மண்ணறையில் மனித வாழ்வு

December 10, 2024
231 Views

கலாநிதி அலி முஹம்மது அல் சல்லாபி
சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர்

தமிழில்: அஷ்.ஷெய்க் அம்ஜத் ஜூனைத்

பர்சகினுடைய (மண்ணறை) வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இடையே உள்ள ஒரு இடைநிலை வாழ்க்கையாகும். மறுமையின் ஆரம்ப இல்லம் அதுவே. அது ஒன்றில் இன்பங்கள் நிறைந்ததாகவோ அல்லது வேதனைகளின் உறைவிடமாகவோ காணப்படும். குறித்த வாழ்க்கையானது மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டதிலிருந்து ஆரம்பித்து அவன் மீள உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு மறுமை நாள் நிகழும் வரை தொடரும். இந்த வாழ்க்கையில் என்ன இடம்பெறுகிறது என்பது குறித்து தெளிவாக அறியப்படவில்லை. ஏனெனில், அது குறித்த அறிவு சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் அறிவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்வு குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ (المؤمنون 100)

அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு (பர்சக்) திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:100)

பர்சகில் (மண்ணறையில்) வாழ்க்கையொன்று இருக்கிறது என்பதை அல் குர்ஆன் மற்றும் சுன்னா வசனங்கள் உறுதி செய்துள்ளன. பொதுவாக இந்த வாழ்க்கையானது நாம் அறிந்து வைத்துள்ள இவ்வுலக வாழ்க்கைக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

அல்லாஹ் மனித வாழிடங்களை மூன்றாக அமைத்துள்ளான்:

1. உலக வாழிடம் (தாருத் துன்யா)
2. பர்ஸகுடைய வாழிடம் (தாருல் பர்சக்)
3. நிலையான வாழிடம் (தாருல் கரார்)

இம் மூன்று வாழிடங்களுக்கும் அவற்றுக்கே உரிய பிரத்தியேகமான ஒழுங்குகளையும் சட்டங்களையும் வல்ல அல்லாஹ் அமைத்து வைத்திருக்கிறான்.

அல்லாஹ் மனிதனில் உடல் மற்றும் உயிர் (ஆன்மா) என்ற இரண்டையும் பொறுத்தியுள்ளான். உலக வாழிடத்தின் சட்டங்களை உடலுக்கும் உயிருக்கும் பொருந்தும் வகையில் அமைத்துள்ளான். அதே போன்று, பர்சகினுடைய சட்டங்களையும் உயிருக்கும் உடலுக்கும் பொருந்தும் வகையில் அமைத்து வைத்துள்ளான்.

மண்ணறை (கப்ரு) என்பது மறுமையின் முதல் வீடாகும்

பர்சகுடைய வாழ்க்கை என்பது மனிதன் தனது மண்ணறையில் குடியமர்த்தப்படும் சந்தர்ப்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது. இந்தவகையில், மண்ணறை என்பது மறுமைக்கான முதல் தங்குமிடமெனக் கொள்ளப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

إن القبر أول منزل من منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينجُ منه فما بعده أشد منه» [الترمذي رقم (2461)]، وقال رسول الله: «ما رأيت منظرًا قط إلا القبر أفظع منه». [الترمذي رقم (2308)]

மண்ணறை (கப்ரு) என்பது மறுமைக்கான தங்குமிடங்களில் முதல் தங்குமிடமாகும். அதில் மனிதன் தப்பித்துக் கொள்வானாயின் அதன் பிறகுள்ளவை அனைத்தும் அவனுக்கு மிக இலகுவானவையாக அமையும். அவன் அதிலே தோல்வியடைவானாயின் அதன் பிறகுள்ளவை அனைத்தும் அவனுக்கு மிகவும் கடினமானவையாகவே இருக்கும் (திர்மிதி: 2461). அல்லாஹ்வின் தூதரவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்: மண்ணறையை விட மிகப்பயங்கரமான காட்சியை நான் கண்டதே இல்லை (திர்மிதி 2308).

