– அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
மன இணக்கம் :
திருமண வாழ்வில் இணையவுள்ள ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இடையில் மன இணக்கம் இருப்பது மிக முக்கியமானது. ஏனெனில் இருவருக்கும் இடையிலான இயல்புகள் ஒத்துவராத போது அவர்கள் குடும்ப வாழ்வில் நீண்ட காலம் இணைந்து வாழ மாட்டார்கள். இப்பிண்ணனியிலேயே திருமணம் முடிக்க முன்னர் ஒருவர் மற்றவரை அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது என இஸ்லாம் கூறுகின்றது.
இவ்விடயத்தை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன. முஈரா இப்னு ஷூஃபா (ரழி) அவர்களுக்கு ஒரு பெண்ணை திருமணம் பேசினார்கள். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நீ அப்பெண்ணைப் பார். அது உங்கள் இருவருக்கும் இடையில் அன்பை நிலைப்படுத்த காரணமாய் அமையும் எனக் கூறினார்கள். (திர்மிதி, இப்னு மாஜா)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘உங்களில் ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் பேசினால் அவளைத் திருமணம் முடிக்கத் தூண்டுதலாக உள்ளதை பார்க்க முடியுமாயின் பார்த்துக் கொள்ளட்டும்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். நான் ஒரு அடிமைப் பெண்ணை திருமணம் பேசினேன். நான் மறைவாக இருந்து அவளைப் பார்த்தேன். இவ்விடயம் அவளைத் திருமணம் முடிக்க என்னைத் தூண்டியது. பின்னர் அவளை நான் திருமணம் செய்து கொண்டேன்’ (அபூ தாவூத்).
ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்க எதிர்பார்ப்பவன் அவளைப் பார்ப்பது ஆகுமானது என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது என இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
மேற்கூறப்பட்ட நபிமொழிகளின் அடிப்படையில் ஹனபி, மாலிகி, ஷாபிஈ மத்ஹபினர் மற்றும் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சில அறிஞர்கள் இவ்வாறு பார்ப்பது வரவேற்கத்தக்கது (மன்தூப்) எனக் குறிப்பிடுகின்றனர்.
எமது நடைமுறையைப் பார்க்கும் போது ஆண் தரப்பினரே பெண்ணைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகமாகப் பெற்றுக் கொள்கின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. இச்சந்தர்ப்பம் பெண்களுக்கு வழங்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது. அமைதி நிறைந்த ஸ்திரமான குடும்ப வாழ்க்கைக்கு இருவரதும் மன இணக்கப்பாடு மிக முக்கியமானது.
பெற்றோர் மாத்திரம் ஆணைப் பார்த்து தனது மகளுக்கு மாப்பிள்ளையைத் தீர்மானிக்கும் நடைமுறையில் மாத்திரம் சுறுங்கியிருக்கக் கூடாது.
எனவே பெண் தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்கின்ற போது அவனைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் பெற்றோர், பாதுகாவலர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
திருமணம் முடித்து வாழவிருக்கும் அவர்கள் இருவரது மன இணக்கத்தை ஷரீஆவின் வரையறைகளைப் பேணி, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கான வாய்ப்பு இருவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் இருவரும் தமக்குப் பொறுத்தமான துணையைத் தெரிவு செய்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது. இல்லாவிட்டால் மன இணக்கமில்லாத இருவர் குடும்ப வாழ்வில் இணைவதன் மூலம் பல்வேறு முரண்பாடுகள் தோன்றி, இறுதியில் விவாகரத்தில் வாழ்க்கை முடிந்து விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.