூரமாக்குவதற்கான அனைத்து பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம். மார்க்க அடிப்படையில் வாழ்வதை பிற்போக்காகப் பார்க்கும் பலர் எமது சமூகத்தில் உள்ளனர்.

இதன் விளைவாக சமூகக் கட்டுக்கோப்பு சிதைவடைந்துள்ளது. மற்றும் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வாழும் நிலை தோன்றி சமூகத்திற்கும், நாட்டுக்கும் பயனற்ற பிரஜைகளாக அவர்கள் மாறிவிடுவார்கள்.

2. சிறந்த ஒழுக்கத்தை ஊட்டல்

இஸ்லாம் நல்ல பண்பாடுகளை பூர்த்தியாக்க வந்த மார்க்கமாகும். ஒழுக்கமில்லாத சமூகம் எப்போதும் குழப்பத்தில் வாழும். சுயநலம் மிகைத்து மனித நேயம் இல்லாது போகும். ‘ ஒரு தந்தை தனது பிள்ளைக்கு வழங்க முடியுமான சிறந்த ஒன்றாக பண்பாடு உள்ளது. ‘ (திர்மிதி) என நபி (ஸல்) அவர்கள் பண்பாட்டை போதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

உண்மையாக நடந்து கொள்ளல், வாக்கை நிறைவேற்றல், பொறுமை, தைரியம், பிறருக்கு உதவியாக இருத்தல், வெற்கம், நேரத்தின் உச்ச பயனைப் பெறல் போன்ற நல்ல பண்புகள் பிள்ளைகளிடம் வளர்க்கப்பட வேண்டும். அதே நேரம் இஸ்லாம் கண்டிக்கும் தீய பண்புகள் பிள்ளைகளிடம் வராமல் இருப்பதில் பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

3. பயனுள்ள அறிவு

பயனுள்ள அறிவைத் தேடுவதற்கு நாம் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாடசாலைக் கல்வியில் அவர்களது ஆர்வம் அதிகரிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பதற்கான அமைதியான, அழகிய சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறிய அளவிலாவது அவர்களுக்கு ஒரு வாசிகசாலை வீட்டில் இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள், சஞ்சிகைகளுடன் அவர்ளது உறவு அதிகரிப்பது அவசியம்.

இதன் மூலம் வாசிப்புப் பழக்கம் அவர்களின் நாளாந்த பண்பாக ஆகுவதற்கு வழியேற்படுத்தலாம். இதனால் கல்வியில் அவர்களது ஈடுபாடு அதிகரித்து அறிவைத் தேடும் சமூகமாக அவர்கள் ஆகிவிடுவார்கள். கல்வியில்லாத சமூகம் நாளை எப்படி சவால்களுக்கு முகம் கொடுத்து நிலைத்து நிற்பது?

4. உடல் வலிமை.

நோய்கள் தாராளமாக அதிகரித்து வரும் இக்காலத்தில் குறிப்பாக பிள்ளைகள் கடையுணவை விரும்புகின்றவர்களாக மாறி வருகின்றனர். பொதுப் பிரச்சினையாக உருவாகியுள்ள இந்நிலையில் இருந்து எமது இளந் தலைமுறையை பாதுகாப்பது சவாலாக மாறியுள்ளது.

இதற்கு தீர்வாக ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். சத்துள்ள உணவுகள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதன் மூலம் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இது அவர்களது கல்வி வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். இதனால் தான் ‘சிறந்த அறிவு சிறந்த உடலில் தான் காணப்படுகின்றது’ என அறிஞர்கள் கூறினார்கள்.

5. விளையாட்டு, மற்றும் ஓய்வு

ஆரம்ப காலங்களில் பிள்ளைகள் விளையாடுவதற்கான அதிகமான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொண்டார்கள். இன்று பாடசாலைக்கு வெளியில் நடாத்தப்படும் இதர வகுப்புகளினால் பிள்ளைகளுக்கு சரியான ஓய்வு கிடைப்பதில்லை. தமது ஆளுமை விருத்தியில் பங்களிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபட நேரம் இல்லாது இருக்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல.

விளையாட்டு, கலை அம்சங்களில் கவனம் செலுத்தாத சமூகம் மனித இயல்புக்கு மாற்றமாக நடப்பதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக மாறுவதற்கு விளையாட்டு, கலைப் அம்சங்களில் ஈடுபாடு இல்லாமை ஒரு காரணியாக இருக்கலாம்.