கப்ருடைய சுகமும் வேதனையும் எனக் குறிப்பிடும் போது அது பர்சகுடைய சுகமும் வேதனையும் என்றே கொள்ளப்பட வேண்டும். இது உலக மற்றும் மறுமை வாழ்க்கைக்கு இடைப்பட்;ட ஒன்றாகும்.

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏ لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏ (المؤمنون 99-100)

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக! என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு (பர்சக்) திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)

பர்சகினுடைய வாழ்க்கை என்பது உலக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கும். அதிலே உயிர் உடலுடன் தொடர்புபட்டதாக இருக்கும். சில வேளைகளில் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். இன்னும் சில சந்தர்ப்பங்களில் உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். கேள்வி கணக்கு கேட்கப்படும் சந்தர்ப்பம், சுகங்கள் அருளப்படும் மற்றும் வேதனைகள் செய்யப்படும் சந்தர்ப்பங்கள், முஸ்லிம் ஒருவர் அவர் மீது ஸலாம் கூறும் சந்தர்ப்பம் போன்றனவற்றை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். இந்த வாழ்க்கையின் யதார்த்தங்களை அல்லாஹ் அன்றி வேறு எவரும் அறிய மாட்டார்கள்.

ஒவ்வொரு முஸ்லிமும், அவர் நல்லவராக இருப்பினும் பாவியாக இருப்பினும், இந்த பர்சகினுடைய நிலையைக் கடந்து சென்றாக வேண்டும். அதிலே அவர் ஒன்றில் சுகமளிக்கப்பட்டவராகவோ அல்லது வேதனைக்கு உட்படுத்தப்பட்டவராகவோ காணப்படுவார். இந்த வாழ்க்கையானது அல்லாஹ் அவரை உயிர் கொடுத்து எழுப்பும் நாள் வரை தொடரும்.

மரணித்த ஒருவர் தனது முதல் நாள் இரவை மண்ணறையில் எவ்வாறு கழிப்பார்?

மரணித்த மனிதரின் முதல் நாள் இரவு என்பது அவரது பர்சகினுடைய வாழ்வின் முதல் நாளாகும். மனிதன் தனது மண்ணறையிலே கழிக்கும் முதல் நாளானது பல நிகழ்வுகளைக் கொண்டதாகும். மனிதன் அந்த நாளிலே மண்ணறையின் சோதனைக்கும் இரண்டு மலக்குகளின் கேள்வி கணக்கிற்கும் உட்படுத்தப்படுவான். அங்கு அவன் தன்னுடைய இரட்சகன், மார்க்கம், நபி பற்றி விசாரிக்கப்படுவான். உண்மை முஸ்லிம் உறுதியுடன் தெளிவாக அக்கேள்விகளுக்கு எனது இரட்சகன் அல்லாஹ், எனது மார்க்கம் இஸ்லாம், முஹம்மத் (ﷺ) அவர்கள் எனது நபி எனவும் பதில் கூறுவார். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

عن أنس بن مالك، رضي الله عنه، قال: قال النبيّ ﷺ: «العبد إذا وضع في قبره، وتولّى وذهب أصحابه حتى إنه ليسمع قرع نعالهم، أتاه ملكان، فأقعداه، فيقولان له: ما كنت تقول في هذا الرجل محمد، صلى الله عليه وسلم؟ فيقول: أشهد أنه عبد الله ورسوله، فيُقال: انظر إلى مقعدك من النار، أبدلك الله به مقعدًا من الجنة، قال النبي، صلى الله عليه وسلم: فيراهما جميعًا، وأما الكافر – أو المنافق – فيقول: لا أدري، كنت أقول ما يقول الناس، فيُقال: لا دريت ولا تليت، ثم يضرب بمطرقة من حديد ضربة بين أذنيه، فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين (الصحيحين).

