பரக்கத்தை அழிக்கும் ஒன்பது காரணிகள்

June 10, 2026
93 Views

பரகத் நிறைந்த வாழ்வு – சில வழிகாட்டல்கள் என்ற தொடர் உரை நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சியாக ‘பரக்கத்தை அழிக்கும் ஒன்பது காரணிகள்’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் 18-05-2026 தினத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்…

 

பரக்கத்தை அழிக்கும் ஒன்பது காரணிகள்

இஸ்லாம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் வழிகாட்டுகிறது. குறிப்பாக, நம் வாழ்வில் பரக்கத்தை எவ்வாறு பெறுவது, அதனை எவ்வாறு பேணுவது என்பதற்கு தெளிவான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. பரக்கத்தை இழப்பதற்கான காரணங்களையும் அல்லாஹுத்தஆலா நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான்.

ஹலாலான உழைப்பின் மூலம் நாம் பெறும் பரக்கத், நமது சில செயல்களின் காரணமாகக் குறைந்துவிடுகின்றது அல்லது முற்றிலுமாக இல்லாமலும் போய்விடுகின்றது. அவ்வாறு பரக்கத்தை அழிக்கும் காரணிகளில் பிரதானமானவற்றை இங்கு காணலாம்.

1. ஹராமான வழியில் சம்பாதிப்பது:

ஹலாலான உழைப்பில் அல்லாஹ் பரக்கத்தையும் மனநிறைவையும் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் ஹராமான வழியில் சம்பாதிப்பதில் பரக்கத் இல்லை. அது லஞ்சமாக, வட்டியோடு கூடிய வியாபாரமாக, அல்லது திருட்டுப் போன்ற பாவச் செயல்களாக இருக்கலாம். எவன் இஸ்லாம் தடுத்த ஹராமான வழியில் சம்பாதிக்கின்றானோ, அவனது வருமானத்தில் பரக்கத் இருக்காது என இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

புகாரியில் வரும் ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “தனக்கு உரித்தான செல்வத்தை எடுத்துக்கொள்பவனுக்கு அதில் பரக்கத் ஏற்படுகிறது. ஆனால், தனக்கு உரிமையில்லாத செல்வத்தை அநியாயமாக எடுத்துக் கொள்பவனின் உதாரணம், சாப்பிட்டும் திருப்தியடையாத மனிதனுக்கு ஒப்பாகும்.” எனவே, ஹராமின் மூலம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது ஒருபோதும் திருப்தியைத் தராது.

 

2. வியாபாரத்தில் பொய் சொல்வதும், குறைகளை மறைப்பதும்:

ஹகீம் இப்னு ஹிஸாம் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: “கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இரு தரப்பினரும் பிரியும் வரை அவர்களுக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ள தெரிவு உள்ளது. அந்த இரு தரப்பினரும் உண்மையாக நடந்து கொண்டால், உண்மையாகப் பேசினால், அல்லாஹ் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத்தை ஏற்படுத்துகிறான். ஆனால் அவர்கள் மறைத்துப் பொய் சொன்னால், அந்த வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்.” (புஹாரி, முஸ்லிம்)

 

3. பாவங்கள் மற்றும் குற்றங்கள்:

தக்வா மூலம் நாம் அல்லாஹ்வின் அருளைப் பெறுகிறோம். அதற்கு மாறாக, நாம் பாவங்களுடன் வாழ்ந்தால், அல்லாஹ் நம் ரிஸ்கில் உள்ள பரக்கத்தைத் தடுத்து விடுகிறான். “மனிதன் தன் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக, தரையிலும் கடலிலும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது” (அல்குர்ஆன்) எனும் வசனம் இதை உணர்த்துகிறது. நம் பாவங்களின் காரணமாகவே மழை தடைபடுகிறது, விளைச்சல் குறைகிறது, செல்வத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அதிகமாக இஸ்திஃபார் (பாவமன்னிப்புத் தேடுதல்) செய்ய வேண்டும்.