இலங்கையில் ஒப்பிட்டு ரீதியில் எமது சமூகம் இப்பகுதியில் ஓரளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சமநிலை கொண்ட ஆளுமையுள்ளவர்களாக எமது பிள்ளைகள் உருவாக வேண்டுமானால் இப்பகுதிக்கும் முக்கியத்துவம் இருத்தல் அவசியம். இது தொடர்பில் பெற்றோர், சமூகத் தலைமைகள் கவனம் எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

6. தீவிரவாத சிந்தனைகயை விட்டும் பாதுகாத்தல்

இன்று இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாத சிந்தனைகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதற்கு ஷரீஅத்தின் ஆதாரங்களைக் காட்டுகின்றனர். அதனை நோக்கி குறிப்பாக இளைஞர்களை தூண்டுகின்றனர். வாழ்வின் கஷ்டங்கள், இலக்குகளை சரியாக அறிந்து கொள்ளாவர்கள் இப்படிப்பட்ட சிந்தனைகளால் கவரப்படுகின்றனர். இதன் விளைவு மிகவும் பாரதூரமானது என்பதை அவர்கள் அறியாது செயற்பட முனைகின்றனர்.

இத்தகைய நிலையிலிருந்து நாம் எமது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களைத் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனை கொண்ட சிறந்த ஆளுமைகளுடன் சகவாசத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நாம் பிள்ளைகளை சரியான பாதையில் உருவாக்க முடியும்.

7. சமூகப் பணிகளில் ஈடுபடுத்தல்

பிள்ளைகள் எதிர்காலத்தில் சமூகத்திற்கும், நாட்டிற்கும் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டியவர்கள். அதன் மேம்பாட்டுக்காக உழைக்கக் கடமைப்பட்டவர்கள். இதற்காக அவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இவ்வகையில் சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட முடியும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாஈல் (அலை) அவர்களை புனித கஃபாவை நிர்மானிக்கும் பணியில் இணைத்துக் கொண்டார்கள். ஹிழ்ர் (அலை) அவர்களை சந்திக்கச் சென்ற நீண்ட பயணத்தின் தோழனாக யூஷஃ பின் நூன் என்ற இளைஞனை மூஸா (அலை) அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

ஹிஜ்ரத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் காணப்பட்ட அமானிதங்களை அலி (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எனவே இதற்கான வாய்ப்புக்கள் ஊர் மட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுவர்கள், இளைஞர்களின் இயலுமைகள், விருப்புகளுக்கு ஏற்ப அவர்கள் உரிய இடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக பிள்ளைகளிடம் சுய நம்பிக்கை. தலைமைத்துவ ஆற்றல் வளர்வதுடன், தேவையற்ற செயற்பாடுகளில் நேரத்தைக் கழித்து, வழிதவறிப் போவதில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

நமது பிள்ளை நமது பொறுப்பு

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் சிறந்தவர்களாக வர வேண்டும் என ஆசைப்படுகின்றோம். இதில் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் பண்புகளை ஆரம்பத்தில் பெற்றோர்கள் கடைபிடித்து ஒழுக வேண்;டும்.

பிறரை குற்றம் சுமத்தி பெற்றோர்கள் பொறுப்பில் இருந்து ஒரு போதும் நீங்க முடியாது. அடுத்தவர்கள் இது விடயத்தில் எமக்;கு ஒத்துழைக்கலாம். அவர்களது ஒத்தாசையை பெற்றுக் கொள்ளலாம். இதேநேரம் பிள்ளைகள், இளைஞர்களை நல்ல ஆளுமைகளாக உருவாக்கி எடுப்பதில் சமூகத்திற்கும் கடமை உள்ளது என்பதை மறக்க முடியாது.

லுக்மானுல் ஹகீம் தன் மகனுக்கு செய்த உபதேசம் இங்கு பெற்றோர்களின் அரவணைப்பு, பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் காட்ட வேண்டிய ஈடுபாடு, அதன் பொறுப்புணர்ச்சியை விளக்கப் போதுமானது.

2019ம் ஆண்டு ஸலாமா தின நிகழ்வுகள் ‘எமது பிள்ளை எமது பொறுப்பு’ எனும் கருப்பொருளில் நாட்டில் பல இடங்களிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தேசிய நிகழ்ச்சி காத்தான்குடியில் நடைபெறவுள்ளது. சரியாக பிள்ளைகள் உருவாக்கப்படும் போது குடும்பங்கள் மகிழ்ச்சியடையும். சமூகம் பயனடையும். நாடு வளம் பெறும். இது அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய காலத்தின் தேவையான பணியாக நாம் கருதுகின்றோம்.

Leave A Comment