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் நபி (ﷺ) அவர்கள் குறிப்பிட்டதாக அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் என்ற இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது: மண்ணறையிலே அடியானை வைத்துவிட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்கிறபோது, அவர்களது பாதணிகளின் சத்தங்களைக் கூட குறித்த அடியான் செவிமடுப்பான். இரண்டு மலக்குகள் அவரிடத்தில் வந்து அவரை அமரச் செய்து அவரிடம் முஹம்மத் (ﷺ) அவர்களைக் காண்பித்து, இவரைப் பற்றி நீர் என்ன கூறுகிறீர்? எனக் கேட்பார்கள். அதற்கு அவர்: அவர் அல்லாஹ்வின் அடியார் எனவும் அவனது தூதர் எனவும் சாட்சியம் கூறுகிறேன் என்பார். பின்னர் அவரிடம் பின்வருமாறு கூறப்படும்: நரகில் உன் தங்குமிடத்தைப் பார். அல்லாஹ் அதனை சுவனத்தின் தங்குமிடங்களில் ஒன்றாக உனக்கு மாற்றித் தந்துள்ளான். மேலும் நபிகளார் (ﷺ) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அவை இரண்டையும் அவர் காண்பார். இறை நிராகரிப்பாளன் அல்லது நயவஞ்ஞகனைப் பொருத்தவரை அவன் பின்வருமாறு கூறுவான். எனக்குத் தெரியாது. மக்கள் கூறுவதையே நானும் கூறி வந்தேன். பின்னர் ‘நீ சத்தியத்தை அறிந்திருக்கவும் இல்லை, வேதத்தை வாசிக்கவும் இல்லை’ என அவனிடம் கூறப்படும். பின்னர் அவனுடைய இரு காதுகளுக்கும் நடுவே இரும்பிலாலான சுத்தியலால் அடிக்கப்படும். அவன் கோரமாக சத்தமிடுவான். அந்த சத்தத்தை மனித மற்றும் ஜின் இனத்தவர்களை தவிர்ந்த மற்ற அனைத்தும் செவிமடுக்கும்.

மண்ணறையின் சோதனை என்பது அனைத்து மனிதர்களும் எதிர்கொள்ளும் பொதுவான ஒன்றாகும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டோரே அதிலிருந்து விதிவிலக்குப் பெறுவர். ரஸூல்மார்கள், நபிமார்கள் அதே போன்று இறைபாதையில் மரணித்த ஷஹீத், அல்லாஹ்வின் பாதையிலே தன்னைப் பிணைத்து மார்க்கத்தின் கண்ணியங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணித்தோர் போன்றோரை அல்லாஹ் அத்தகைய சோதனையிலிருந்து பாதுகாக்கிறான்.

குழந்தைகள் உள்ளிட்ட பொறுப்புக்கள் சாட்டப்படாதோர், முன்கர் நகீர் என்ற இரு மலக்குமார்களினதும் கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படுதல் தொடர்பாக அறிஞர்கள் பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சிலர் பொதுவான ஆதாரங்களை மையமாக வைத்து அவர்கள் கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்னும் சிலர் அவர்கள் பொறுப்புக்கள் சாட்டப்படாதவர்கள் என்ற வகையில் கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடுகின்றனர்.

சுகமளித்தல் வேதனை கொடுத்தல் என்பன மனிதனின் உயிருக்கு வழங்கப்படுவது போலவே அவை சில சந்தர்ப்பங்களில் உடலோடு தொடர்புபட்டனவாகவும் அமையும் என அதிகமான அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இறை நிராகரிப்பாளர்கள் மீது வழங்கப்படும் வேதனையானது தொடர்ச்சியாக இடம் பெறும். முஃமீன்களான விசுவாசிகளைப் பொருத்தவரை அவர்களுக்குரிய வேதனையானது குறித்த நபரின் பாவங்களின் அளவுகளுக்கேற்ப அமையும். முஃமீன்களுக்கு வழங்கப்படும் சுகங்களைப் பொறுத்தவரை அவை வெளிப்படையானவையாகவும் தொடர்ச்சியானவையாகவும் காணப்படும். அதனடிப்படையில் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்த அனைத்தும் வழங்கப்படும்.