 

4. வட்டி கொடுக்கல் வாங்கல்:

வட்டி என்பது சமூகத்தின் பரக்கத்தை அழிக்கும் மிகக் கொடிய வழியாகும். அல்குர்ஆன் கூறுகிறது: “அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கிறான்.” (சூரதுல் பகரா:276) இதற்கு இமாம்கள் விளக்கமாகக் கூறுகிறார்கள்: வட்டியோடு சம்பந்தப்படுபவனின் பணத்தில் பரக்கத் இல்லாமல் போய்விடும்; அவன் கையில் பணம் இருந்தாலும் அதன் மூலம் பயன்பெற மாட்டான்; அவனை இறுதியில் வறுமை அடையும்; மக்களின் இகழ்ச்சிக்கும் சாபத்திற்கும் உள்ளாவான். வட்டி ஒருபோதும் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வல்ல.

 

5. பதுக்கல் வியாபாரம்:

சந்தைக்குத் தேவையான பொருட்களை, விலை ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு பதுக்கி வைப்பது இஸ்லாம் தடுத்த பெரும் பாவமாகும். உமர் (ரலி) அவர்கள், மக்களின் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்தவர்களைக் கண்டித்தார்கள். அத்தகையவர்களுக்கு அல்லாஹ் இரண்டு தண்டனைகளைத் தருகிறான்: வியாபாரம் நஷ்டமாகிப் போதல், அல்லது குஷ்டம் போன்ற நோய் ஏற்படுதல்.

 

6. ஸகாத் கொடுக்காமல் இருப்பது:

ஸகாத் என்பது ஏழைகளின் உரிமையாகும். அதைக் கொடுக்காதவர் தன் செல்வத்திலிருந்து பரக்கத்தை அழித்துக் கொள்கிறார். இப்னு மாஜாவில் வரும் ஹதீஸில், ஸகாத் கொடுக்காத சமூகத்திற்கு வானத்திலிருந்து மழை தடைப்பட்டுவிடும்; விளைச்சல் குறையும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

 

7. உறவுகளைத் துண்டித்தல்:

குடும்ப உறவுகள், இரத்தப் பந்தங்களைப் பேணி வாழ்வது ஆயுளிலும், ரிஸ்கிலும் பரக்கத்தைத் தருகிறது. உறவுகளைத் துண்டித்து வாழ்பவனின் வாழ்வாதாரத்திலும், உடல் நலத்திலும் பரக்கத் இருக்காது. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், உறவைத் துண்டித்து வாழ்பவன் இருக்கும் சபையில் வானத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்கள்.

 

8. அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி செலுத்தாமை:

அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்கா அருள்களை வழங்கியுள்ளான். நன்றியுடன் வாழ்ந்தால், அவன் மேலும் அதிகமாகத் தருகிறான். ஆனால் நன்றி செலுத்தாமல், அவன் அருள்களை நிராகரித்து வாழ்ந்தால், அங்கு பரக்கத் இல்லாமல் போய்விடும். அல்குர்ஆன் மக்கா மக்களின் உதாரணத்தைக் கூறுகிறது: பாதுகாப்பும், செழிப்புமாக இருந்த அவர்கள், நன்றி கெட்டவர்களானதால், பசியையும் அச்சத்தையும் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

 

9. பொறாமை (ஹசத்):

அல்லாஹ் ஒருவருக்கு வழங்கிய செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுவது, அந்தச் செல்வத்தின் பரக்கத்தை அழித்துவிடும். சூரதுல் கஃபில் குறிப்பிடப்பட்ட இரு தோழர்களின் கதையில், அதிகச் செல்வம் கொண்டவன், அதைக் கண்டு பெருமைப்பட்டு, தன் எல்லாம் வல்லமையை நம்பியதால், அவனது தோட்டம் அழிந்தது. பொறாமை என்பது செல்வத்தை மட்டுமல்ல, அதன் வளத்தையும் அழிக்கும் ஒரு நோயாகும்.

 

முடிவுரை:

எனவே, அன்புச் சகோதரர்களே, நாம் மேற்கூறப்பட்ட ஒன்பது காரணிகளையும் விளங்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்கு உண்மையாகப் பயந்து, பாவங்களை விட்டு ஒதுங்கி, கடமைகளை முறையாகச் செய்வதன் மூலம், நம் செல்வத்திலும் வாழ்விலும் பரக்கத்தைப் பேணிக் காக்கலாம். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் மன நிம்மதியின்றி வாடுவதற்கும், குறைவாக சம்பாதிப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கும் முக்கிய காரணம் இந்தக் கண்ணுக்குத் தெரியாத ‘பரக்கத்’ எனும் பொக்கிஷமேயாகும்.

Leave A Comment