முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியான முதன்மை ஆசிரியர் (பகுதி 18)

October 18, 2023
349 Views

– எம். எச். எம். நாளிர் –

பகுதி 18 …

  1. நல்லபிமாணம் : நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி இறங்கிய போது, புதிய அனுபவம் என்பதால் அதிர்ச்சியுற்றார்கள். அவ்வேளை அவர்களைத் தேற்றிய மனைவி கதீஜா (ரழி) அவர்கள் ‘அண்ணலே, இறைவன் மீது சத்தியமாகக் கூறுகிறேன். நீங்கள் மனங்கலங்கக் கூடிய விதமாக உங்களுக்கு எதுவும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில், நீங்கள் எல்லோரிடத்திலும் எப்பொழுதும் மிகுந்த இரக்கமுடையவர்களாக இருக்கிறீர்கள். எப்போதும் உண்மையே பேசுகிறீர்கள். அடுத்தவர் உடமைகளை உரியவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையோடும், நாணயத்தோடும் கொடுத்து விடுகிறீர்கள். இல்லை என்று சொல்லாமல் ஏழை எளியவர்களுக்கு எந்த நேரத்திலும் ஓடோடிச் சென்று உதவுகிறீர்கள். ஆதரவற்றோரை ஆதரித்து அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறீர்கள். சக மனிதர்களுக்கு தயவு காட்டி ஒத்துழைக்கிறீர்கள். அநீதி இழைக்கும் மக்களால் உங்களுக்கு நேரும் துன்ப துயரங்களைக் கூட இன்முகத்தோடு சகித்துக் கொள்கிறீர்கள். இப்படியான காரணங்களுடைய நல்லடியார் ஒருவருக்கு இறைவன் ஒரு போதும் மனநோவினை செய்ய மாட்டான். (சுலைமான் நத்வி – அழகிய முன்மாதிரி) எனக் கூறியமை மனைவியும், பொது மக்களும் அவரில் நல்லபிமானம் கொண்டிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

 

  1. சரியாக முடிவெடுத்தல் : அகழ்ப்போரின் பின்னர், மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் கைபரில் குடியேறினர். இதனால் மதீனாவுக்கு வடக்கிலும், தெற்கிலும் எதிரிகள் தோன்றிவிட்டார்;கள். வடக்கிலிருந்து யூதர்களும், தெற்கிலிருந்து குறைஷியரும் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்தால் முஸ்லிம்கள் இருமுனைத் தாக்குதலுக்குள்ளாக வேண்டியேற்படும், இந்நிலையில் ஒரு பகுதியாரை தமது பக்கம் சார வைப்பதன் மூலம் நம்மைக் காத்துக் கொள்ள முடியுமென நபி (ஸல்) அவர்கள் தீர்மானித்தார்கள். ஏற்கனவே, உடன்படிக்கை செய்து முடித்துக் கொண்ட யூதர்களை இனி நம்ப முடியாது. எனவே குறைஷியருடன் ஓர் உடன்படிக்கைக்கு வருவதே அறிவுடைமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள். இதனை எவரிடமும் வெளிப்படுத்தவில்லை.

இஹ்றாம் உடையுடன், முஸ்லிம்கள் உம்றாவுக்காகப் புறப்பட்டனர். இதற்கு முன்னர் மூன்று முறை முஸ்லிம்களுடன் போராடி தோல்வியுற்ற குறைஷியர், முஸ்லிம்களை மக்காவுக்குள் அனுமதிப்பார்களா? எனவே ஹுதைபியாவில் தங்கினார்கள். நாம் போராட வரவில்லை; உம்றாவுக்கே வந்திருக்கிறோம் என செய்தி அறிவித்தும் குறைஷியரின் உள்ளம் நெகிழவில்லை. எனினும் யாத்திரீகர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற களங்கம் தமக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்தது. எனவே உடன்படிக்கை ஒன்றுக்கு முன்வந்தார்கள்.

உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்களுக்குப் பாதகமாக தெரிந்ததால் அதற்கு ஸஹாபாக்கள் இணங்கவில்லை. ‘நான் அல்லாஹ்வின் தூதர்; அவனது உத்தரவின் பிரகாரம் நடக்கிறேன்’ எனக் கூறி தனது முடிவில் உறுதியாக நின்றார்கள். ஈராண்டுகள் நிறைவடைய முன்பே குறைஷியர் உடன்படிக்கையை மீறியதால் தெற்கே மக்காவையும் வடக்கே கைபரையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது.

  1. மன தைரியம் : நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தை எப்படியாவது நிறுத்த வேண்டுமென்ற விடயத்தில் குறைஷித் தலைவர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டார்கள். உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் அவர்களை நேரடியாக இம்சித்தார்கள். போரில் சென்று பிரசாரத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்கள். நபிமார்களின் காவலர் போன்றிருந்த அபூதாலிபை பலமுறை சந்தித்து அவர் மூலமாக பிரசாரத்தை தடை செய்ய முயற்சித்தார்கள். எதற்கும் மசியாத அபூதாலிபிடம், இறுதியாக ஒரு முறை மிக வன்மையாக எச்சரிக்கை விடுத்தார்கள்.

அவர்களது எச்சரிக்கையால் சடைந்து போன அபூதாலிப், மகனை அழைத்தார். ‘எனது வயோதிபத்தை முன்வைத்து கேட்கிறேன். குறைஷியரின் மிரட்டல் எல்லை மீறுகிறது. உனது பிரசாரத்தை சிறிது காலமாவது தளர்த்த முடியுமா?’ எனக் கெஞ்சிக் கேட்டார். அபூதாலிபும், தன்னைக் கைவிட்டு விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்ட போதிலும் உறுதியாகக் கூறினார்கள். ‘பெரிய தந்தையே, குறைஷியர் சூரியனையும், சந்திரனையும் எனது கைகளில் கொண்டு வந்து வைத்தாலும் நான் எனது பிரச்சாரத்தை நிறுத்திவிடப் போவதில்லை. வெற்றி பெறும் வரை நான் இதனைக் கைவிட மாட்டேன். அவர்கள் செய்வதைச் செய்யட்டும்’ எனப் பதிலளித்து கண்கலங்கிய நிலையில் வெளியேறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மன தைரியத்தையும் உறுதிப்பாட்டையும் நன்கு புரிந்து கொண்ட அபூதாலிப், அவர்களை அழைத்து, ‘சகோதரர் மகனே, நீ விரும்பியதைச் செய்யலாம். எந்த நிலையிலும் நான் உன்னை எவரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ எனக் கூறி சில கவிதைகளையும் பாடிக்காட்டினார்.

தொடரும்…

Leave A Comment