மண்ணறையின் சுகங்கள்

அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ (فصلت 30)
நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ் தான்’ என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து ‘ நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல் குர்ஆன் 41:30)

முஃமின்கள் மண்ணறையின் சுகங்களை அனுபவிப்பார்கள். இந்தவகையில், சுவனத்தின் வாயில்களில் ஒரு வாயில் அவர்களுக்காக திறந்து விடப்படும். அவர்களது மண்ணறைகள், அவற்றின் நெறுக்கத்தையோ அவற்றின் மோசமான நிலைகளையோ அவர்கள் உணராத வகையில் அவை அவர்களுக்கு விசாலமாக ஆக்கிக் கொடுக்கப்படும். அவர்களது கண்களைக் குளிர்ச்சியடையச் செய்து அவர்கள் திருப்திப்படும் அமைப்பில் சுவனத்து இன்பங்கள் அவர்களை வந்தடையும். அல்லாஹ் அவர்களுக்கு அருளிய இன்பங்களைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

மண்ணறையின் வேதனைகள்

முஃமின்களில் உள்ள பாவிகளைப் பொருத்தவரையில் அவர்கள் மீதான வேதனையானது வேறுபட்டுக் காணப்படும். அவர்களில் சிலரை அல்லாஹ் மன்னித்து அவர்களுக்கு கப்றிலே வேதனையளிக்க மாட்டான். அவர்களில் சிலரின் பாவங்கள் சிறியனவாகக் காணப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றின் அளவுகளுக்கேற்ப அவர்கள் வேதனை செய்யப்படுவர். பின்னர் அவர்கள் மீதான வேதனை நிறுத்தப்படும். உலகில் வாழ்வோரின் பிரார்த்தனைகள், ஸதகாக்கள் (நன்கொடைகள்), பாவ மன்னிப்பு தேடல்கள், பகரமான ஹஜ்ஜூகள் போன்ற நற்காரியங்கள் காரணமாக குறித்த வேதனை துண்டிக்கப்படவோ அல்லது இடைநிறுத்தப்படவோ முடியும். இன்னும் சிலரின் பாவங்கள் பாரியனவாகக் காணப்படலாம். அவர்களுக்கான வேதனை தொடர்ச்சியாக வழங்கப்படும். இதனை நபிகளார் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

بينما رجل يجر إزاره من الخيلاء، خسف به، فهو يتجلجل في الأرض إلى يوم القيامة (البخاري رقم 3485)

ஒரு மனிதன் தனது ஆடையை பெருமையோடு இழுத்துக் கொண்டு செல்கின்ற போது அவன் பூமியிலே மூழ்கடிக்கப்படுகிறான். அவன் மறுமை நாள் வரை பூமியிலே இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பான். நூல் புகாரி எண் 3485)

இறைநிராகரிப்பாலன் அல்லது நயவஞ்ஞகனைப் பொருத்தவரை அவர்களுக்கான வேதனை மறுமை வரை தொடர்ச்சியாக வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ (غافر 46)

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப் படுவார்கள். மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘பிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்). அல்குர்ஆன் 40:46)

وفي حديث البراء بن عازب: «ثم يُفتح له باب إلى النار، فينظر إلى مقعده فيها حتى تقوم الساعة». [مسند أحمد رقم (15834)]

அல் பராஃ பின் ஆதிப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலே பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: பின்னர் அவன் முன்னால் நரகத்திற்கான வாயில் ஒன்று திறந்து விடப்படும். அதிலிருந்து மறுமை நாள்வரை அவன் தன் தங்குமிடத்தை பார்த்துக் கொண்டே இருப்பான். (முஸ்னத் அஹ்மத் 15834).

மண்ணறையின் சுகங்கள் மற்றும் வேதனைகளின் பின்னால் உள்ள நியாயங்கள்
• தூய முஃமின்களான அடியார்களுக்கு பர்சகுடைய வாழ்க்கையில் சுகம் அனுபவிக்கச் செய்வதில் அவர்கள் மீதான சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் அருளை வெளிப்படுத்தல்.
• பாவிகளான நிராகரிப்பாளர்களையும் பொய்யர்களையும் வேதனை செய்வதிலும் அவர்களை இழிவுபடுத்துவதிலும் உள்ள அல்லாஹ்வின் சக்தியை வெளிப்படுத்தல்.
• கோல் சொல்லுதல் சிறுநீர் கழித்து சரி வர சுத்தம் செய்யாதிருத்தல் போன்ற பிரத்தியேகமான தண்டனைகள் உள்ள பாவங்களில் ஈடுபடுவதையிட்டு எச்சரிக்கை விடுத்தல்.

Leave A Comment